நமது அணுகுமுறை...
சில மாதங்களாக 'The Hindu' பத்திரிக்கையில், சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும் முறை இருக்கிறது. அப்படிப்பட்ட கட்டுரைகளைப் படிக்கும்போது ஓரளவு நம்பிக்கை பிறக்கிறது - தன்னலமும், குறுகிய நோக்கும்தான் அமெரிக்கா என்றில்லை; சுய பரிசீலனையும், ஆழ்ந்த அலசலும், எதிர்நோக்கும் கொண்ட பலர் இருக்கிறார்கள் - அவர்களது குரலும் உரத்து ஒலிக்கிறது.

சென்ற மாதம் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது, உலகத் தலைவர்கள் பற்றியும் அவர்களது சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் பேச்சு வந்தபோது வெனிசுவேலா நாட்டுத் தலைவர் பற்றியும் அவரது செயல்பாடுகளின் தாக்கம் பற்றியும் பேச்சு வந்தது. அப்போது வேடிக்கையான சொல்லாடலில் சொல்லப்பட்ட ஒரு வேதனை தந்த கருத்து: 'Chavez அடுத்த வருடம் பிழைத்துக் கிடந்தால் பேசுவோம்'.

நண்பர்கள் விவாதிக்கும்போது சொல்வது வேறு. பொதுமேடையில் அறைகூவலாய்ச் சொல்வதுவேறு. சல்மான் ருஷ்டிக்கு எதிரான மதகுருக்களின் ஆணைக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?

Global Warming பற்றிய நமது அணுகுமுறை உடனடியாக மாறவேண்டும். இதைப்பற்றி அடிக்கடி மிகவும் கவலைதரும் அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் யாரும், முக்கியமாக அமெரிக்க அரசு, கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இந்தத் தும்பை விட்டுவிட்டால், எந்த வாலையும் பிடிக்கமுடியாது.

மீண்டும் சந்திப்போம்
பி. அசோகன்
செப்டம்பர் 2005

© TamilOnline.com