மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான்
மெல்லிய மலரல்ல
புயல் கொண்டுபோக;
ஆழமாய்ப் பதிந்திட்ட
ஆணிவேர் நான்!

குளிர்தவழும் மதியல்ல
கருமேகம் சூழ;
நெருப்பினை இறகாக்கும்
ஆதவன் ஆர்கதிர் நான்!

கூட்டுக்குள் குயிலல்ல
இசைபாடி அடங்க;
தீதினைக் கிழிக்கும்
வெறிகொண்ட பறவை நான்!

வண்ணச் சிதறலாய்
கலையும் வானவில்லல்ல,
தடைபல தகர்க்கும்
கூரிய மின்னல் நான்!

புவியியக்கும் விசை அறியும்
ஈடில்லாத் திறன் எனக்கு,
பல்கலை அனைத்தும்
களம்கண்ட வெற்றிச்செருக்கு!

எதனிலும் சரிபாதி நான்,
பல்லுயிர்ப் பாலமும் நான்,
ஊனொடு மெய்ப்பொருள் நான்,
சர்வமும் பெண் எனும் நான்!

நளினி,
மில்வாக்கி, விஸ்கான்சின்

© TamilOnline.com