அன்புள்ள சிநேகிதியே,
என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்காக எழுதுகிறேன். சமீபத்தில் விவாகரத்து நடந்திருக்கிறது. 13 வருடத் திருமண வாழ்க்கை. இரண்டு குழந்தைகள். பெண் எட்டு வயது, பையன் ஐந்து வயது. இரண்டு வருடமாகப் பிரச்சனை. எதிர்பார்த்ததுதான். ஆனால் பின்விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இடிந்து போயிருக்கிறான். அந்தக் குழந்தைகளை விட்டுக்கொடுக்க மனசில்லை. Visitation Rights-படி ஒருவாரம் விட்டு ஒருவார இறுதியில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருகிறான். ஆனால், அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியவில்லை. விவாகரத்துக்கு முக்கியக் காரணமே அவன் பொறுப்பில்லாமல் விளையாட்டாய் இருக்கிறான் என்பதுதான். அவனுடைய மனைவி, நிறைய என் மனைவியிடம் புகார் செய்திருக்கிறாள். நானும் நிறைய சொல்லிப் பார்த்திருக்கிறேன். என்னிடம் 'சரி' என்று சொல்லிவிட்டு மறுபடியும் தன் வழிக்கே போய்விடுவான். மிகவும் சோம்பேறி. பிரில்லியன்ட்டாக இருந்ததால் எப்படியோ வேலையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறான். அவன் மனைவி மென்மையானவள். அவளால் முடிந்தமட்டும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளப் பார்த்திருக்கிறாள். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, படிப்படியாக, பக்குவமாக எடுத்துச்சொல்லி, நிறையமுறை கெஞ்சியிருக்கிறாள் அவனிடம். பொறுப்பாக இருக்கச்சொல்லி பலதடவை கெஞ்சியிருக்கிறாள். ஆனால் அவன் மாறவில்லை.
அவன் அம்மாவுக்கு ஒரே பையன். அதனால் மிகவும் செல்லம். வீட்டில் எந்த வேலையும் செய்யமாட்டான். அப்படியே அம்மா அவனை வளர்த்து விட்டிருக்கிறார். மனைவி அவனை ஏதாவது செய்யச்சொன்னாலும் செய்யவிடாமல் தடுத்துவிடுவார். "நீ என்ன வேலைக்காரனா? ஏன் அவளால் இதையெல்லாம் செய்ய முடியாதாமா? இல்லையென்றால் ஒரு வேலைக்காரியைப் போட்டுக் கொள்வதுதானே" என்றெல்லாம் சொல்லி அவனை வேலை செய்யவிடாமல் தடுத்துவிட்டிருக்கிறார். அம்மாவாலும் அவன் அப்படி மாறிப்போயிருக்க வாய்ப்பிருக்கிறது.
முக்கியமான ட்ரெய்னிங் ஒன்று நடத்த அவள் செல்லவேண்டி இருந்தது. அதனால் குழந்தைகளை மிகவும் பத்திரமாக, பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி வலியுறுத்திச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாள். ஆனால் சிறிய பையன் நீச்சல் குளத்தில் அடிபட்டு - எமெர்ஜன்ஸி, CT Scan, தலையில் தையல்... என்று - பெரிய விபரீதமாகப் போய்விட்டது. அதுதான் last straw. அப்புறம் நாங்கள் என்ன மத்தியஸ்தம் செய்தபோதும் முடியவில்லை.
இப்போது வீக் எண்ட் ஆனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்துவிடுகிறான். என் மனைவியும் பரிதாபப்பட்டு, அந்தக் குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு போட்டு எல்லாம் செய்து அனுப்புவாள். ஆனால் எவ்வளவு நாள்தான் நாங்கள் பராமரிக்க முடியும்? அவனை எப்படித் திருத்துவதென்பது தெரியவில்லை. போனவாரம் ரொம்பக் கண்டிப்புடன் சொல்லிவிட்டேன். அதனால் அவன் மிகவும் நொந்துபோய், அடுத்த நாள் குழந்தைபோல ஃபோனில் என்னிடம் ஒருமணி நேரம் அழுதான். நிறையக் குடித்திருந்தான் என்று நினைக்கிறேன். மனைவியை நினைத்து அழுதான். தன் குழந்தைகளை நினைத்து அழுதான். தன் எதிர்காலத்தை நினைத்து அழுதான். தன்னிரக்கம் அதிகமாகப் போய்விட்டது. தெரபிஸ்ட்டிடம் போகச் சொன்னேன். "நீதாண்டா என்னோட தெரபிஸ்ட்" என்று ஒரு போடுபோட்டான். அவன் அப்படிச் சொன்னபோது மனதுக்குக் கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால், கவுன்சலிங், தெரபி என்று எனக்கு இவற்றில் எந்த ஞானமும் கிடையாது. "இனி உன் சொல்படி கேட்கிறேன்" என்கிறான்.
நான் என்ன செய்யட்டும்? உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதரே...
இதில் நிறையப் பரிமாணங்கள் உள்ளன. உடனே தீர்ந்துவிடும் பிரச்சனை அல்ல இது. அவர் உண்மையில் உங்கள் சொல்பேச்சுக் கேட்கும் நண்பராக இருந்தால் இந்தத் திருமண முறிவே ஏற்படிருக்காது. அவர் நல்ல மனிதராக இருக்கலாம். ஆனால், சோம்பேறித்தனம், விளையாட்டுத்தனம் என்ற மூடில் இருந்து விடுபடவில்லை. விவாகரத்து வாழ்க்கையின் மிகப்பெரிய விபத்து. அதிலிருந்து மீளப் பல மாதங்கள்/வருடங்கள் கூட ஆகலாம். சில்லறை விஷயம் என்று நாம் நினைப்பது சமயத்தில் மணவாழ்க்கைக்குக் கல்லறையாக மாறிப்போகிறது என்பது தெரியாமல், நம்மில் பலர் we take things and people for granted.
நீங்கள் நல்ல நண்பராக இருக்கிறீர்கள். ஆனால் தொடர்ந்து கொஞ்சம் கண்டிப்புடன் இருந்து பாருங்கள். உங்கள் நண்பர் பிரில்லியன்ட் என்று சொல்கிறீர்கள். குழந்தை வளர்ப்புத் திறமைகளைச் சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுவார். அதற்கு உங்கள் மனைவி உதவுவார் என்று நினைக்கிறேன். உங்கள் ஆதரவு அவருக்கு மிகவும் முக்கியம். அது கண்டிப்பாக இருக்கிறது. இல்லாவிட்டால் அதைப்பற்றித் தெரிவித்திருக்க மாட்டீர்கள். அவருடைய காயம் ஆற நேரமும் தேவை; வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்