கொல்கத்தாவிலிருந்து சங்கரதாஸ் சென்னைக்கு வந்து, அந்த ஆட்டோவில் ஏறியபோது இன்னும் சிறிது நேரத்தில் மாரடைப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். மாரடைப்பு சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆட்டோவை ஓட்டியவர் ரவிச்சந்திரன். சங்கரதாஸ் சென்னைக்குப் புதியவர் என்று தெரிந்ததும் சற்றும் தயங்காமல் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றார். மருத்துவ மனையில் சேர்த்ததோடு அவரது மகனுக்கும் தகவல் கூறினார்.
சங்கரதாஸுக்குப் பேஸ் மேக்கர் கருவி பொருத்த வேண்டும் என்றார் மருத்துவர். வந்த மகனோ வசதியில்லாதவர், திகைத்தார். அங்கேதான் ரவிச்சந்திரனின் 'இதயம்' வேலை செய்தது. தனது ஒரே சொத்தும், வருவாய் ஆதாரமுமான ஆட்டோவை அடகு வைத்து, மருத்துவ மனைக்குப் பணம் கட்டினார். சங்கரதாஸுக்கு இதயத்துடிப்புக் கருவி பொருத்தப்பட்டு உடல்நலம் தேறிக் கொல்கத்தா திரும்பினார்.
செய்தி பரவியதும் பலர் ரவிச்சந்திரனைத் தொடர்புகொண்டு பணம் தருவதாகச் சொன்னார்கள். அவர் பணிவாக மறுத்துவிட்டார். ஒரே ஒரு நல்ல உள்ளத்தின் உதவியோடு ஆட்டோவை மீட்டார் ரவிச்சந்திரன். அவரது மனிதநேயத்துக்குத் தென்றல் தலைவணங்குகிறது.
|