பார்வை
மினியாபோலிஸ் நகரத்தில், ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார் ஜான். அந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை மட்டுமே பணியமர்த்தும் நிறுவனம். பிறவியிலே பார்வை இழந்தவர் ஜான். அவரது வீடு இருக்கும் ரிச்ஃபீல்டில் இருந்து மினியாபோலிஸுக்கு தினமும் பேருந்தில் பயணம் செய்வார் ஜான்.

ஒருநாள் மாலைப் பொழுது. வேலையை முடித்துவிட்டுப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது யாரோ நடந்து வந்து அருகில் நிற்பதைச் செவிகளால் உணர்ந்தார். அவரிடம் மெதுவாக, "எக்ஸ்க்யூஸ் மீ" என்றார்.

அருகில் நின்றவர் திரும்பிப் பார்த்தார். ஜான் பார்வையற்றவர் என்பதை உணர்ந்து உடன் "சொல்லுங்க" என்றார்.

"நான் 535 ரூட் பஸ் புடிக்கனும், 535 பஸ் வந்தா கொஞ்சம் சொல்றீங்களா?"

"கண்டிப்பா சொல்றேன். இன்னும் அந்த பஸ் வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் இருக்கு. வந்ததும் சொல்றேன்"

"உதவிக்கு நன்றி!"

சில நிமிடங்கள் கழிந்தன.

"சார், உங்க பஸ் வந்துடுச்சு, எல்லாரும் பஸ்ல ஏர்றதுக்கு ரெடியா இருக்காங்க. உங்களை நான் பஸ்ல ஏத்தி விடவா?"

"இல்லை சார். நான் இந்த வாக்கிங் ஸ்டிக் வெச்சு ஏறிடுவேன். நன்றி." ஜான் அவரிடம் நன்றி கூறிவிட்டு பேருந்தில் ஏறும் முன்புற வழியில் ஏறினார்.

பேருந்தில் ஏறிவிட்டு மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்தார் ஜான். சாதாரண இருக்கைகள் பேருந்தின் முன்பக்கம் பார்த்து இருந்தன. ஆனால் மாற்றுத்திறனாளி இருக்கைகள் பேருந்தின் இரு பக்கங்களில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு இருந்தன. ஜானுக்குப் பின்னால் இரண்டு பேர் பேருந்தில் ஏறினர். பேருந்தின் கடைசி இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்தனர். இதை அவர்களின் காலடி ஓசையின் மூலமாக ஜான் யூகித்தார். பேருந்து அங்கேயே இன்னும் சில நிமிடங்கள் நின்றது.

கடைசியாக ஒருவர் ஏறினார். அவர் நடந்து செல்லும் காலடி ஓசையைக் கேட்டார் ஜான். காலடிச் சத்தம் இடது காதில் துல்லியமாகக் கேட்டது. வலது காதில் ஓரிரு காலடிச் சத்தம் கேட்டவுடன் நின்றுவிட்டது. இதை வைத்து, அந்தப் பயணி தனக்கு வலதுபுறம் அமர்ந்திருக்க கூடுமென்று யூகித்தார்.

சற்று நேரத்தில் பேருந்து கிளம்பியது. நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் பேருந்து சென்றது. இதை வைத்து நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அவ்வளவாக இல்லை என்று நினைத்துக்கொண்டார்.

சில நிமிடங்கள் கழித்து, பேருந்து வலதுபுறம் லேசாக வளைந்து செல்லவும், தனது உடல் சற்று முன்னால் போவதை உணர்ந்தார் ஜான். அதேபோலப் பேருந்து இடதுபுறம் வளைவாகச் செல்லவேண்டும். ஆனால் பேருந்து அப்படிச் செல்லவில்லை. நேராகச் செல்வதை உணர்ந்தார் ஜான்.

"ஒருவேளை தவறான பேருந்தில் ஏறிவிட்டோமோ? இருக்காது. பேருந்து இடதுபுறம் வளைந்ததை ஒருவேளை நான் உணரவில்லையோ என்னவோ?"

சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து, பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. அங்கிருந்து கிளம்பியவுடன், பேருந்து இடதுபுறம் திரும்பியது. ஜான் செல்லும் பேருந்தின் வழக்கமான தடத்தில் பேருந்து நிறுத்தத்திற்குப் பிறகு நேராகச் செல்லவேண்டும். அதற்கு மாறாக இடதுபுறம் திரும்பியதை உணர்ந்த ஜான், தான் தவறான பேருந்தில் ஏறிவிட்டோம் என்பதை உறுதி செய்தார். தான் பேருந்தில் ஏறுவதற்கு உதவி செய்தவர், தவறான பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டார் போலும் என்று நினைத்தார்.

தனக்கு அருகில் இருப்பவர்களிடம் இதைப் பற்றி கேட்கலாம் என்று நினைத்து, "எக்ஸ்க்யூஸ்மீ! இந்த பஸ் ரூட் நம்பர் 535 தானே?" என்று கேட்டார்.

யாரும் பதில் கூறவில்லை.

இனி இந்தப் பேருந்தில் நமக்கு உதவி செய்பவர் பேருந்து ஓட்டுனர்தான் என்று எண்ணி, மெதுவாக எழுந்து பேருந்து ஓட்டுநர் அருகே வந்தார்.

"சார், நான் தப்பான பஸ்ல ஏறிட்டேன். நீங்க 535 பஸ் கனெக்‌ஷன் இருக்குற ஏதாவது பஸ் ஸ்டாப்ல என்னை இறக்கிவிட்டுடுங்க. நான் ரூட் 535 புடிக்கணும்."

"நீங்க இது ரூட் நம்பர் 535தான். சரியான பஸ்லதான் நீங்க இருக்கீங்க!"

"முந்தின பஸ் ஸ்டாப்புக்கு அப்புறம் பஸ் லெஃப்ட்ல திரும்பிச்சே? வழக்கமா போகற வழியிலே பஸ் நேராதானே போகணும்?"

"ஓ. நீங்க சொல்றது சரிதான் சார். நான் ரூட் 578 ஓட்டற டிரைவர். அரைமணி நேரத்துக்கு முன்னாடி, 535 பஸ் ரூட் டிரைவர் ஃபேமிலி எமர்ஜென்சின்னு சீக்கிரம் வீட்டுக்குப் போயிட்டாங்க. அதனால என்னை டெம்ப்ரரியா 535 பஸ் டிரைவரா போட்டாங்க. நான்தான் பழக்கத்துல 578 பஸ் போகற வழி எடுத்திட்டேன். கவலைப்படாதீங்க, நான் வேற வழியா போய் உங்க எல்லாரையும் அவுங்கவுங்க பஸ் ஸ்டாப்ல இறக்கிவிட்டுடறேன். தொந்தரவுக்கு மன்னிக்கணும். நீங்க போய் உங்க இடத்துல உட்காருங்க."

"சார்... எனக்கு இன்னொரு கேள்வி. நான் மட்டும் தான் இந்த பஸ்ல இருக்கேனா? நான் ஏறினதுக்கப்புறம், இரண்டு மூணு பேர் ஏறின சத்தம் எனக்குக் கேட்டுதே?"

பேருந்து ஓட்டுநர், கண்ணாடியை பார்த்து "மொத்தம் பதினைஞ்சு பேர் இந்த பஸ்ல இருக்காங்க!" என்றார்.

"பதினைஞ்சு பேர் இருக்காங்களா? பஸ் வேற வழியில போகுதுன்னு வேற யாருமே கவனிக்கலையா? ஒருவேளை எல்லாருமே என்னை மாதிரி பார்வை இல்லாதவங்களோ?"

"இல்லை சார். எல்லாரும் குனிஞ்ச தலை நிமிராம செல்ஃபோன் பார்த்துட்டு இருக்காங்க. இப்ப கூட பஸ் வேற வழியில வந்திருக்குன்னு உங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது!"

ராகவேந்திர பிரசாத்,
மின்னசோட்டா

© TamilOnline.com