அமெரிக்காவில் தோல் புற்றுநோய்க்கு அடுத்து அதிகமாகக் காணப்படுவது மார்பகப் புற்றுநோய். பெண்களைத் தாக்கும் இந்த நோய் தற்காலத்தில் எல்லா வயதினரையும் - இளவயதினரைக் கூட - தாக்குவது குறிப்பிடத்தக்கது. காக்கேசியன் பெண்களை மட்டுமல்லாமல், மற்ற இனத்தவரையும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்கப் பெண்களையும் தாக்குவது இப்போது கண்கூடாகத் தெரிகிறது. குடும்ப வரலாறு போலச் சில காரணங்கள் இருப்பவர்களுக்குச் சிறுவயதில் மார்பகப் புற்றுநோய் வருவது சாத்தியம் என்றாலும், எந்தவிதக் காரணமும் இல்லாதவரையும் தாக்குவதைப் பார்க்கமுடிகிறது. மார்பகப் புற்றுநோய் வந்தவர்களில் 15 சதவிகித நோயாளிகளுக்கே குடும்ப வரலாறு காரணமாக இருக்கிறது. மேலும், பல குடும்பங்களில் வரலாறு சரியாகத் தெரியாது. வேறு காரணங்களால் மரணம் ஏற்பட்டிருந்தால் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்ததா என்பதை அறிந்திருக்க முடியாது. தற்காலத்தில் புற்றுநோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. உணவில் ரசாயனப் பொருட்கள் மிகுந்திருப்பதும், சுற்றுச்சூழல் அதிகமாக மாசுபட்டிருப்பதும் காரணங்கள் எனச் சொல்லலாம். ஆனால் மருத்துவ வசதி பெருகியிருப்பதால் புற்றுநோய்க்கான தீர்வுகளும் அதிகரித்திருப்பது நம்பிக்கை தருகிறது.
முக்கிய காரணம் குடும்ப வரலாறு: குடும்பத்தில் முன்னரே பெண்களுக்கு இளவயதில் மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால், மரபணுமூலம் கடத்தப்படும் வாய்ப்பு அதிகம். இவற்றில் BRCA 1 மற்றும் BRCA 2 என்ற மரபணுக்கள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் குடும்பத்தில் மற்றப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கமுடியும். இந்த மரபணுக்கள் மார்பகம் மட்டுமல்லாமல் பெண்களின் சூலகத்திலும் (ovary) புற்றுநோய் ஏற்படுத்தலாம். அதனால் குடும்பத்தில் சூலகப் புற்றுநோய் இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த மரபணுக்கள் எல்லோரிடமும் உள்ளன. இவற்றில் திடீர்மாற்றம் (Mutation) ஏற்பட்டுள்ளதா என்று கண்டுபிடிக்க வேண்டும். அப்படி மாற்றம் இருந்தால் குடும்பத்தில் எல்லாப் பெண்களும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக அடுத்த தலைமுறைக்கு இது உதவும். அப்படி மரபணுக்களில் மாற்றங்கள் (BRCA Mutation) இருந்தால், ஒருவரின் சராசரி 70 வயது வாழ்க்கையில் 50% பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், 30% பெண்களுக்கு சூலகப் புற்றுநோயும் வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால் அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக அறுவைசிகிச்சை செய்துகொள்ள அறிவுரை வழங்கப்படும்.
பிற காரணங்கள் * சிறுவயதிலேயே மாதவிடாய் வருவதும், வயது முதிர்ந்த பின்னர் மாதவிடாய் நிற்பதும்: இவர்களிடம் எஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். * முதல் குழந்தையை வயது அதிகமான பின்னர் பெற்றுக்கொள்வது அல்லது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் எடை கூடுதலாக இருப்பது * மது அருந்துவது * மாதவிடாய் நின்ற பின்னர் ஹார்மோன் மருந்துகள் உட்கொள்வது * ஒருமுறை மார்பகப் புற்றுநோய் வந்திருப்பது * வேறு காரணத்திற்காக ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பது
அறிகுறிகள் - மார்பகத்தில் கட்டி - காம்பு இழுத்துக் காணப்படுவது - காம்பில் ரத்தக்கசிவு - மார்பகத் தோலில் மாற்றம்
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். பெரும்பாலும் மார்பக சுயப்பரிசோதனை செய்யும்போது அல்லது மருத்துவர் பரிசோதனை செய்யும்போது இது கண்டுபிடிக்கப்படும். புற்றுநோய் தவிர்க்கும் முறையான Mammogram செய்யும்போதும் கண்டுபிடிக்கப்படலாம்.
அதன்பின் கட்டி இருந்தால் அதை திசுப் பரிசோதனை (biopsy) செய்யவேண்டி வரும். அதன் பின் CT ஸ்கேன், MRI, PET ஸ்கேன், நிணநீர்க் கணுக்களின் பரிசோதனை தேவைப்படலாம்.
சிகிச்சை மார்பகப் புற்றுநோயின் தீவிரம் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படும். ஹார்மோன் Receptor இயல்பை ER positive, PR Positive, HER Positive, HER Negative என்று பிரிப்பர். இவற்றைப் பொருத்துச் சிகிச்சைமுறை மாறுபடும். ஒரு சிலருக்கு அறுவைசிகிச்சை உடனடியாகச் செய்வர். சிலருக்குக் கீமோதெரபி கொடுத்துக் கட்டியின் அளவைச் சுருக்கியபின்னர் அறுவைசிகிச்சை செய்யப்படும். மார்பகத்தை முழுதாகவோ அல்லது கட்டியை மட்டுமோ அறுவைசிகிச்சையில் எடுப்பர். அதற்குப் பின்னர் ரேடியஷன் தேவைப்படலாம். சிலருக்கு ஹார்மோன் சிகிச்சையும் கொடுப்பர். சிலருக்கு அடுத்த மார்பகத்தில் புற்றுநோய் வராமல் இருக்கவும் மருந்துகள் தேவைப்படும். மரபணுவினால் கடத்தப்படும் புற்றுநோயாக இருந்தால் அது சூலகத்தைத் தாக்காமல் இருக்கவும் சிகிச்சைகளும் பரிசோதனைகளும் தேவைப்படும்.
தவிர்ப்பு முறைகள் நாற்பது வயதானவர்கள் ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மாமோகிராம் செய்துகொள்ள வேண்டும். ஐம்பது வயதானவர்கள் ஒவ்வோர் ஆண்டும் செய்துகொள்ள வேண்டும்.
மார்பகத் தசையின் அடர்த்தி (டென்சிடி) அதிகம் உடையவர்களுக்கு மாமோகிராம் மட்டும் போதாது. இவர்களுக்கு அல்ட்ராசவுண்டு பரிசோதனை தேவைப்படும். இதன்மூலம் கட்டி இருப்பது தெரியவந்தால் அதனை திசுப்பரிசோதனை செய்யவேண்டி வரும். * முடிந்தவரை ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். * தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து உடலின் எடை குறைப்பது நல்லது. * ரசாயனப் பொருட்கள் கலந்த உணவு, மிகுதியான மாமிச உணவுகள், அளவுக்கதிகமான வெண்ணெய் இவற்றைத் தவிர்த்து, தாவர உணவு அதிலும் ரசாயன மாற்றம் செய்யாத தாவரங்கள் (organic) உட்கொள்வதன்மூலமும், ஆலிவ் எண்ணெய், பருப்புகள் (nuts) கலந்த மெடிடரேனியன் உணவுகள் உண்பதும் மார்பகப் புற்றுநோயைக் குறைக்கும் என்று சில சான்றுகள் கூறுகின்றன. குடும்ப வரலாறு மற்றும் மரபணுக் காரணங்கள் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக மார்பக அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டி வரலாம்.
மனம் தளர்ந்துவிடாமல் நோய்க்கான தீர்வுமுறைகளையும், தவிர்ப்பு முறைகளையும் கையாள்வது சிறந்தது. மனம் உடையவேண்டாம். 'எனக்கு ஏன்?' என்ற கேள்வி எழுந்தாலும், தன்னம்பிக்கையோடு மருந்துகள் உட்கொள்வது புற்றுநோய்த் தீர்வுமுறையில் முக்கியமாகப் பலனளிக்கிறது. நோயாளிகளின் Positive Thinking நோயின் தீவிரத்தைக் குறைக்கிறது. கீமோதெரபி பின்விளைவுகளை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கையாள இந்தத் தன்னம்பிக்கை உதவுகிறது. எனக்குக் குடும்ப வரலாறு இல்லை, நான் ஹார்மோன் எடுத்துக் கொண்டதில்லை அதனால் எனக்கு மாமோகிராம் தேவையில்லை இன்று எண்ணாமல், எல்லாப் பெண்களும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இந்தியப் பெண்கள் இந்தப் பரிசோதனை செய்துகொள்வதில் தயக்கம் காட்டுவதை நான் பார்க்கிறேன். முன்பெல்லாம் நுண்ணுயிர்க் கிருமிகளால் நோய்கள் அதிகம் ஏற்பட்டன. இந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. இது காலத்தின் விளைவு. அதனால் புற்றுநோய் தவிர்க்கும் முறைகளையும், பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனைப்படி அவசியம் செய்துகொள்ளுங்கள்.
மரு.வரலட்சுமி நிரஞ்சன், கனெக்டிகட் |