உலக ஜூனியர் செஸ் சேம்பியன் - மகாலட்சுமி
சாதிப்பதற்குப் பணம் தேவையில்லை ஆர்வம், உழைப்பு, முயற்சி இருந்தால் போதும் என்பதற்கு உதாரணம் மகாலட்சுமி. எளிய குடும்பத்திலிருந்து வந்து உலக ஜூனியர் செஸ் சாம்பியனாக இவர் உயர்ந்திருக்கிறார். ஐந்து வயதில் தனது அக்கா செஸ் ஆடுவதைப் பார்த்து விளையாடக் கற்றுக்கொண்டவர், ஆர்வத்துடன் விளையாட ஆரம்பித்தார். பயிற்சிகளும் முயற்சிகளும் தொடர, பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் ஊக்குவிக்க, ஏழு வயதிலேயே இந்திய ஜூனியர் சேம்பியன் ஆனார். தொடர்ந்து தேசிய அளவில் சேம்பியன் போட்டியில் வென்றதுடன், ஆசிய அளவிலும் மூன்றாமிடம் பெற்றார். அதே வருடம், ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சேம்பியன்ஷிப்பிலும் மூன்றாம் இடம் வென்றார்.

கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் அவர்களின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து செஸ் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஆரம்பித்தார். வருடாவருடம் சிறந்த ஆட்டக்காரர் பரிசு கிடைத்தது, ஆனால் பட்டம் கிடைக்கவில்லை. எங்கே தவறு செய்கிறோம் என்பதை ரமேஷூடன் கலந்தாலோசித்தார். விளையாட்டின்போது ஏற்படும் டென்ஷன்தான் முக்கியக் காரணம் என்பதை அறிந்து அதனைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டார். ஆட்டத்தில் சில நுணுக்கங்களைப் பயன்படுத்தி ஆட ஆரம்பித்தார். அயராத முயற்சி வெற்றியைத் தந்தது.

நவம்பர் 2015ல் கிரேக்கத்தில் நடந்த ஜூனியர் பிரிவு செஸ் போட்டியில் சேம்பியன் பட்டம் வென்றார். இந்த விருதை ரஷ்ய செஸ்மேதை கேரி காஸ்பரோவிடமிருந்து பெற்றதை மிகப்பெருமையாகக் கருதும் மகாலட்சுமி, "சீனியர் பிரிவில் உலக சேம்பியன் ஆவது எனது லட்சியம்" என்கிறார். "மகாலட்சுமி ஆடும்விதம் என்னை வியக்கவைக்கிறது. செஸ்ஸில் எனது வாரிசு என இவரைச் சொல்லலாம்" என்று பாராட்டுகிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

தந்தை முகுந்தகுமார் மற்றும் மூன்று சகோதரிகளுடன் எளிய வீட்டில் சென்னை எருக்கஞ்சேரியில் வசித்துவரும் மகாலட்சுமி, சென்னை வேலம்மாள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார். மகாலட்சுமியின் லட்சியம் நிறைவேற வாழ்த்தலாம் வாருங்கள்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com