ஒரே நாளின் மூன்று காட்சிகளின் தொகுப்பு இது. கதாநாயகி: கல்யாணலட்சுமி களம்: தனியார் மருத்துவமனை, அலுவலகம், வீடு. பிரச்சனைகள்: இரண்டு
காட்சி ஒன்று "இது - கலாசார அதிர்ச்சி தரக்கூடியது. நீங்கள் சந்திக்க வேண்டிய சமூகப் பிரச்னைகள் ஏராளம். காறி உமிழ்வார்கள். வார்த்தையால் விளாசுவார்கள். ஊர்ப்பிரஷ்டம் செய்வார்கள். அது தரும் மன அழுத்தம் உங்களையே சிதைக்கக் கூடும். எல்லாவற்றையும் நினைப்பில் வையுங்கள். வாழ்த்துகள்…" - காலையிலேயே வந்திருந்த கல்யாணலட்சுமியிடம் சொல்லப்பட்ட வாசகம் இது - நூறாவது முறையாக. ஆலோசனை சமயங்களிலெல்லாம் மந்திரமாக ஓதப்பட்ட விஷயம்தான். சகலத்தையும் நிறைவேற்றி இன்று மொத்தமாகச் சொன்னபோது, சிரிப்பைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டாள் கல்யாணலட்சுமி.
"இத்தனை வயதுவரை என்னைத் துரத்தாத சமூகப் பிரச்னையா டாக்டர்? சமூகம் துளைத்துப் பார்த்தே என் உடம்பு முழுசும் சல்லடையாகி விட்டது. அது தராத மன அழுத்தமா? சமூகத்தைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள். காறி உமிழும் அதன் எச்சில் காய்ந்துவிடும். குதர்க்க வார்த்தைகள் ஓய்ந்துவிடும். ஆனால் இந்த வரம் - ஜென்ம சாபல்யமல்லவா? மரித்துப் போயிருந்த எனக்கு உயிரூட்டி இருக்கிறீர்கள்… நன்றி டாக்டர்…"
ஒற்றை வளையல் தவழ்ந்த மருத்துவரின் கையை எடுத்து முத்தமிட்டாள் கல்யாணலட்சுமி.
காட்சி இரண்டு அந்தக் கல்யாண அழைப்பிதழிலிருந்த நாகஸ்வர கோஷ்டியினர் சகலரும் குட்டி குட்டியாகக் கீழிறங்கினர். சுண்டுவிரல் அளவுக்கு நாகஸ்வரம். மேளம். தவில். சகலத்தையும் மூச்சைப்பிடித்து வாசித்தனர். ஊர்வலத்தின் முன்னால் நடந்தனர். சுட்டுவிரல் நீளத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கேந்தினவர்களின் கம்பீர நடை. உள்ளங்கை நீள ஊர்வல காரில் - பெண்ணும் மாப்பிளையும் பிடிப்பிள்ளையார் மாதிரி - ஒரு இன்ச் உயரத்தில் வெட்கமாக இருந்தார்கள். கல்யாணத்துக்கு விலாசம் சொல்லும் கலாட்டா, சிரிப்பு, கதம்ப வாசனை எல்லாமே லில்லிபுட் அளவில்.
போன மாசம்தான் பணியில் சேர்ந்த டைப்பிஸ்ட்டின் கல்யாணப் பத்திரிகை அது. கல்யாணலட்சுமி அதைக் கண்கொட்டாமல் பார்த்தாள். பார்க்கப் பார்க்க, சுவாரஸ்யம் வலைபின்னியது. மேஜையில் கன்னத்தைச் சரித்து - அழைப்பிதழை ஐம்பதாவது முறையாக வாசித்து முடித்தாள். சகல வாசகங்களும் மனப்பாடம். இதுமாதிரியான நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை ரசித்து ஏங்கிய முன்னனுபவம். ஒவ்வொரு தரம் வாங்கும்போதும் 'நானும் ஒருநாள் இதுமாதிரி விநியோகிப்பேன். திருமணக் களை சொட்டச் சொட்ட, வெட்கம் இழையோட பத்திரிகை தருவேன். குடும்பத்தோட வந்துருங்க. இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்… இன்னபிற கல்யாண அழைப்பிதழ் வசனங்களைச் சொல்லுவேன்…' இப்படியான கனவு சுவாசம்… பதினெட்டு வருஷமாகக் கனவிலேயே குடியிருக்கிறது. அவளின் காலத்தில் ஒரு வசனத்தைக்கூடப் பிரயோகிக்கும் சம்பவம் நிகழாத விசனம். நம்பிக்கை இழை உயிரிழந்து கொண்டிருக்கிறது நாளுக்கு நாள். இனி? முற்றுப்புள்ளிதான்.
தேவாங்கு மாதிரி குட்டிகளுக்குக்கூடக் கல்யாணம் சுலபமாக நடக்கிறது - எந்தத் தடங்கலும் இல்லாமல். கல்யாணத்துக்கு அப்புறம், விடுப்பு முடிந்து வரும்போது - அதுகள் மூஞ்சியில் நூறு வாட்ஸ் பல்ப் மாதிரி தேஜஸ் வந்து தொலைக்கிறதே… அது என்ன இழவு ரசவாத வித்தையோ? இதுகூடப் பரவாயில்லை. தேவாங்கும் பிள்ளை உண்டாகிப் பெற்றுப் பிழைத்துக் கையிலொரு குட்டியோடு, அம்மாக் களையோடு வலம்வருமே… கொடுத்து வைத்த தாய்கள். கல்யாணலட்சுமிக்குள் பொறாமை பொறி பறந்தது.
'கண்விழிப்பதும் சோற்றில் கை நனைப்பதும், பேருந்துக் கூட்டத்தில் கூழாவதும், வியர்வை நாற்றத்தில் பாழாவதும், அலுவலக நாற்காலியைத் தேய்த்து, மாற்றமேயில்லாது மணித்துளியை அடைகாப்பதும், பெண் பார்க்கும் படலத்தில் வெட்கத்தைத் தேடி எடுத்து முகத்தில் அப்பிக் கொள்வதும், மாப்பிள்ளையின் தலையசைப்புக்கு ஏங்குவதும், மறுப்பு சுமக்கும் கடுதாசிகளை வெறுப்புடன் ஜீரணிப்பதும், பெருமூச்சும் பின்னிரவு அழுகையும் பிறரின் கல்யாணத்தில் வயிற்றில் தகிக்கும் பொறாமை அக்கினியில் வெந்து போவதும்தான் என் ஜென்மக் கடனோ? புருஷனின் ஸ்பரிசத்துக்கும் ஆண்மைத்தனமான வருடலுக்கும் மோகம் தரும் முத்தத்துக்கும் பித்தம் தரும் கொஞ்சலுக்கும் ஏங்கியே செத்துப் போவேனோ?' நித்தமும் புழுங்குவாள் கல்யாணலட்சுமி.
'ஒற்றை ஜீவனாகவே மரித்து விடுவேனா? என் அன்பை, என் நேசத்தை, என் பிரேமையை, என் காதலை, என் ஸ்நேகத்தை ஸ்வீகரிக்க ஜீவனே கிடையாதா? கிடைக்காதா? எனக்கான வேர்ப்பிடி மண் இல்லாமல் தரிசாகத்தான் போவேனா? அம்மா, அப்பாவுக்கப்புறம் நானும் நாலு சுவருமாக ஜீவிக்கவா? வீட்டின் பல்லியும் பாசியும் ஒட்டடையும் ஸ்டெனோ குறிப்பேடும்தான் என் சுவாசத்துணையா? உயிரோடு, மனசோடு, உணர்வோடு நெருங்க யாருமேயில்லாத அநாதைப் பிறப்பா நான்?' கண்ணீரில் உருகுவாள் கல்யாணலட்சுமி.
இத்தனை வயசுக்கும் ஒற்றைப் பொம்பளையாயிருப்பதில் இன்னொரு கஷ்டமும்கூட. முப்பது வயசிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் குழைவையும் மென்மையையும் தாரைவார்க்க ஆரம்பித்தாயிற்று. முகத்திலும் தாடையிலும் ஆங்காங்கே கனமான ஒற்றை முடியின் ரோம சாம்ராஜ்யம். மெதுமெதுவாக உடம்பு முழுவதும் ஒரு பிளாஸ்டிக் தன்மை. விறைப்பின் ஆக்கிரமிப்பு. தவிர்க்கவே இயலாமல் ஆம்பளைத்தனமான தடதடவென்ற நடை. எந்தக் கொம்பனைப் பற்றியும் கவலையேயில்லை என்கிற தெனாவெட்டான தோரணை. நளினம் தொலைத்த மூங்கில் முதிர்ச்சி. இளமையில் மென்மையாயிருந்த எனக்குள்ளிருந்து இன்னொரு நான் ஜனனம்.
புதுசாகக் கல்யாணமானதுகள் ஸ்கூட்டர், பைக் என்று இளமை ஜொலிக்கப் பறப்பதைப் பார்க்கும்போது மனசு நமநமக்கும். வெறுப்பாயிருக்கும். அப்படி இறுக்கிப் பிடித்துப் பறக்க எனக்கு வாய்க்கவில்லையே! ஆதங்கம். 'வேகமாய்ப் போய் முட்டிமோதிக் கவிழுங்கடா நாய்களா…' மனசு அனிச்சையாகச் சாபமிடும். கல்யாணத்துக்குப் போனால் 'ஏதாவது பிரச்னை வெடிக்காதா? இந்தப் பெண் வேண்டாம். இதோ இவளைக் கட்டிக் கொள்கிறேன்…' திடீர்த் திருப்பமாகத் தாலி என் கழுத்தில் ஏறாதா? ஆயிரம் எதிர்பார்ப்பு கல்யாணலட்சுமிக்குள் முளைவிடும்.
அவ்வளவு ஏன்? பாத்ரூமில் குளிக்கையில் கையோடு ரகசியமாகக் கொண்டு வந்திருக்கும் மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, கோத்திருக்கும் மஞ்சள் கிழங்கைக் கண்ணில் ஒத்திக்கொள்வதும், அதை வெற்று மார்பில் படரவிட்டுக் கண்ணாடியில் பார்த்துப் பூரிப்பதும், வெளியே வரும்போது கழற்றி அலமாரியில் ஒளித்து வைப்பதும்கூட ரகசியக் கடமைதானே? இந்த முப்பத்தெட்டு வயசுக்குத் தேவையா இது மாதிரித் திருட்டு சுவாசம்?
"லக்னத்துலேர்ந்து எட்டாமிடம் சுத்தமில்லே…"
"களத்திர ஸ்தானம் நீசமாயிருக்கு…"
"மாங்கல்ய ஸ்தானம் பலமாயில்லியே ஜாதகத்துல. உங்க திசைக்கே ஒரு கும்பிடு…"
- சகலரின் வசனமும் இதுதான். முதுகெலும்பில்லாத முட்டாள்கள். பிடரியில் இடித்துப் புறமுதுகிட்டு ஓடினவர்களை இழுத்துப் பிடிக்கவா முடியும்? அவனவன் சோறும் நீரும் ஏற்கனவே எழுதப்பட்டதுதானே? தோஷம் இல்லாத பெண்ணின் புருஷன் எவனாவது நூறாண்டு இருந்திருக்கிறானா? ஜாதகச்சிறை இங்கு மட்டும்தானே? பேசாமல் அமெரிக்கனோ, ஆப்பிரிக்கனோ கிடைத்தால் இழுத்துக்கொண்டு ஓடிவிடலாம். இப்படியான நினைப்பில் ஆழ்பவள்தான் கல்யாணலட்சுமி.
பன்னிரண்டு கட்டங்களுக்குள் கையும் காலும் விரித்து அவளை ஆணியடித்து மாட்டியது மாதிரி இருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் பாம்பாக மாறி, உயிரோடு அவளை விழுங்குவது மாதிரியும் இருக்கிறது. தப்பித்தல் இல்லாமல் எல்லாக் கிரகங்களுமே வேலியாக நின்று தொடர்ச்சியாகத் துரத்துவது மாதிரியும் இருக்கிறது.
"தோஷம் தோஷம்னு சொல்லாதீங்க தரகரே! பொண்ணு, மாசம் நாலாயிரம் சம்பாதிக்கறா… சமையல் அபாரம்…"
"ம்… இருக்கலாம். திருக்கணிதம், வாக்கியப் பஞ்சாங்கம் எப்படிப் போனாலும் செவ்வாய் தோஷம். ஏகதோஷம் - ஜாதகத்தை முன்னப்பின்ன மாத்தி எழுதி முடிச்சுடலாம்தான். தெரிஞ்சுடுத்துன்னா பிரச்னை. ஒரு லட்சம் ரொக்கம் குடுத்தா - ஒப்புக்க வெச்சுடலாம்…" ஆசைகாட்டினார் தரகர்.
களத்திர ஸ்தானத்தைச் சுத்தப்படுத்த ஒரு லட்சமா? புதர் மண்டிக்கிடக்கும் தரிசுநிலமா அந்தக் கட்டம்? அப்படியேனும் ஒரு மீசைக்குப் பொண்டாட்டியாகித் தாசி வேலை பண்ணவா? எவன்டா கண்டுபிடிச்சான் ஜாதகத்தை? தூத்தேறி.
"பொண்ணுக்கு வயசாயிடுச்சே…"
"முகம் முத்திப்போச்சு மாமி உங்க மகளுக்கு…"
"ரெண்டாம் தாரத்துக்குக்கூட இளசைத்தான் கேக்கறாங்க…"
பருவத்துக்கேற்ற வசனச்சாட்டை செருகல்.
"கல்யாணலட்சுமி மேடம். போன் உங்களுக்குத்தான்…" உலுக்கப்பட்டாள்.
"ஹலோ..?"
"எப்படி ஃபீல் பண்றீங்க லட்சுமி? கஷ்டமாயில்லியே? சந்தோஷமா இருக்கீங்களா?" எதிர்முனையில் மருத்துவர்.
"ம். ரொம்ப… ரொம்ப கர்வமாயிருக்கேன்…"
வயிற்றுக்குள் ஐஸ்க்ரீம் மழை ஜிலுஜிலுவென்று நெளிந்தோடியது. சுகமின்னல் ஜனனம். இத்தனை நாளும் உணராத வித்தியாச அனுபவம். கனவை நிஜமென்று ஆக்கிக்கொண்ட கர்வம் - அவளுக்குள் குறுக்கும் நெருக்குமாகப் பாவு கட்டியது. வேறு யாருக்கும் தெரியாத ரகசியத்தைக் கர்ப்பம் சுமப்பது கர்வமாக இருந்தது. நிஜமா? நிஜம்தானா? என் கனவின் நீட்சியா? விடியலின் சூரியக்கதிரா? எனக்கே எனக்கா?
இப்போதெல்லாம் கடைக்குப் போனால் குழந்தைகள் பகுதியிலேயே குடியிருந்துவிடலாமா என்று மனசு கிறங்குகிறது. அந்த இடத்துக்கே ஒரு பாப்பா வாசனை வீசுகிறது. காற்றுகூடப் பூ மாதிரி மெல்லிசாகப் பேசுகிறது. உள்ளங்கை அகலத்தில் பாப்பா ஜட்டி, பாப்பா சட்டைக்குள் சொர்க்கத்தின் முகவரி நெய்திருப்பதாகத் தெரிகிறது.
புருஷன் ஆசையைக்கூடத் தகனம் செய்துவிடலாம். ஆலாகப் பறக்கக் கூடிய அளவுக்குத் தகுதியேயில்லாத ஆசை என்று மனசைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், குழந்தை ஆசை? எனக்கே எனக்கென்று ஒரு குழந்தை. நானே வயிற்றில் சுமந்து அணுஅணுவாக ரசித்து, வளர்ச்சியைச் சுகித்து, மசக்கையில் துவண்டு, மூச்சுமுட்ட வயிறு பெருத்து, நிறை மாசமாகிப் பெற்றுப் பிழைத்துப் பூச்செண்டு மாதிரி கைநிறையக் குழந்தையை வாரியெடுத்து - அதன் தேவலோக வாசனையை உயிரெல்லாம் ஸ்வீகரிக்கும் வரம். இந்த இப்பிறவியில் கிடைக்குமா? பட்டாம்பூச்சியை - கண்திறக்கும் பாப்பாவைத் தரிசனம் செய்தால் பண்ணிய பாவமெல்லாம் கரையாதோ?
அன்றைக்கொரு நாள் பேருந்தில் கைக்குழந்தையோடு உட்கார்ந்திருந்தவளிடம் தயக்கமாகக் கேட்டு அவளின் குழந்தையை, உடம்பு நெகிழ நெகிழ மடியில் தாங்கிக்கொண்ட அந்த அஞ்சு நிமிஷத்தில் தலையோடு காலாகப் புல்லரித்தது. தொடைகள் வழவழத்தன. கண்ணீர் பொங்கியது. பரவசத்தில் லேசாய் ஒன்றுக்குக் கூடப் போய்விட்டது எனக்கு. குழந்தை… குழந்தை! என் மடியில் ஒரு குழந்தை என்று சந்தோஷத்தில் ஜுரமே வந்துவிட்டது.
என்னுடைய நினைப்பு தெரிந்த சமீப நாட்களாக அம்மாவுக்கு இந்தக் கவலை வேறு வயிற்றில் புளிகரைக்கிறது.
"அப்படி ஏதும் பண்ணிடாதேடீ. மானமே போயிடும்…" அம்மா மனசுக்குள் அரற்றுவது - சுவாசம் வழியாக வெளியேறி கல்யாணலட்சுமியின் காதுக்குக் கேட்கிறதுதான். ஆனால், வேறுவழி?
'மதுரை அத்தை பொண்ணுக்கு ரெட்டைக் குழந்தைங்க பொறந்திருக்கே… அவளை வேணும்னா கேட்டுப் பார்க்கலாமா?'
ஆயத்தக் குழந்தையா என் தேவை? தத்தெடுத்ததைவிடப் பெத்தெடுக்கும் சுகத்துக்குதானே ஒற்றைக்கால் தவமிருக்கிறேன்? நானே கருத்தரித்து, வித்து தாங்கி, மார்னிங் சிக்னெஸ்ஸில் கிறுகிறுத்து, குமட்டி, வாந்தியெடுத்து, வலியெடுத்துப் பெற்றுப் பால் கொடுக்க, முலைக்காம்பை அது கடிக்கும்போது கிடைக்கும் சுகவலியை ஸ்வீகரிக்க, நானே பெற்றெடுக்கும் சுகம்தானே என் தேடல்? பிரசவவலி என்னைப் பிழிந்தெடுக்க வேண்டும். உயிர் ஜனனத்துக்காக உடல் முறுக்க வேண்டும். வியர்க்க வேண்டும். விறுவிறுக்க வேண்டும். வெள்ளை முத்தாகப் பால் சொட்ட வேண்டும். ரோஜா இதழால் குழந்தை சப்பிக் குடிக்க வேண்டும். குளுகுளுவென்று உடம்பு முழுசும் குற்றாலம் குடியிருக்க வேண்டும்.
என்னை நானே தாய்மையில் குளிப்பாட்டிக்கொள்ள வேண்டும். எனக்கு நானே தரும் வரம் அது. எனக்கு நானே சூட்டிக் கொள்ளும் கிரீடம் அது. என் நேசத்தின் நீட்சி அது. என் பாசத்தின் பரப்பளவு அது. என் உயிரைச் சுமந்திருக்கும் ஜீவப்பெட்டகம் அது.
சமூகம் என்னைப் பிய்த்துச் சுவைத்து மென்று தின்று துப்பினாலும் பரவாயில்லை. எல்லா வாசலும் அடைக்கப்பட்ட சமூகக் கல்லறையில் எனக்கான சுவாசக்குழாயை நானே அமைத்துக் கொண்டது நியாயம்தான். மனைவி வரம்தான் மறுக்கப்பட்டது. அம்மா அவதாரம் எனக்கு நானே தரும் வரம். ஒற்றை மனுஷியாக்கி என்னைச் சுண்ணாம்புக் காளவாய்க்குள் தள்ளியவர்களுக்கு நான் தரும் அக்கினிக் குளியல். கட்டங்களுக்குள் சிக்கிய சகதிச் சமூகத்தை நசுக்க வந்த தேவன் என் வயிற்றுக்குள் கோயில் கொண்டிருக்கிறான்.
"என்ன மேடம்? பூரிப்பாயிருக்கீங்க? கல்யாணம் நிச்சயமாயிருச்சா?"
"ம்ஹும். கர்ப்பம் நிச்சயமாயிருச்சு…"
அதிர்ச்சியில் குளித்தாள் கேள்வியை எழுப்பியவள். நிறைவாகச் சிரித்தாள் கல்யாணலட்சுமி.
காட்சி மூன்று "பொண்ணு கல்யாணம் பத்திக் கொஞ்சம்கூடக் கவலையில்லாமல இருக்கேளே…"
"என்னடி பண்ணட்டும்? அவ கொடுப்பினை அவ்வளவுதான். களத்திரம் சுத்தமில்ல. தோஷம் நல்லதுக்குதான்னு வெச்சுக்க. அவ சம்பாத்யம் வேணும்டி. ஒருகால பூஜைகூட இல்லாத கோயில் சம்பாவனைல மூணு ஜீவனம் நடக்குமாடி…"
பூட்டிய கதவு தாண்டிக் காதுக்குள் நுழைந்த வார்த்தைகளின் குணம், மணம், தன்மை கல்யாணலட்சுமிக்கு அடையாளம் தெரிந்தது. கதவு திறந்தாள் அம்மா.
"வந்துட்டியாடி? பாலை வார்த்தே… பஸ் ஸ்டாண்டிலே வந்து பார்க்கறதுக்கு அப்பா கிளம்பிண்டிருக்கார்…"
"…………."
"முகம் ஜொலிக்கிறதே, பிரமோஷன் கிடைச்ச மாதிரி…"
"பிரமோஷன்தான்…"
"நிஜம்மாவாடீ?"
"ம்… மாமனார்-மாமியார் ஆகாமலே நீங்க தாத்தா-பாட்டி ஆகப்போறீங்க…"
"அடிப்பாவி… நினைச்சதைப் பண்ணிட்டியே. குடிமுழுகிடுச்சே. அருவருப்பா இல்லியா? ஏன்னா… இங்க சித்த வாங்கோ…" பதறினாள் அம்மா.
களத்திர ஸ்தானாதிபதி சரியில்லையென்றால் புத்திர ஸ்தானாதிபதி சரியாயிருக்க முடியாதா? சரிபண்ண முடியாதா?
புத்திர ஸ்தானத்தை நானே ஸ்புடம் போட்டுக் கொண்டேன். விதை நெல் - கடன் வாங்கி.
நவாம்சம், ராசிக் கட்டம் எல்லாவற்றிலும் ஸ்டெதஸ்கோப்பும் ஊசியும் உட்கார்ந்திருக்கும் புது ஜாதகம் இது. ஊசியே என் கணவன். டாக்டரே தரகர். வயிற்றில் நீந்தும் இரவல் வித்து… என் உடம்பு முழுசும் சொர்க்கத்தைக் காப்பியம் எழுதுகிறது.
அம்மா, அப்பா என்று இரண்டு முகம்கொண்ட புது அம்மன் நான். ஜாதகமாம் ஜாதகம். பொல்லாத ஜாதகம்.
ஆண்டாள் பிரியதர்ஷினி |