டிசம்பர் 20, 2015 அன்று ரிச்மண்ட் கொலிஜியேட் பள்ளியில் அமைந்துள்ள ஓட்ஸ் அரங்கில் செல்வி. ஆரத்தி ஞானோதயனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. திருமதி. உமா செட்டி அவர்களின் தலைமையில் இயங்கிவரும் ரிச்மண்ட் "அப்சரஸ் ஆர்ட்ஸ் நடனக்குழு" பரதநாட்டியப் பள்ளியில், திருமதி மீனா வீரப்பனிடம் எட்டு ஆண்டுகளாகப் பயின்று வருகிறார். இது குரு மீனா வீரப்பன் மற்றும் பாடகர்கள் நாராயணன், ஆர்த்தி ஆகியோருக்கும் அரங்கேற்ற நிகழ்ச்சியாக அமைந்தது.
நிகழ்ச்சி, திரு. டி.ஆர்.எஸ். அவர்களின் 'நிகமவேத வேத்யம்' என்ற ஹம்சத்வனி ராக விநாயகர் கிருதியில் தொடங்கியது. பின்னர் கலாக்ஷேத்ரா நாட்டிய சுலோகத்தை அடுத்து, முதல் நடன உருப்படியாக பத்மஸ்ரீ சுதாராணி ரகுபதி இயற்றிய 'ஜெயஜெய சம்போ' என்ற ராகமாலிகையை ஆடலரசனுக்குச் சமர்ப்பித்தார். பின் ஆரபி ராக ஜதிஸ்வரத்தை அழகாக வழங்கினார்.
பாபநாசம் சிவன் அவர்களின் தன்யாசி ராகத்திலமைந்த “நீ இந்த மாயம்” பதவர்ணத்துக்கு ஆரத்தி தன்னை ஒரு கோபிகையாக அபிநயித்து, கண்ணன்மீதான காதலைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் வழங்கிய அடவுகளும், சஞ்சாரியும், பாவங்களும் வந்தோர் மனங்களை மகிழ்வித்தன. தொடர்ந்து கேதார கௌளையில் “ஆனந்த நடமிடும் பாதன்” கீர்த்தனைக்கு அற்புதமாக ஆடினார்.
கவியரசு கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையமைத்த “ஆயர்பாடி மாளிகையில்” பாடலை அக்கா சிவாந்தி பாட, ஆரத்தி தன் காலஞ்சென்ற பாட்டியாருக்கு அஞ்சலியாக அதைப் படைத்து அவையோர் மனத்தை நெகிழவைத்தார். மகாகவி பாரதியாரின் “வெள்ளை தாமரை பூவில்” என்ற பீம்பளாஸ் ராகப் பாடலுக்கு ஆடியது பரவலாக போற்றப்பட்டது. பிருந்தாவன சாரங்க ராகத் தில்லானா, தொடர்ந்து மங்களம் மூலம் நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.
ஆரத்தி ஹென்ரைக்கோ உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவியாவார். இசைக்குழுவினரான நாராயணன் சுப்ரமணியன் (வாய்ப்பாட்டு), ஆர்த்தி கல்யாணராமன் (வாய்ப்பாட்டு), சிவாந்தி ஞானோதயன் (வாய்ப்பாட்டு), மீனா வீரப்பன் (நட்டுவாங்கம்), சுதீந்திர ராவ் (மிருதங்கம்), பார்த்தா ஆஜி (புல்லாங்குழல்), பிரபா தயாளன் (வீணை) ஆகியோர் நிகழ்ச்சிக்கு தம் இசையால் வலுவூட்டினர். ஆரத்தியின் கர்நாடக இசை குருவான நாராயணனும், தமக்கை சிவாந்தியும் பாடியது குறிப்பிடத்தக்கது. ஆரத்தி தமிழில் அழகாகத் தொடங்கி நன்றியுரை ஆற்றினார்.
நாகு பரசு, ரிச்மண்ட், வர்ஜினியா |