திவ்யா சந்திரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் பரீமாண்ட் ஓலோன் காலேஜ் ஜாக்சன் அரங்கில் ஆகஸ்ட் 27, 2005 அன்று மாலை நடைபெற்றது.
'ஏராநாபை' தோடி ராக வர்ணம், தொடர்ந்து 'வாதாபி கணபதிம்' கீர்த்தனை யுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
இரண்டாவது பாடலுக்குப் பின் குரல் சூடு பிடித்து 'மாதா இன்னும் வா¡தா' (ஸ்ரீரஞ்சனி) பாடலில் கனிவு கொடுக்கத் தொடங்கியது. எடுப்பான சாரீரம், உச்சரிப்பு சுத்தம், தவறாத தாளக்கட்டுடன் பூர்விகல்யாணி ராக ஆலாபனை, 'தில்லைச் சிற்றம்பலம்' எனும் பாடல் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது. 'மருகேலரா ஓ ராகவா' பாடலை வேகமாகப் பாடி, தொடர்ந்து ரீதி கெளளையில் 'ஜனனி நின்னு வினா' கீர்த்தனையை கமகம் கொடுத்துப் பாடியது அற்புதம்.
'கலிகியுண்டே'யை (கீரவாணி) மேல் ஸ்தாயில் ஆலாபனை ஆரம்பித்து, சஞ்சாரம் செய்து, பின் கீழ் ஸ்தாயில் இறங்கும் போது சிறிது சிரமப்பட்டாலும் சமாளித்துப் பாடியது கச்சிதம். 'ஸ்ரீனிவாச கோவிந்தா', புரந்தர தாசர் பாடல் ராகமாலிகை, துக்காராமின் மராத்தி பஜனை, தில்லானா யாவும் நல்ல விறுவிறுப்பு.
நல்ல பாடாந்தரம், கற்பிக்கும் திறமை, உழைப்பு இவற்றோடு மாணவர்களை 'ராகமாலிகா'வின் இயக்குனர் ஆஷா ரமேஷ் கர்நாடக இசையில் இளம் பாடகர்களை உருவாக்கி வருவது பாராட்டத்தக்கது. வயலின், மிருதங்கம் வாசித்த சாந்தி, நாராயணன் நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர்.
சீதா துரைராஜ் |