பாயசம் என்றால் பருப்புப் பாயசம், அரிசிப் பாயசம், தேங்காய்ப் பாயசம் என்பதுதான் நமது நினைவுக்கு வரும். இந்த நவராத்திரிக் குச் சில புதுவகைப் பாயசங்களைச் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்யலாம் வாருங்கள்.
பறங்கிப் பாயசம்
தேவையான பொருட்கள்
பறங்கித்துண்டங்கள் (தோல் சீவி நறுக்கியது) - 20 இனிப்புச் சேர்க்காதசுண்டிய (evaporated) பால் - 2 கிண்ணம் சர்க்கரை/நாட்டுச் சர்க்கரை/வெல்லப் பொட - 1/2 கிண்ணம் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சைப் பழம் - சிறிதளவு ஏலக்காய்ப்பொடி - 1/8 தேயிலைக்கரண்டி
செய்முறை
பறங்கித் துண்டங்களைக் குக்கரில் இரண்டு விசில் வரும் வரையோ அல்லது நுண்ணலையிலோ (Microwave) நன்கு வேக வைக்கவும். ஆறிய பின்னர் மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். சர்க்கரை யையும் இதனுடன் பின்னர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி அடுப்பில் வைத்து, சில நிமிடங்கள் கொதித்த பின்னர், பால் சேர்த்து ஒன்று சேர கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி வறுத்த முந்திரிப் பருப்பு, உலர் திராட்சைப் பழம், ஏலப்பொடி தூவிச் சூடாகவோ, குளிரவைத்தோ அருந்தலாம்.
பின்குறிப்பு:
இனிப்பூட்டிச் சுண்டிய பால் (sweetened condensed milk) சேர்த்துச் செய்தால் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.
இதைப் போலவே புடலங்காய், வெள்ளைப் பூசணிக்காய் வைத்தும் செய்யலாம்!
சரஸ்வதி தியாகராஜன் |