அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் 29 ஆவது ஆண்டு விழா, ஒரு முழு நாள் நிகழ்வாக கடந்த 14 ஆம் திகதி நியு ஜெர்சியில் மிகக் கோலாகலமாக அரங்கு நிறைந்து நடைபெற்றது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ் மருத்துவ நிபுணர்களால்-தமிழீழப் பகுதிகளில் போதிய மருத்துவ வசதியின்றி மக்கள் படும் அவலங்கள் பெரும் திரையில் காண்பிக்கப் பட்டதுடன் - அவை தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வு தொடர்பாகவும் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
குறிப்பாக-அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த வைத்திய கலாநிதி பிறையின் செனிவிரட்ன அவர்களும், அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் கரேன் பார்க்கர் அவர் களும் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
பல்லாண்டு காலமாக சிங்கள இனவாத அரசுகளால் ஏமாற்றப் பட்டுவரும் தமிழ் மக்கள் தமக்கென ஒரு தனி நாடு நிறுவினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என்று வலியுறுத்தி திரு பிறையன் செனிவிரெட்னா அவர்கள் உரையாற்றினார். தமது இந்தக் கருத்துக்கு ஆதாரமாக பல தரவுகளையும் அவர் தனது உரையில் முன்வைத்தார்.
அடுத்து - ஐ நா மன்றத்தின் சர்வதேச மனித உரிமை நியதிகளை மீறி, சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இழைத்துவரும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொன்ன திருமதி கரேன் பார்க்கர் அவர்கள், சிறீலங்கா அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். |