சொல் என்ன செய்யும்?
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக வகுப்பறைக்குச் சென்று, "நீ என்னை மதிக்கவில்லை. அப்படி என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்னை ஏன் வரவேற்கவில்லை?" என்று கேட்டார். "நான் மாணவர்களுக்குச் சில நல்ல விஷயங்களைக் கற்பித்துக்கொண்டு இருக்கிறேன், அதனால்தான்" என்றார். "நீ நல்லதைக் கற்பிப்பதால் இவர்கள் மனம்மாறிப் புனிதர்களாகி விடுவார்களா?" என்று கேட்டார் வந்தவர்.

"ஆமாம், நிச்சயம். எனது போதனையால் அவர்களது மனம் மாற்றமடையும்" என்றார் குரு. "என்னால் நம்பமுடியாது" என்றார் வந்தவர்.

"உங்களால் நம்பமுடியவில்லை என்றால் அதன் பொருள் உங்களுக்கு விசுவாசமில்லை என்பதே. அதற்காக நான் இவர்களுக்கு நல்லதைச் சொல்லாமல் இருக்க முடியாது." தன்னை மிகவும் முக்கியஸ்தராகக் கருதிய அந்த மனிதர், வெறும் வார்த்தைகளால் யார் மனதையும் மாற்றமுடியாது என்று விவாதிக்கத் தொடங்கினார். மிகவும் கெட்டிக்காரரான குரு, ஒரு மாணவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனிடம், "இங்கே பார், இந்த ஆளின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு!" என்று அவருடைய காது கேட்கும்படிக் கூறினார். இதைக் கேட்டதும் கோபத்தில் வந்தவரின் கண்கள் சிவந்தன. ஆசிரியரை அடிக்கக் கையை ஓங்கினார்.

"ஐயா, ஏன் உங்களுக்கு இத்தனை கோபம்? நாங்கள் உங்களை அடிக்கவோ, வெளியே துரத்தவோ இல்லையே. இந்தச் சிறுவனிடம் நான் கூறிய சொல்தான் உங்களைக் கோபப்படுத்தியது. வெறும் வார்த்தைகளால் மனதை மாற்றமுடியாது என்று நீங்கள் கூறினீர்களே. நான் இவனிடம் கூறியது வெறும் சொற்கள்தானே! அப்படியிருக்க, உங்கள் மனதைத் தொட்டு எப்படி அவை கோபம் ஏற்படுத்தின?" என்று கேட்டார் ஆசிரியர்.

வார்த்தைகளால் மனதை மாற்ற முடியாது என்று கூறுவது தவறு. வெறும் சொற்களால் எந்தப் பரபரப்பையும் ஏற்படுத்தலாம். வார்த்தைகளால் அன்பு உண்டாக்கலாம். சொற்களால் எவரது கருணையையும் பெறமுடியும்.

இவ்வுலகில் நட்பை நீங்கள் வளர்க்க விரும்பினால், இனிமையான சொற்களால், இனிய மனோபாவத்தோடு, புனிதமானவற்றைப் பேசுவதன்மூலம் அதனைச் செய்யமுடியும். கடுமையான சொற்களின்மூலம் நட்பை வளர்க்க முடியாது.

நன்றி: சனாதன சாரதி

ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com