ஆண்டாள் பிரியதர்ஷினி
சிநேகமே தருகிறேன்
சிலுவையில் அறைபவர்களுக்கும்

உயிர்த் தெழுகிறேன்
மரிக்கும் போதெல்லாம்

என்னைப் புனிதமாக்குகிறார்கள்
அவர்கள்...
வாழ்க என் எதிரிகள்

உயிரோடு இருக்கிறேன்
எதிரிகளால்...


என்பதுபோன்ற கவிதைகள் மூலம் தன்னைக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் ஆண்டாள் பிரியதர்ஷினி. எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பிற முகங்களும் இவருக்கு உண்டு. இவர், அக்டோபர் 05, 1962ல், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், புலவர் நெல்லை ஆ. கணபதி - சுப்புலட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை, தாய் இருவருமே எழுத்தாளர்கள், கவிஞர்கள். ஆண்டாளின் மீதான பற்றாலும், இந்திராகாந்திமீது இருந்த மதிப்பாலும் மகளுக்கு ஆண்டாள் பிரியதர்ஷினி என்ற பெயரைச் சூட்டினர். ஆண்டாளுக்கும் இளவயதிலேயே எழுத்தின் மீது ஆர்வம் முகிழ்த்தது. தந்தையிடம் சந்தக் கவிதைகள் எழுதக் கற்றார். பாரதியார் கவிதைகள் இவருள் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தின. பள்ளிப்படிப்பை முடித்ததும் எதிராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர், அண்ணா பல்கலையில் எம்.ஃபில். முடித்தார். தங்கப்பதக்கத்துடன் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் எழுதத் துவங்கிவிட்டார். சுஜாதா இவரது கவிதைகளை கணையாழியின் கடைசி பக்கங்கள் மூலம் கவனப்படுத்தினார். தினமலர், விகடன் போன்றவற்றில் இவரது கவிதைகள் வெளியாகி வாசக கவனம் பெற்றன. பல கவியரங்குகளிலும் பேச்சரங்குகளிலும் கலந்து கொண்டார்.

"பாரதி
மீண்டும் பிறக்க நீ தயார் என்றால்
உன்னைச் சுமக்க
என் கருப்பை தயார்"


என்ற பொருளில் இவர் வாசித்த கவிதை வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒரு சேரப் பெற்றது. தொடர்ந்து இவர் எழுதிய கவிதைகளாலும் அதன் புரட்சிகரமான கருத்துக்களாலும் பரவலான கவனம் பெற்றார். கவிஞர் வைரமுத்துவும் தன்னைக் கவர்ந்த பேச்சாளர்கள் வரிசையில் ஆண்டாள் பிரியதர்ஷினியைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். கணினி பரவலாகாத அக்காலத்தில் இவர் எழுதிய "எலிகளின் ராஜ்ஜியம்" என்ற கவிதையை வெகுவாகப் பாராட்டிய சுஜாதா, "காலத்திற்கு ஏற்றாற் போல் கவிதை தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆண்டாள் பிரியதர்ஷினி இன்னும் பல உயரங்களைத் தொடுவார்" என்று குறிப்பிட்டு ஊக்குவித்தார்.

Click Here EnlargeUPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தொலைக்காட்சியில் பணிபுரியத் துவங்கினார். அதுவும் இவரது வளர்ச்சிக்குத் துணை நின்றது. கவிதைகளோடு சிறுகதை, கட்டுரை, நாவல் என்று எழுதிக் குவித்தார். ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகிப் பாராட்டுக்களையும் பரிசுகளையும் குவித்தன. இலக்கியச் சிந்தனைப் பரிசு உட்பட பல்வேறு பரிசுகள் இவரைத் தேடிவந்தன. விகடனில் வெளியான 'தோஷம்' சிறுகதை லில்லி தேவசிகாமணி விருது பெற்றது. இலக்கியச்சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதையாக 'கழிவு' தேர்ந்தெடுக்கப்பட்டது. 'உண்டியல்' சிறுகதைக்காக பாவலர் முத்துசாமி விருதுபெற்றார். 'அவனின் திருமதி', 'தீ', 'பூஜை' போன்ற சிறுகதைகள், முத்திரைச் சிறுகதைகளாக ஆனந்த விகடன் வைர விழாவில் பரிசுபெற்றன. 'கற்பெனப்படுவது...' என்னும் சிறுகதை, 'கற்பு' என்ற பெயரில் பெண்களுக்கு ஏற்படும், ஏற்படுத்தப்படும் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது. 'வானவில் வாழ்க்கை' ஓவியக் கல்லூரியில் நிர்வாண மாடலாகச் செல்லும் பெண்ணின் வாழ்வியல் அவலத்தைச் சொல்கிறது. தந்தையைப் பெற்றபிள்ளைகள் கைவிட்டுவிட, அவருக்கு மூத்த மகளே இறுதிச்சடங்கு செய்யத் துணியும் செய்கையைக் காட்டுகிறது 'தாலிக்கொடியும் தொப்புள்கொடியும்'. மனிதர்களின் செயல்களால் வெறுப்படைந்த கடவுள், மனிதர்களுக்குக் கடிதம் எழுதினால் என்ன எழுதுவார் என்பதை அவல நகைச்சுவையாகச் சொல்கிறது 'கடைசிக் கடிதம்.' 'தோஷம்', 'தகனம்', 'தலைமுறை தாகம்', 'சுருதி பிசகாத வீணை', 'ரிஷியும் மனுஷியும்', 'வானவில் வாழ்க்கை', 'சரஸ்வதியின் சிலுவை' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகளாகும். சிறுகதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 'ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சில சிறுகதைகள் நாடகமாகவும் மேடை ஏறியுள்ளன.

'தகனம்', 'கனவுகள் கைப்பிடிக்குள்', 'முதல் ஒளிபரப்பு ஆரம்பம்', 'தாளம் தப்பிய தாலாட்டு' போன்றவை இவரது நாவல்களாகும். 'சிகரம் சிலந்திகளுக்கும் எட்டும்', 'கதாநாயகி', 'சாருலதா', 'வேடிக்கை மனிதர்கள்' போன்றவை இவர் எழுதிய குறுநாவல்கள். 'மன்மத எந்திரம்' கவிதைத் தொகுப்பு சூழலால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் பெண்களின் தாய்மையை, பாச உணர்வையும் படம்பிடிக்கிறது. 'சுயம் பேசும் கிளி', 'புதிய திருப்பாவை', 'தோகையெல்லாம் துப்பாக்கிகள்', 'முத்தங்கள் தீர்ந்துவிட்டன', 'சூரியனை விடிய வைப்போம்', 'காதல் நாற்பது', 'நான் வல்லினம்' போன்றவை இவரது முக்கியமான கவிதைத் தொகுப்புகளாகும். 'பெண் எழுத்து', 'விடிவைத் தேடி', 'தேசம் மிச்சமிருக்கட்டும்', 'இவர்களும் நானும்' போன்றவை கட்டுரைத் தொகுதிகள். 'பெண் வாசனை' பெண் கவிஞர்களைப் பற்றிய தொகுப்பாகும். குறும்படங்களையும் இவர் தயாரித்திருக்கிறார். திருநங்கைகளைப் பற்றி இவர் எழுதிய குறும்படம் பல திருநங்கைகளை அவர்களது உறவோடு பிணைத்து வைத்திருக்கிறது. இவர் எழுதிய 'சாண அடுப்பும் சூரிய அடுப்பும்' நூலுக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்துள்ளது.

கவிதைகளுக்காக கவிஞர் வைரமுத்து விருது, நாகப்பன் ராஜம்மாள் விருது போன்ற விருதுகள் பெற்றிருக்கிறார். சிறுகதைக்காக திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும், நாவலுக்காக காசியூர் ரங்கம்மாள் விருதும் பெற்றவர். பாரத ஸ்டேட் வங்கி விருது, தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். தேனீ இலக்கியக் கழகம் இவருக்கு 'கவிச்செம்மல்' பட்டம் வழங்கியுள்ளது. நெல்லை இலக்கிய வட்டம் 'எழுத்துலகச்சிற்பி' என்ற பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். சாகித்ய அகாதமியின் 'பெண் எழுத்தாளர்கள் படைப்புகள்' தொகுதியில் இவரது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகள் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆண்டாள் பிரியதர்ஷினி, சிறந்த திரைப்படப் பாடலாசிரியரும் கூட. ஏன் ஆண்களைப் போல பெண்களால் நிறைய எழுதுவது சாத்தியமாவதில்லை என்ற கேள்விக்கு ஆண்டாள் பிரியதர்ஷினி, "ஆண் எழுதும்போது அவனுக்கெனத் தனியறை, டீ போட்டுத் தர மனைவி, தொந்தரவு செய்யாத அழைப்பு மணி, குக்கர் விசில், கீரைக்காரம்மா, குழந்தைகளின் அழுகை இல்லாத சூழல் கிடைக்கும். குழந்தை கேவிக்கேவி அழுதாலும், 'ஏய், இந்தச் சனியன் ஏன் அழுவுது பாரு. மனுசனை ஒரு வார்த்தை எழுதவிடறீங்களா?' என்று சிடுசிடுக்கமுடியும், இடத்தைவிட்டு நகராமலேயே! குழந்தையை அழ விட்டுவிட்டு, எந்தப் பெண்ணாலும் பேனா பிடிக்க முடியாது. 'அம்மா பசிக்குது' என்ற வார்த்தைக்குச் சோறு போடாமல், அடுத்த அட்சரம் எழுத முடியாது. 'வீட்டில ஆயிரம் வேலை. எதையும் கவனிக்காம என்ன எழுதி என்ன ஆகப்போகுது?' என்கிற குத்தல் குரல்களும் கேட்கும். ஆண் எழுதினால் வெட்டி வேலை இல்லை; பெண் எழுதினால் வெட்டி வேலை என்கிற சமூக சிந்தனை எவ்வளவு குரூரம்..." என்று சுட்டிக் காட்டுகிறார்.

"மனைவி எழுதுபவளாக இருந்தாலும், எந்தக் கணவனும் அவளை மகாராணியாக நினைத்து வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதில்லை. குடும்பப் பொறுப்பிலிருந்து ஆசுவாசம் தருவதில்லை. 'என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியாது. என் வீட்டின் குடும்பப் பொறுப்பு, பொருளாதாரம், குழந்தைகள் கவனிப்பு எல்லாமே என் கணவர்தான் பார்த்துக் கொள்கிறார். அதனால்தான் என்னால் எழுத முடிகிறது.' என்று எந்தப் பெண் படைப்பாளியும் சொல்லமுடியாது." என்று ஆண்டாள் பிரியதர்ஷினி சொல்வது, "பெண் படைப்பாளிகள் அதிகம் இல்லை; அவர்கள் அதிகம் எழுதுவதில்லை" என்று மட்டம் தட்டும் ஆண் எழுத்தாளர்கள் சிந்திக்கவேண்டிய கருத்தாகும்.

"பெண் ஓர் இல்லறத் துறவி
பனிக்குட நீரே அவளின் அபிஷேக நீர்
கருவறையே சாமி குடியிருக்கும் கருவறை
தாய்ப்பாலே பாலாபிஷேகம்
தொப்புள் கொடியே அவளுக்கான ருத்ராட்ச மாலை
இல்லறமே அவளின் துறவறம்.


என்று ஆண்டாள் பிரியதர்ஷினி சொல்வது முற்றிலும் உண்மை.

காந்தியடிகளின் 'சத்திய சோதனை' புத்தகத்தை தற்காலத்திற்கேற்றவாறு எளிய தமிழ்நடையில் இவர் மொழிபெயர்த்துள்ளார். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலும்கூட. நடிகர் கமல்ஹாசன் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். தற்போது பொதிகைத் தொலைக்காட்சியின் கோவை மற்றும் மதுரை நிலையத் தலைவராகப் பணியாற்றிவரும் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவர் பால ரமணியும் சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர். இவர், பொதிகைத் தொலைகாட்சியின் நிலைய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பாரதி, பெரியார் இருவரது சிந்தனைகளுமே தன்னை வழிநடத்துகின்றன என்கிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி. andalpriyadarshini.blogspot.in என்பது இவரது வலைப்பதிவு.

அரவிந்த்

© TamilOnline.com