ஜாலியான வாழ்க்கை
ஆனந்த் அன்று மாலை பள்ளியிலிருந்து வந்து சைக்கிளை நிறுத்தும் விதத்திலேயே, கமலா கலவரமடைந்தாள்.

'என்ன இன்னிக்கி இவ்வளவு எரிச்சலா வர்றான், என்ன பிரச்சனையோ? பிளஸ் டூவில சேர்ந்த நாளிலிருந்து கஷ்டப்பட்டு படிச்சி, நல்ல மார்க்தானே வாங்கிக்கிட்டு இருக்கான். நேத்துக்கூட அவனோட எச்.எம் சொன்னாரே ஆனந்துதா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவானுட்டு. என்னாச்சி இவனுக்கு?' என்று நினைத்துக்கொண்டே அவனுக்குப் பிடித்த ரவாதோசை, சட்டினியைத் தட்டில் வைத்துக்கொண்டு சமையலறையை விட்டு வெளியே வந்தாள் கமலா.

ஷூ, சாக்ஸை வேகமாக கழற்றிவிட்டு, புத்தகப்பையை சோஃபாவின்மீது வீசிவிட்டு, பாத்ரூமுக்குப் போய் முகம், கை கால் கழுவிக்கொண்டு வந்தவன், டி.வியை ஆன் செய்தான். அம்மாவின் முகத்தைப் பார்க்காமலேயே, டி.வியைப் பார்த்தபடி தோசையை சாப்பிட்டான். இதே ஆனந்த், எந்தப் பாடத்திலயாவது முதல் மார்க் வாங்கியிருந்தால், அம்மாவைக் கட்டிப்பிடித்து கொஞ்சுவான்.

'இன்னிக்கி அது இல்லையே? அப்படின்னா என்னவாயிருக்கும்?' கமலாவுக்கு ஒரே கவலையாக இருந்தது. ஆனந்த் சாப்பிட்டு முடிந்ததும், சோஃபாவில் அவனருகில் உட்கார்ந்து அவன் தோள்மீது கைவைத்துக் கேட்டாள் "என்னப்பா? என்ன நடந்துச்சு? ஏ ஒரு மாதிரி இருக்கே?"

"என்னன்னு தெரியலம்மா, இன்னிக்கு ஒரே எரிச்சலா, சலிப்பா இருக்கும்மா."

"இன்னும் ஒருமாசந்தானப்பா இதே மாதிரி தம் பிடிச்சி படிச்சி பரிட்சை எழுதிட்டா, அப்புறமா ஜாலிதானப்பா!"

உடனே கோபமாகப் பாய்ந்தான். "ஜாலியா, ஜாலி! என்னம்மா ஜாலி? எனக்கு நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கணும், அதுக்குத்தான் இப்படிக் கஷ்டப்படுறேன். சரி, நல்ல காலேஜ்ல சீட் கெடைச்சிருச்சின்னு வைச்சுக்க, அதோட முடிஞ்சுதா? முடியாது. அங்கயும் கஷ்டப்பட்டு படிச்சி, ரேங்க் வாங்கினாதா கேம்பஸ் இன்டர்வியூவில செலக்ட் ஆகி நல்ல கம்பெனியில வேலை கிடைக்கும்."

"ஆமா ஆனந்த், அப்படி படிச்சித்தானே நம்ப பக்கத்துவீட்டு அபினவ் இன்னிக்கி ஒரு பன்னாட்டு கம்பெனியில நல்ல சம்பளத்துல வேலை பார்க்கிறான்."

"இன்னிக்கு, நா ஸ்கூல்விட்டு வர்ரப்ப அவனைப் பார்த்து பேசினேம்மா. அப்போ அவன் என்ன சொன்னான் தெரியுமா? பன்னாட்டுக் கம்பெனியில வேலை கிடைக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல மச்சி, கம்யூனிகேஷன் ஸ்கில், ப்ராஜெக்ட் இது எல்லாத்துலயும் டாப்பா இருக்கணும் அப்பிடின்னாம்மா."

"என்ன ராஜா? நீதா இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிக்கிறே, சயின்ஸ்லையும் நல்ல மார்க் வாங்குற, அதுல எல்லா நீ சூப்பரா வந்துருவே கண்ணா."

கமலாவும் விடாமல் அவனைத் தேற்றிக்கொண்டே வந்தாள்.

"அப்படி நல்ல வேலை கிடைச்சிருச்சின்னு ஜாலியா உக்கார்ந்துட முடியாது. அப்பப்ப மாறிக்கிட்டு வர்ற தொழில்நுட்பத்தைப் படிச்சி, அதை நாம பார்க்கிற வேலையில பயன்படுத்த தெரிஞ்சிக்கணும். அப்படி இல்லேனா அந்த வேலையில தொடர்ந்து வச்சுக்க மாட்டாங்களாம்."

"என்னப்பா, இது ஒரு பெரிய விசயமா? பத்து வருசத்துக்கு முன்னால நா அம்மியில அரைச்சு, கல்லுல ஆட்டி, விறகு அடுப்ப பத்தவச்சு சமையல் செஞ்சேனப்பா. இன்னிக்கு மிக்ஸி கிரைண்டர், கேஸ் அப்பிடின்னு காலத்துக்கேத்த மாதிரி நானே மாறிக்கிட்டேன். நீ அறிவாளியப்பா, டக்குன்னு பிடுச்சிக்கிடுவே. இப்ப யோசிச்சிப் பார்த்தா பயமாதா இருக்கும். அந்தந்த சூழ்நிலை வரப்ப, நீ அழகா சமாளிச்சுடுவே ராஜா."

"சும்மாயிரும்மா நீ, என்னை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லாத, இப்படியே வாழ்க்கைபூரா ஓடிக்கிட்டேதா இருக்கணுமா? அப்பாடா... இனிமேல் ஜாலியா இருக்கலாம் அப்பிடீன்னு ஒரு காலம் வரவே வராதா? இத நினைச்சாதாம்மா செம கடுப்பா இருக்கு."

மகனின் முகவாட்டத்திற்கான காரணம் கமலாவிற்குப் புரிய ஆரம்பித்தது. பிளஸ்டூ படிக்கும் அவனுக்கு வேலையில் சேரும்வரை உள்ள போராட்டங்களைத் தான் யோசிக்க முடிந்தது. அதற்குப் பிறகு ஒரே மகனான அவனுடைய பொறுப்புக்களைப்பற்றி? சரி, சரி அதைப்பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்.

"ஆஞ்சநேயா! வாழ்க்கையில் கால்வாசி கிணறு தாண்டுவதற்கே இப்படி மலைத்துப் போகிறானே! எதிர்காலத்தை எதிர்கொள்வதற்குரிய தைரியத்தை அவனுக்குக் கொடு" என்று வேண்டிக்கொண்டு, "ஆனந்த் நீ அப்படி கொஞ்சம் காத்தாட தோட்டத்தில உக்காரு. எனக்கு காப்பியும் உனக்கு ஜூஸும் எடுத்துக்கிட்டு வாறே, நாம ரெண்டுபேரும் ஜாலியா அங்க இருக்கலாம்."

"போம்மா, நீயும் உன் ஜாலியும். ஒனக்கெல்லாம் ஜாலின்னா என்னன்னு புரியாது?" என்று கடுப்பாகி தோட்டத்திற்குள் நுழைந்தான்.

இந்தக் காலத்து பசங்களுக்கு தமிழ் அகராதியில பிடிக்காத ஒரே சொல் 'அறிவுரை' என்பது நினைவுக்கு வர, வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி சமையலறைக்குள் சென்றாள்.

தோட்டத்தில் அவன் கண்டகாட்சி... சலித்த மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

"ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!" என்று குஷியாக பாடிக்கொண்டு கண்ணாயிரம் தாத்தா தோட்டவேலை செய்துகொண்டு இருந்தார்.

கண்ணாயிரம் தாத்தான்னாலே... சிரிப்பு, ஊஹூம் மனம் நிறைஞ்ச சிரிப்புதா அவரோட ஸ்பெஷல். அவருக்கு வயது சுமார் 75 இருக்கும். இவராலமட்டு எப்படி எப்பவுமே சலிப்பில்லாம சிரிச்சிக்கிட்டே வேலை செய்ய முடியுது?

ஆனந்தின் முகத்தைப் பார்த்தே அவனது எண்ண அலைகளைப் புரிந்து கொண்டவராய் "வா கண்ணு, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். ஜாலியா இருக்குறதுன்னா என்ன கண்ணு?'' என்று கேட்டார்.

ஜாலியைப் பற்றி உற்சாகமாக விளக்க ஆரம்பித்தான். "அதுவா தாத்தா? ஜாலியா இருக்கிறதுன்னா, ஒண்ணுமே செய்யாம சும்மா உக்காந்துக்கிட்டு, காதுல இயர்ஃபோன் மாட்டிக்கிட்டு, பாட்டுக் கேட்டுக்கிட்டே இருக்கணும் தாத்தா."

"அப்படியா கண்ணு, அப்படியே எவ்வளவு நேரம் கண்ணு சும்மா உட்கார்ந்திருக்க முடியும்?"

"எவ்வளவு நேரம் வேணாலு இருக்கலாம் தாத்தா. அப்பப்பா... அப்பிடியே இருந்தா எந்தக் கவலையும் தெரியாது. சுகமா இருக்கும்."

தாத்தா பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டார்.

"தாத்தா, ரொம்பநாளா நானு உங்களை ஒண்ணு கேக்கணும்ன்னு இருந்தே. உங்க பசங்க நல்லா படிச்சி, நல்லவேலையில இருக்காங்க. உங்களையும் நல்லா பாத்துக்கிறாங்க. எதுக்கு தாத்தா, இப்படி தெனமு வெயிலுல வேலை செய்றீங்க? நீங்க பென்ஷன் வேற வாங்குறீங்கன்னு அம்மா சொன்னாங்க. இப்படி சிரமப்படாம, ஜாலியா இருக்கணும்னு தோணலியா தாத்தா?"

அந்த நேரம் கோவை விமான நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிப் பறக்க ஆரம்பித்த விமானத்தின் சப்தம் கேட்டு இருவரும் அண்ணாந்து பார்த்தனர்.

ஆனந்த் விடவில்லை. "சொல்லுங்க தாத்தா" என்றான். தாத்தா கொஞ்சநேரம் பதில் பேசாமல் இருந்தார். அதற்குள் விமானம் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்து நிதானமாகப் பறந்துகொண்டு இருந்தது.

"ஆனந்து கண்ணு, இந்த விமானத்த ஓட்டுற விமானி இப்ப ஒரு நிலையான உயரத்துல பறக்க வைச்சிக்கிட்டு இருக்காரு. நாமதா ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு வந்துட்டேமே, இனி வீணா எதுக்கு இஞ்சினை இயக்கவேணும் அப்படினுட்டு இஞ்சினை நிறுத்தினா என்ன ஆகும்?"

"அய்யய்யோ தாத்தா, விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்படும்!"

"வாழ்க்கைங்கிறது அப்படித்தா கண்ணு. உழைச்சிக்கிட்டேதா இருக்கணும் .உழைக்கிறத நிறுத்தக்கூடாது. உழைக்கறது வருமானத்தை மட்டு தர்றதா நினைக்காத. உடம்புக்கு ஆரோக்கியத்தையும் மனசுக்கு சந்தோசத்தையும் குடுக்கிற சக்தி அதுக்கு இருக்கு கண்ணு."

தாத்தா ஏதோ தோட்டவேலை செய்றவருன்னு நினைச்சிக்கிட்டு இருந்தோமே? அவருக்குள்ளே இவ்வளவு விசயங்களா? மேலும் தொடர்ந்தார். "உங்க அப்பா சும்மா ஜாலியா இருந்தா என்னாகும்? உங்க அம்மா? அப்புற குடும்பத்த எப்படி கண்ணு ஓட்டறது?

"சூரியன் உதிக்காம, பூமி சுத்தாம, நதி ஓடாம, காத்து அடிக்காம, விதை முளைக்காம ஜாலியா இருந்தா, இந்த உலகம் என்னாகும்?

"இயற்கையே அவிக அவிக வேலைகளைச் சரியா செய்யறப்ப மனுஷப்பிறவி நாம எப்படி இருக்கணும் கண்ணு? அந்தந்த வயசுக்குரிய கடமைகளைச் செய்ய நமக்கு உடம்புல, மனசுல சக்திய அந்த ஆண்டவ தந்துருவாரு கண்ணு. இதுதா இயற்கையோட நியதி.

"உம்மேல உனக்கு முதல்ல நம்பிக்கை வேணும் தங்கம். அந்த நம்பிக்கைதான் நம்மை இயக்கிக்கிட்டு இருக்கிற சக்தி. அந்த இயக்கம் அழகானது. அருமையானது. அதை ரசிக்கக் கத்துக்கணும். ரசிக்க ஆரம்பிச்சா சலிப்பே வராது. மனசு உற்சாகமா இருக்குங் கண்ணு" என்று முடித்தார் தாத்தா.

'தன்னம்பிக்கை', 'நேர்மறை எண்ணங்கள்' போன்ற கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை நூலகத்திலிருந்து கொண்டுவந்து மகனுக்குத் தரவேண்டும் என்று நினைத்த கமலாவுக்கு, இனி அது தேவையில்லை என்பதைத் தாத்தாவின் பேச்சு புரியவைத்தது.

கண்ணாயிரம் தாத்தாவின் கருத்துக்கள் ஆனந்தின் மனதில் பதிவாக ஆரம்பித்ததை அவனுடைய பிரகாசமான கண்களிலிருந்து கண்டுகொண்டாள் அந்தத் தாய்.

கலா கிருஷ்ணசுவாமி,
போர்ட்லாண்டு, ஓரிகான்

© TamilOnline.com