அபிராமி கலைமன்றம்: 'சிவகாமியின் சபதம்'
பிப்ரவரி 27, 2016 சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு ரெட்வுட் சிடி கானடா காலேஜ் வளாகத்தில் 'சிவகாமியின் சபதம்' சரித்திர நாடகத்தை அபிராமி கலைமன்றம் வழங்குகிறது. அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சியாகும் இது. அமெரிக்கக் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபௌண்டேஷன் தன்னலமின்றி ஆர்வத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக நிதி திரட்டி அடையார் கேன்சர் மையத்திற்கு அளித்துவருகிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகளும், முதியவரும், ஏழைகளும் இந்நிலையத்தில் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், கட்டடம் மற்றும் மருத்துவ வசதிகளை வலுப்படுத்தவும் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபௌண்டேஷன் நிதிவழங்குகிறது.

கல்கி அவர்களின் அமர காவியமான 'சிவகாமியின் சபதம்' சென்ற ஆண்டு ஜூலைமாதம் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டில் அபிராமி கலைமன்றம் வழங்கியது. மீண்டும் விரிகுடாப்பகுதி மக்களுக்காக 2½ மணி நேரத்தில் வழங்கப்பட இருக்கிறது.

திருமதி. பாகீரதி சேஷப்பன் இயக்கத்தில், திரு. ஸ்ரீதரன் மைனர் இசையில், திரு. வேணு சுப்பிரமணியம் மேடை நிர்வாகத்தில் 'சிவகாமியின் சபதம்' மீண்டும் மேடையேறுகிறது. அரங்க அமைப்பினை திருமதி. நித்தியவதி சுந்தரேஷும், திருமதி. ஹர்ஷிதாவும் செய்கிறார்கள். திருமதி. சாந்தி புகழ் உடையலங்காரமும், திரு. சிவசுப்பிரமணிய ராஜா சண்டையமைப்பும் செய்திருக்கிறார்கள்.

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமான்ட். கலிஃபோர்னியா

© TamilOnline.com