தென்றல் பேசுகிறது
ஜனநாயகம், சமத்துவம், தனிநபர் உரிமைகள், சுதந்திரம் என்று எல்லாவற்றிலும் முன்னோடியாக நின்று வரம்புகளை நகர்த்திக்கொண்டே போகின்ற ஆதர்ச நாடென்று சொல்லுமளவுக்கு அமெரிக்கா இருக்கிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கர் அதிபராக வரமுடியாது என்று தீர்மானமாக எண்ணிய காலம் உண்டு. அமெரிக்க மக்கள் அதைப் பொய்யாக்கினார்கள். இந்தியா, இலங்கை, இஸ்ரேல், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட உலகின் பல நாடுகளிலும் நாட்டின் தலைமைப் பதவியைப் பெண்கள் அலங்கரித்திருக்கிறார்கள். தமது பொறுப்பைத் திறம்படவே செய்து, ஐயப்பட்டோரை நாண வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை அமெரிக்காவின் வெள்ளைமாளிகைக்குள் அதிபராக ஒரு பெண் நுழையவில்லை என்பது உண்மை. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் ஹிலரி கிளின்டன் முதன்மை நிலை பெற்றுவருவது, இந்தப் பழியைத் துடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஹிலரியின் திறமைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை. இது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதம். இந்த மாதத்தில் அனைத்துப் பெண்களும் திறமிக்க ஹிலரியை ஆதரிப்பதென்று தீர்மானித்துவிட்டால், அவரது இறுதி வெற்றிக்கு அதுவே ஆதாரமாக அமையும். அமையவேண்டும். கட்சி வேறுபாடுகளைக் களைந்து இதைப் பெண்கள் செய்ய முன்வரவேண்டும்.

*****


'கற்றலிற் கேட்டலே நன்று' என்பது மூத்தோர் சொல். நேரத் தட்டுப்பாடு அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் புத்தகம் வாசிப்பதே அரிதாகி வருகிறது. ஒரு கையில் புத்தகமும் மற்றொரு கையில் தேநீரும் வைத்துக்கொண்டு ஓய்வாக ரசித்துச் சுவைப்பது ஒரு சுகம்தான் என்றாலும் அது இப்போதெல்லாம் முடிவதில்லை. காரில் நெடுநேரம் அலுவலகத்துக்குப் போகும்போதோ, உடற்பயிற்சிக்காக நடை பழகும்போதோ ஒலிநூலைக் கேட்பது மிகப்பரவலான வழக்கமாகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே தென்றல் தனது எல்லாப் பகுதிகளையும் ஒலிப்பதிவு செய்தும் வழங்கிவருகிறது. ஒலிநூல் என்று சொல்லும்போது, நமது சிந்தனைகளை மாற்றியமைத்த மிக முக்கியமான நூல்கள் பல இலவச ஒலிநூல்களாக இணையத்தில் கிடைக்கிறது என்பது நினைவுக்கு வருகிறது. 'Think & Grow Rich', 'The Magic of Believing, Malcolm Gladwell's 'Outliers', 'Tipping Point' போன்றவை யூட்யூபில் ஒலிவடிவத்தில் கிடைக்கின்றன. சில நூல்களுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி உண்டு. கேட்டுப் பாருங்கள், நீங்களே உணர்வீர்கள்.

*****


தமிழர் ஒருவர் ஆஸ்கர் பரிசு பெற்றிருக்கிறார்! ஒரு படத்தில் ஏதோவொன்றைச் செய்ததற்கல்ல. ஒட்டுமொத்தத் திரைத்துறையையே அனிமேஷன் தொழில்நுட்ப மென்பொருள் மூலம் வெகுதொலைவு முன்னே கொண்டு சென்றதற்காக. தணியாத ஆர்வமும், திறமையும் உந்தித்தள்ள, கொட்டலங்கோ லியான் பிடிவாதமாக இந்தத் துறையில் இருபதாண்டுக் காலமாகப் பங்களித்து வந்தது வீண் போகவில்லை. 2016ல் அவரையும் அவரது இரண்டு சகாக்களையும் அழைத்து விருது கொடுத்திருக்கிறது அகாடமி. அவரது நேர்காணல் தென்றலுக்குப் பெருமை சேர்க்கிறது. மரத்தச்சர் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கு நம்பற்கரிய எதார்த்தத்தோடு கிராமிய ஓவியங்களைத் தீட்டி அசர வைக்கிறார் ஓவியர் இளையராஜா. சினிமா, பத்திரிக்கை வாய்ப்புக்களைக்கூட இரண்டாம்பட்சமாக எண்ணும் இவரது கூர்த்த கவனம் எதார்த்த ஓவியம் தீட்டுவதிலே மட்டுமே இருப்பதால் அதன் சிகரங்களையும், ரசிகர் இதயங்களையும் தொடுவதில் பெருவெற்றி பெற்றிருக்கிறார். இவரது நேர்காணல் நிச்சயம் உங்களைக் கவரும். இன்னும் பல சாதனையாளர்களைச் சுமந்து உங்களைச் சந்திக்கிறது இந்த மாதத் தென்றல். வாசியுங்கள், வசீகரிக்கப்படுங்கள்.

மகா சிவராத்திரி, பன்னாட்டு மகளிர் நாள் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

மார்ச் 2016

© TamilOnline.com