STF: திருக்குறள் போட்டி
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் (STF) சார்பில் 9ம் ஆண்டு திருக்குறள் போட்டி இரண்டு கட்டமாக DFW கோவில் மற்றும் ஆல்ஃபா மான்டிசோரி பள்ளி வளாகங்களில் முறையே ஜனவரி 9 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் ப்ளேனோ தமிழ்ப்பள்ளியில் தன்னார்வ ஆசிரியையாகப் பணியாற்றும் முனைவர். சித்ரா மகேஷ், 1330 குறட்பாக்களையும் ஐந்துமணி நேரத்தில் சொல்லிச் சாதனை படைத்தார்.

ஆல்ஃபா பள்ளி வளாகத்தில், காலை 9 மணிக்கு 'அகர முதல எழுத்தெல்லாம்' என ஆரம்பித்துப் பொருட்பாலின் 700 பாக்களை இரண்டரை மணி நேரத்தில் கூறி முடித்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு, அறத்துப்பாலை ஒன்றரை மணி நேரத்திலும் காமத்துப்பாலை ஒருமணி நேரத்திலும் சொல்லிமுடித்தார்.



திருக்குறள் போட்டியில் குழந்தைகள் பிரிவில் சீதா (778 குறட்பாக்கள்), நந்தினி இளங்கோவன் (350) இருவரும் பொருளுடன் கூறி சாதனை படைத்தனர். அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து 13 குழந்தைகள் பரிசுபெற்றனர். மொத்தம் 54 குழந்தைகள் 'ஒரு குறள் ஒரு டாலர் பரிசு' பெற்றனர்.

அவ்வை அமுதம் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து 32 குழந்தைகள் பரிசுபெற்றனர். ஆத்திசூடி 24, நல்வழி 4, மூதுரை 4, கொன்றை வேந்தன் 5, தமிழ்க் கட்டுரை 4, தமிழ்ப் பேச்சு 10 என மொத்தம் 51 பேர் பங்கேற்றனர். வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.

முனைவர் சித்ரா மகேஷ், பெரியவர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அறக்கட்டளைக்கும், அனைத்துத் திருக்குறள்களையும் படிக்கமுடியும் என்று முன்மாதிரியாக விளங்கும் கீதா அருணாச்சலத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

வெள்ள நிவாரணப் பணி:
சென்னை வெள்ளத்தின்போது, அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு குழுக்களுடன் இணைந்து பல லட்சம் மதிப்பிலான நிவாரணப் பணிகள் நடைபெற்றன. நிவாரணப்பணி விவரங்களை பாஸ்கர், அருண்குமார், விசாலாட்சி, வேலு ராமன் மற்றும் பழநி சாமி விவரித்தார்கள். விசாலாட்சி வேலு வரவேற்புரை ஆற்றினார். கல்பனா ரவிசங்கரின் ஈஸ்வர் நாட்டியாலயா குழுவினரின் சிறப்பு நடனம் இடம்பெற்றது. பழநி சாமி மற்றும் ஜெய்சங்கர் தொகுத்து வழங்கினார்கள். டாக்டர். ராஜ் மற்றும் டாக்டர். தீபா, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி, நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர். அண்ணாமலை நன்றி கூறினார். அருண்குமாரின் ஒருங்கிணைப்பில் தன்னார்வத் தொண்டர்கள் போட்டி மற்றும் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தமிழ் ஆராதனை:
ஜனவரி 23ம் தேதி, ஆலன் நூலக அரங்கில் நடைபெற்ற அறக்கட்டளையின் தமிழ் ஆராதனை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற. யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ்–ஆஸ்டின் பேராசிரியர் டாக்டர். ராதாகிருஷ்ணன், தமது பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப, தமிழை மொழியாகவோ, தமிழ்ப் பண்பாடு வரலாற்றுப் பாடமாகவோ பயிற்றுவித்து வருவதாக கூறினார். இவற்றுக்கு பல்கலைக்கழகத்தின் மதிப்பெண்கள் உண்டு. அங்கு பயின்ற ஒரு அமெரிக்க மாணவர் திருவாசகத்தை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றதையும் தெரிவித்தார். மேலும் தற்போது ஓர் அமெரிக்க மாணவர் 'தமிழில் தூது இலக்கியம்' பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாகக் கூறினார். தமிழ் மொழியைக் கட்டாயம் தமிழில் படிக்க வேண்டும். ஆனால் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வரலாறு போன்றவற்றை ஆங்கிலத்திலேயே படித்துக்கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார்.

சின்னமணி,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com