வடமேற்கு அர்க்கான்சாஸ்: 'மண்வாசனை'
ஜனவரி 9, 2016 அன்று வடமேற்கு அர்க்கான்சாஸ் தமிழ்மக்கள் 'மண்வாசனை' பொங்கல்விழாவை ரோஜர்ஸ் உயர்நிலைப்பள்ளி அரங்கில் கொண்டாடினர். பென்ட்டன்வில் மற்றும் ரோஜர்ஸ் தமிழர்களின் கைவண்ணத்தில் அரங்கம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவின்மூலம் தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 32,000 டாலர் திரட்டப்பட்டது.

இம்முறை இந்தியாவில் இருந்து தருவித்த தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட 16 வகை உணவுகளை சுமார் 1250 பேர் சுவைத்தனர்.

தென்தமிழ்நாட்டு கிராமத்தை நினைவூட்டும் வகையில் கருமாரியம்மன் கூழ்க்கடை, வளையல் கடை, மருதாணிக் கடை ஆகியவை அமைத்திருந்தன. NWA பென்ட்டன்வில் அமெரிக்க விவசாயி குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. நமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இவை அமைந்திருந்தன. உழவர்களின் சூரிய வழிபாடு, குறவஞ்சி நடனம், பரதம், தெருக்கூத்து மற்றும் விளக்கு நடனங்கள் பார்த்தோரை மெய்மறக்க வைத்தன. சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டி, நட்சத்திர சமையல் போட்டி, சூப்பர் சிங்கர் போட்டி மற்றும் தமிழ்க் கவிதை போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பென்ட்டன்வில் மண்வாசனை அமெரிக்காவாழ் தமிழரிடையே பிரசித்தி பெற்ற பொங்கல் விழா என்று சொன்னால் மிகையல்ல. மற்ற மாநிலங்களில் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கும் மண்வாசனை சந்தை மற்றும் கலைக்குழுவினருக்கு வரும் அழைப்புகளே இதன் வெற்றிக்குச் சான்று .

மாதவன் சோமசுந்தரம்,
ரோஜர்ஸ், அர்க்கான்சாஸ்

© TamilOnline.com