நேஷ்வில்: பொங்கல் விழா
பிப்ரவரி 13, 2016 அன்று நேஷ்வில் (டென்னசி) நகரின் ஸ்ரீகணேசர் கோவில் வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. சுமார் 400க்கும் மேலானோர் விழாவில் கலந்துகொண்டனர். பெண்கள் பங்கேற்ற சர்க்கரைப் பொங்கல் போட்டியில் வெற்றிபெற்றவர் 'பொங்கல் ராணி' ஆகத் தேர்வு செய்யப்பட்டார். சிறுவர்களுக்கான ஓவியப்போட்டியில் 3 முதல் 14 வயதுக்குட்பட்ட 37 பேர் பங்கேற்றனர். நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 'ஹீரோ' என்ற கருத்து தரப்பட்டிருந்தது. சில குழந்தைகள் தங்கள் அம்மா, அப்பாவையே ஹீரோவாக வரைந்தது நெகிழ்ச்சியைத் தந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் கலைநிகழ்ச்சி ஆரம்பமானது. சிறுவர்கள், பெரியவர்கள் பங்கேற்ற நடனங்கள், பாடல்கள் சுமார் நான்கு மணிநேரம் நீடித்தது. ஜோடி விளையாட்டில் 8 ஜோடிகள் பங்கேற்றனர். நடிகை கஸ்தூரி நெறிப்படுத்தி நடத்தினார். 'மேடையில் முத்தம்' என்ற பிரிவு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், வேறுவிதமாக முடித்ததும் சிரிப்பலையாக மாறியது.

முன்னதாக டென்னசி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னை வெள்ள நிவாரண நிதியான 20,000 டாலர் தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் உதவும் கரங்கள் மூலம் நிவாரணப்பணிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பேருதவி புரிந்த கேரளா அசோசியோஷன் ஆஃப் நேஷ்வில், ஜெகநாத் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா அமைப்புகள் பொங்கல் விழாவில் கவுரவிக்கப்பட்டன. தலைவர் ராஜ்குமார் சுபாஷ், செயலாளர் கோபி சுந்தரேசன், துணைச்செயலாளர் ராஜாராம் பழனிசாமி, பொருளாளர் சீதாராமன் ராஜேந்திரன் தலைமையில் தன்னார்வத் தொண்டர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com