ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப் போனார். ஒரு மானைப் பார்த்த அவர், தனது பரிவாரங்களை விட்டு, மானின் பின்னாலேயே வெகுதூரம் போய்விட்டார். வழி தப்பிப் போனதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மிகுந்த தாகமும் பசியும் எடுத்தது. இறுதியில் அவர் ஒரு சிறிய ஓலைக்குடிசையைப் பார்த்தார். அதில் ஒரு விறகுவெட்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார். தொலைதூரக் கிராமம் ஒன்றிற்குப் போய் விறகுவெட்டி தனது விறகை விற்றுவருவார்.
அந்த வீட்டில் உண்பதற்கென அதிகம் ஏதும் இருக்கவில்லை. இருந்த மாவில் அவரது மனைவி சில ரொட்டிகளைச் செய்து கொடுத்தாள். ராஜா அதை மிகவும் ருசித்து உண்டார். அதுபோன்ற பசியை அவர் முன்னர் பார்த்திராததால் அப்படியொரு ருசியையும் அவர் சுவைத்ததில்லை. இதற்கு முன்னர் இத்தனை களைப்பை அடைந்திராத அவர் மதியம் படுத்து நன்றாக உறங்கிவிட்டார். அதற்குள் அவருடைய பரிவாரமும் படையும் வந்து சேர்ந்தன. தன் குடிசைக்கு வந்திருப்பவர் அரசர் என்பதை அறிந்த விறகுவெட்டிக்கு மிகுந்த வியப்புண்டாயிற்று. அரசர் கடுமையாக எதுவுமே கூறவில்லை என்றாலும், தான்அளித்த எளிய உணவுக்கு விறகுவெட்டி மன்னிப்புக் கேட்டார்.
அடுத்த நாள் தலைநகரிலிருந்து சிலர் வந்து அவரை அரண்மனைக்கு அழைத்துப் போயினர். அரசருக்குச் சரியான முறையில் விருந்தோம்பாத காரணத்தால் தனக்குத் தண்டனை நிச்சயம் என்று விறகுவெட்டி நம்பினார். தனது கணவனின் விதி எதுவோ தனக்கும் அதுவே ஆகட்டும் என்ற எண்ணத்துடன் அவரது மனைவியும் அவனுடன் சென்றாள். அவர்களுக்கு நல்ல ஆசனம் தந்து அமரச்சொன்னார் அரசர். போதாக்குறைக்கு இருவருக்கும் நல்ல விருந்தையும் கொடுத்தார். இது பலிகடாவுக்குக் கிடைக்கும் கடைசி மரியாதை போல இருக்கிறதே என்று விறகுவெட்டி மனதுக்குள் எண்ணிக்கொண்டார்.
"என்ன வேண்டுமானாலும் கேள்!" என்றார் அரசர். தலைதப்பினால் போதும் என்று நினைத்த விறகுவெட்டி, "என்னையும் என் மனைவியையும் உயிரோடு வீட்டுக்குப் போக விடுங்கள். தயவுசெய்து எங்கள் தலையை வெட்டிவிடாதீர்கள்" என்று அலறினார். "உன்னைக் கொடுமைப்படுத்த நான் நன்றி கெட்டவனல்ல. ஒரு விவசாயப் பண்ணை கொடுக்கலாமென்றால், உனக்கு விவசாயம் செய்யத் தெரியாது. பொன்னும் பொருளும் தரலாமென்றால், நீயோ நடுக்காட்டில் வசிக்கிறாய். அவற்றைத் திருடர்கள் கொண்டு போய்விடுவார்கள். சரி, நான் உனக்கு முப்பது ஏக்கர் பரப்பில் ஒரு சந்தனக்காடு தருகிறேன். அதை வைத்து வாழ்க்கையைச் செழுமையாக்கிக் கொள்" என்றார் அரசர். நிம்மதிப் பெருமூச்சு விட்ட விறகுவெட்டி சந்தோஷமாகக் காட்டுக்குத் திரும்பினார்.
சுமார் ஆறு மாதங்கள் போனபின், அரசர் மீண்டும் வேட்டையாடக் காட்டுக்குப் போனார். தான் சாப்பிட்ட ரொட்டி நினைவுக்கு வரவே, விறகுவெட்டியைத் தேடிக்கொண்டு போனார். விறகுவெட்டி சந்தோஷமாகத்தான் இருந்தார். ஆனால், இப்போதெல்லாம் விறகு விற்பதற்குப் பதிலாகக் கரி விற்கிறேன் என்று அவர் கூறியதைக் கேட்க ராஜாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. விறகுவெட்டிக்குத் தான் பெற்ற சந்தனக்காட்டின் மதிப்புத் தெரியாததால் அந்த மரங்களை வெட்டி எரித்துக் கரியாக விற்பனை செய்தார்!
அதுபோலவே, மனிதனுக்கும் தான் பெற்ற ‘வாழ்நாள்’ என்ற அரிய பரிசின் அருமை தெரியவில்லை. தற்காலிகப் பொருட்களைச் சேர்க்கவும், ஓடி மறையும் சுகங்களை அனுபவிக்கவும் அவன் தனது வாழ்நாளைப் பயன்படுத்துகிறான். அப்படிச் செய்வதால், சந்தோஷமான புனிதப்பயணமாக இருக்க வேண்டிய வாழ்க்கை, துன்பகரமானதாகி விடுகிறது.
ஸ்ரீ சத்திய சாயிபாபா
நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2014 |