தெய்வம் நின்று கொல்லும்
வள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். "நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிறலாம். என்னைத் தவிர...." என்றார் உன் தாத்தா.
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க பொளச்சுக்குவீங்க. எப்பவும் சொல்லுவீங்களே தர்மம் சாவாதுன்னு, நூறு வருஷமா நம்ம சனங்க அறியாமையை, வறுமையை பயன்படுத்திக்கிட்டு இந்த கரும்புக்காட்டுல அடிமைப்படுத்தி வெச்சிருந்தாங்க. ராசா நீங்க வந்தீங்க, இந்த ஆறு வருஷம் இந்த வெள்ளைத்துரைமாருங்களோடவும், கருங்காலி கண்காணி, மேஸ்திரிங்களோடவும் போராடி அம்புட்டு பேரையும் விடுவிச்சீங்க. அதுக்கும் மேலே ஆதரவில்லாம இருந்த எனக்கு வாழ்வு குடுத்தீங்க. இந்தப் பாடெல்லாம் இப்படி இந்தப் பாழும் மண்ணுலபோய் சேரத்தானா? என் ஆத்தா மகமாயி அப்படி உட்டுறமாட்டா"
"சீ பைத்தியம், இந்த உலகத்துல யாரும் சாசுவதமா இருக்கப்போறதில்லை. ஆனா, பொறப்புக்கு ஒரு பயன் இருக்கணும். நோக்கமில்லாம, அன்னியனுக்கு அடிமையா வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். உங்களோட நெருங்கிப்பழகி உங்க கஷ்டங்களைப் பாத்ததுக்கப்புறம் என் கண் தொறந்தது. என் வாழ்க்கையோட நோக்கமும் தெளிவாச்சு. என் லட்சியம் நெறைவேறிடுச்சு. இனிமே நீதான் என் நம்பிக்கையை முன்னே நடத்திட்டுப் போகணும்." "நீங்க என்ன சொன்னாலும் செய்யறேங்க..."
"இந்தியா திரும்பினதும், நீ நம்ம ஊருக்குப் போகணும். இதோ இதுவரை நாம சேத்த எல்லா பணமும் இந்தப் பெட்டியில இருக்கு. இதை வெச்சு காடு கரை வாங்கு. நம்ம சனங்க எல்லாத்தையும் சேத்துக்க. நீ இருக்கற எடத்துல அடிமை, கூலின்னு யாரும் இருக்கக்கூடாது. எல்லாருமே மொதலாளி, எல்லாருமே தொழிலாளி. நான் உன்கூட இல்லைனு சோர்ந்து போயிடாதே. உன் ஆத்மசக்தில நம்பிக்கை வை" மூச்சு வாங்கலோடு வாழ்வின் கடைசிநிமிட வார்த்தைகள் வெளிப்படவும், வள்ளி ஓவென்ற கதறலோடு "நீங்க என்னைய வுட்டு எங்கியும் போயிறமுடியாது. என்கூடவே தான் இருக்கீங்க. இருப்பீங்க. ஆமா. இங்க தொட்டுப் பாருங்க" என்று தன் வயிற்றைத் தொட்டுக் காட்டினாள் இரண்டுமாத கர்ப்பிணியான வள்ளி.
அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதை, கண்கள் பளிச்சென்று இறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. வாயோரம் ஒரு சிறு கீற்றுப்புன்னகை வெளிப்பட்டதோடு அந்த மனிதனின் ஆவி விடைபெற்றுக் கொண்டது.
"அய்யோ சாமி... என் சாமீ... போகாதே. என்ன வுட்டுப்போகாதே..." அந்த உயிரற்ற சடலத்தின் மீது அந்தக் கரும்புக்காட்டு வரப்பில் வள்ளி விழுந்து கதறினாள். வாராதுவந்த மாமணியான பதியைப் பறிகொடுத்த பதினெட்டு வயதே ஆன வள்ளியின் அலறல் அர்த்தராத்திரியில் அந்த அத்துவானக் காட்டில் இருந்த நாய்களுக்கும் நரிகளுக்கும்கூட கிலியை ஏற்படுத்தியது. சற்றுநேரத்தில் தன்நிலை தெளிந்த வள்ளிக்கு அவள் புருஷன் கடைசியாக விடுத்த வேண்டுகோளும், எச்சரிக்கையும் நினைவுக்கு வரவே, ஒரு யோகநிலைக்கு வந்தவள்போல் கணவனின் சடலத்தை மூன்றுமுறை சுற்றிவிட்டு, பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குக்கூட போகாமல் நேரே துறைமுகத்தை நோக்கிச் சென்றாள்.
கணவனைக் கொன்றவர்கள் அவளுக்கும் குறிவைத்து வீட்டுக்கு வரலாம் என்ற எண்ணம் தோன்றியதால், பாதுகாப்பாக துறைமுகத்துக்கே போய்விட்டாள். இனி இவள் வாழ்க்கை முற்றிலும் வேறு பாதையில் பயணிக்கப் போகிறது. இல்லற சுகங்களுக்கோ, சுயநல எண்ணங்களுக்கோ இனிமேல் இடம் கிடையாது. இனி ஒரு வைராக்கிய வாழ்க்கையைத் தன்னோடு கூட்டிப்போகும் மக்களுக்காக வாழப்போகிறேன், என் வயிற்றில் பிறக்கும் சிசுவையும் என் லட்சியத்துக்குத் துணையாக அமைத்துக் கொள்வேன் என்று வள்ளி தீர்மானித்துக்கொண்டாள்.
அதுவரை வள்ளியம்மாள் கதையைச் சொன்னபோது ஆர்வமாகக் கேட்டுவந்த பரத்தும், கதிரேசனும் அவள் கடைசியாகச் சொன்ன துக்க நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தபோது வேதனை அடைந்தார்கள். எவ்வளவு சிறியவயதில் எப்படிப்பட்ட துன்பங்களையும், பொறுப்புகளையும் இந்தப் பெண்மணி சுமந்திருக்கிறாள் என்று நினைத்து வள்ளியம்மாளின் மீது அவர்களின் மதிப்பு இன்னும் பலமடங்கு கூடியது. பரத் தன் பாட்டியின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டு, "ரொம்பக் கஷ்டப்பட்டுடீங்க பாட்டி. கேக்கவே ரொம்ப வேதனையாயிருக்கு. இந்தியா வந்ததும் உங்க கஷ்டமெல்லாம் போயிடுச்சா? நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் செய்துக்கலை?" என்று கேட்டான்.
மெலிதான புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு, "என் சாமியோட எடத்துல வேற எந்த ஆசாமியையும் என்னால நெனைக்கமுடியலை. விதவை மறுகலியாணம் தப்புனு சொல்லலை. எனக்கு அது அவசியமாகலை, அத்தோட என் சாமி எனக்கு வாழ்நாள் பூராத்துக்கும் சேத்து பெரிய பொறுப்பை குடுத்துட்டுப் போயிடுச்சி. அதுக்கே நேரம் சரியாயிருக்கையில கலியாணமாவது, கார்த்திகையாவது! சுதந்திரம் கிடைச்ச அதேநாள் நாங்க இந்த மண்ணுல காலடி எடுத்துவச்சோம். மூணு தலைமுறையா ஏமாந்துபோயி, வேற நாட்டுல அன்னியனுக்கு அடிமைக்கூலியா இருந்துட்டு, மறுபடி நம்ம மண்ணுல, நமக்கு நாமே எஜமானா இருக்கப்போறோம்னு நெனைக்கும்போதே எங்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் முடியும், அளந்து வார்த்தையில சொல்லிற முடியாது. அதுக்குப் பொறவு, இந்த கிராமத்தையே என் வீடா மாத்திக்கிட்டேன், என் மக்களையே சொந்தமாக்கிக்கிட்டேன். கூட்டுவிவசாயம் பண்ணி எங்க வாழ்க்கைய நாங்களே தீர்மானம் செய்துக்கிட்டோம். நாங்க கண்ட நல்ல பலனை பக்கத்து கிராமங்களுக்கும் பரப்பி, இப்ப இந்த வட்டாரம் முழுக்க ஒரு பெரிய குடும்பமா பெருகிட்டோம்."
பெருமிதத்தோடு சொன்ன வள்ளியம்மையின் முகம் பரத்தின் அடுத்த கேள்வியில் வாடியது. "ஆமா பாட்டி, உங்களைச் சுத்தி எல்லாரையும் ஒரு குடும்பமா ஆக்கினேனு சொல்றீங்க. அப்புறம் ஏன் உங்க சொந்தப்பையன் குடும்பத்தோட, அதாவது எங்களோட, ஒட்டு ஒறவு இல்லாம இருக்கீங்க?"
"அதையும் சொல்ற வேளை வந்திருச்சு. என் பையன்மேல நான் ரொம்ப பெரிய எதிர்பார்ப்பை வச்சதனாலயோ என்னவோ அது ஏமாற்றத்துல முடிஞ்சிருச்சு. ஊரு, உலகம்னு வெளி மனுஷங்களையே அரவணைக்கறதுல கவனமாயிருந்ததாலேயோ என்னவோ, என் மூக்குக்கு அடியிலேயே இருந்த என் மோகனை நான் என்வழிக்குக் கொண்டுவரதுல அலட்சியமா இருந்துட்டேன். அவன் பொறந்ததும், அந்த மகாத்மாவோட நினைவா அவனுக்கு மோகன்னு பேர் வச்சேன். வளரும்போது அவன் எனக்கு அனுசரணையா வேண்டிய ஒத்தாசையெல்லாம் பண்ணினான். ஊருல இருக்கிற மத்த பிள்ளைங்க என்ன கூப்பிடற மாதிரியே அவனும் ஆத்தா, ஆத்தானுதான் கூப்புடுவான். வளந்ததும் படிக்கப் பட்டணம் அனுப்பினேன். அங்க இருந்த வசதி வாய்ப்பு அவனை மாத்திருச்சு. சர்க்கார் உத்தியோகம், பட்டண வாழ்க்கை, வசதி எனக்கு பிடிச்சிருக்குனு சொல்லி என்னையும், இந்த கிராமத்தையும் விட்டு வெலக ஆரம்பிச்சான். பட்டணத்துப் பழக்கம் தெரிஞ்ச பொண்ணா அவனுக்கு பாத்து, கஸ்தூரியை நாந்தான் தீர்மானம் செஞ்சு அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். பேரு பொருத்தம் இருந்த அளவு அவங்க மனப்பொருத்தம் அமையலை. கஸ்தூரிக்கு இன்னும் வசதி வாய்ப்போட இருக்கணும்னு ஆசை நெறைய இருந்தது."
"கிராமத்துல இப்ப நான் இருக்கிற இந்த பண்ணைவீட்டை வித்து மெட்ராசுல சொந்தவீடு வாங்கணும்னு நெனச்சா. இது என் சொத்து இல்லை, கிராமத்து சொத்துனு சொல்லிட்டேன். அப்புறம் எனக்கு தியாகிகள் பென்ஷன், நிலம் ஒதுக்கிறதுனு இந்த அரசாங்கம் எது குடுக்க வந்தாலும் நான் மறுத்தது கஸ்தூரிக்குப் பிடிக்கலை. இதுக்கெல்லாம் தலையா மத்திய சர்க்கார் உத்தியோகம் நல்ல சம்பளத்தோட மோகனுக்கு தியாகியோட மகன்கிற அந்தஸ்துல கெடச்சது. நான் ஒரு கையெழுத்து போட்டா அவனுக்கு அது கெடைக்கும்னு இருந்தது. நான் ஒரு தியாகமும் செய்யலை, எனக்கு எந்த பட்டயமோ, சலுகையோ தேவையில்லைனு ஒருமுட்டா அரசாங்கத்துக்கு எழுதிப்போட்டுட்டேன். அதுதானே சரி? எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை நான் செஞ்சதை தியாகம்னு சொல்லிக்கிட்டு அதுக்கு கூலியா சலுகைய எப்படிப்பா வாங்கமுடியும்? அவ்வளவுதான். அன்னையிலேருந்து குடும்பத்துல தகராறுதான். பொறுக்கமாட்டாம நான் என் மருமககிட்ட என்னம்மா பிரச்சனைனு நேராவே கேட்டுப்புட்டேன். அவ ஒரு வினாடிகூட யோசிக்காம நீதான் கெழவி பிரச்சனை, தானா வர வசதியை நீயும் அனுபவிக்காம, எங்களுக்கும் வந்து சேரவிடாம நீதான் பிரச்சனை பண்ற. உன்னால என் புருஷனும் வெட்டி வேதாந்தம் அப்பப்ப பேசிக்கிட்டு முன்னுக்கு வராம மொடங்கிக் கெடக்கறாரு. நீ இனி உன் ஜோலிய பாத்துக்க, நான் என் குடும்பத்தை பாத்துக்கறேன். எப்பவும் சத்தியம் சத்தியம்னு சொல்லுவியே, எனக்கு என்ன வேணும்னு கேட்டயில்லை. இனி நீயா என் குடும்பத்தோட ஒட்டோ ஒறவோ கொண்டாட வரதில்லைனு எனக்கு சத்தியம் செஞ்சுகுடுன்னு பொடலில அடிச்சாப்ல கேட்டுட்டா"
"அம்மா அப்படியா கேட்டாங்க? அய்யோ நீங்க அப்பாகிட்ட பேசலையா?"
"இவ்வளவு வெளிப்படையா சொன்னதுக்கப்புறம் நம்ம நெலமையை புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கறதுதான் மொறைன்னு என்னை தேத்திக்கிட்டேன். இதை என் பையன்கிட்ட சொல்லி அவனை சங்கடத்துல போட்டு அவன் நிம்மதியைக் கெடுக்கறதுலயும் விருப்பமில்லை. சரி அப்படி என்ன சொல்லிட்டா? அவ சின்ன பொண்ணு, தானும் தன் குடும்பமும் நல்ல வசதியோட இருக்கணும்னு நெனைக்கிறா. அதுக்கு இந்தக் கிழவி குறுக்க நிக்கிறானு அவளுக்கு ஒரு சங்கடம் இருக்குன்னா அதை நிவர்த்தி பண்றதுல என்ன சிக்கல்னு, சத்தியம் செய்து குடுத்துட்டு இந்த கிராமத்துலயே அடங்கிட்டேன். எனக்கு இதுல வருத்தமில்லை. அந்த மகாத்மாவோட பசங்களே அவர் வழி நடக்காம போனாங்கனு படிச்சிருக்கமே, நானெல்லாம் என்ன?" சாதாரணமாக சொன்னாலும், அவள் விரக்தி முகத்தில் வெளிப்பட்டது. "அதனாலதான் எங்களை நீங்க பாக்க வரவேயில்லையா? அப்பா மட்டும் எப்பவாவது வந்துட்டிருந்தாரா? சே என்னல்லாம் நடந்துருச்சு. சரி போனது போகட்டும். நீங்க சத்தியம் செஞ்சமாதிரி நீங்களா எங்கள வந்து பாக்கலை. இப்ப நானாதான் பாக்கவந்தேன். அதனால நீங்க உங்க சத்தியத்தை மீறலை. இனிமே நீங்க இப்படி இருக்கத்தேவையில்லை. நாளைக்கே நாம சென்னை போறாம். என்கூட வாங்க, இந்த குடும்பப் பிரச்சனையை நான் முடிச்சுவெக்கிறேன்" என்றான் பரத்.
வள்ளியம்மாள் அவனை மறுத்துப்பேசாமல், "இதுவரை என்னை என் சாமி வழி நடத்திச்சு. அந்தச் சாமியொட மறு அவதாரமா நீ வந்து கூப்பிடும்போது நான் மொரண்டு பிடிக்கமாட்டேன். நிச்சயம் வரேன்" என்றாள். அவள் மனதிலும் ஒரு ஓரத்தில் தன் குடும்பம், தன் பிள்ளை என்ற பாசப்பிடிப்பு இல்லாமலா போகும்?
"எனக்கே இவ்வளவு வெவரம் உங்களை பத்தித் தெரியாது ஆத்தா. என்னை வேத்து மனுசனா நெனைக்காம உங்க குடும்ப விசயத்தை என்ன வெச்சிக்கிட்டு பேசுனதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஆத்தா" கண்கலங்கினார் கதிரேசன்.
"கதிரேசா நீ என் புள்ளமாதிரி நான் எடுத்து வளத்தவண்டா. வேத்து மனுசன் அது இதுனுக்கிட்டு" என்று அவனை அமர்த்தினாள் வள்ளியம்மை. ஆத்தாவின் பரந்த மனதை மறுபடி நினைத்துப் பெருமைப்பட்ட கதிரேசன், சட்டென கேந்திரா மோட்டார்ஸ் நினைவுக்கு வந்து பரபரப்பாக, "ஆத்தா நாம முக்கியமான விஷயத்தை பேசிக்கிட்டே மறந்துட்டோம். தம்பி, கேந்திரா மோட்டார்சுக்கு உடனே திரும்பணும்" என்று வள்ளியம்மாளுக்கு நினைவுபடுத்தினான். வள்ளியம்மாள் பரத்தைப் பார்த்து, "சாமி, முன்னயே சொன்னாப்பல உன் பொறுப்பை தட்டிக்கழிக்காதே. நாளை என்ன, இன்னிக்கு ராத்திரியே கெளம்பலாம். உன் தாத்தா பாடுபட்டு சிந்தின ரத்தமெல்லாம் எந்த ஜனமும் அடிமைப்பட்டு யாருகிட்டயும் ஏமாந்துறக் கூடாதுங்கிறதுக்குதான். அதுலயும் நீ வேலை செய்யிற கம்பெனி மொதலாளி பெரிய கண்டுபிடுப்பு செஞ்சு இந்த தேசத்துக்கே ஏன் இந்த உலகத்துக்கே உதவ பாக்கறாருங்கும் போது, அத அப்படியே நோகாம ஏமாத்தி அடையறதுக்கு ஒரு கும்பல் அதுவும் இந்த தேசத்துக்கு விரோதமா இருக்குனு தெரிஞ்சிக்கிட்டப்புறமும், நீ உன் பொறுப்பை உட்டுட்டு இங்க இருக்கிறது சரியில்லை. உன் தாத்தா மேலயும், என் மேலயும் உண்மையா மரியாதை இருக்குமானா உடனே கெளம்பு. இந்த கண்டுபிடுப்பு ஜெயிக்கணும், அதோட பலன் நல்லவங்க கைக்குதான் போய்ச் சேரணும்."
பரத் சிறிது யோசித்துவிட்டு, "உன் கஷ்டத்தையெல்லாம் கேட்டதுக்குப் பிறகு நான் பட்டதெல்லாம் ஒண்ணுமேயில்லைனு புரியுது. நிச்சயம் நான் திரும்ப கேந்திரா மோட்டார்சுக்குப் போயி என் வேலையை முடிக்கிறேன். அந்த புதுக் கண்டுபிடிப்பு அநியாயமா வெளியாள் கைக்கு போகவிடமாட்டேன். இது நான் உனக்கு செய்துதர்ற சத்தியம்" என்று சொல்லிவிட்டு, தன் செல்ஃபோனை ஆன் செய்தான். பளீரென அந்த சாயங்கால இருட்டில் அது ஒளிர்ந்தும் கேந்திரா விடுத்த செய்தியை அறிவித்தது. பரத் பரபரப்பாக அவள் அனுப்பி இருந்த வீடியோவை ஓடவிட்டு, சக்கரவர்த்தியின் சதியைத் தெரிந்துகொண்டான். அவனுக்கு இப்போது கேந்திராவின் உயிரைப்பற்றிய கவலை அதிகமானது. "பாட்டி நாம ஒடனே போகணும் சென்னைக்கு. என் கேந்திராவோட உயிருக்கு ஆபத்து வருமோனு பயமாயிருக்கு. இந்தப் புது ப்ராடக்டை கைப்பத்த என்ன பாவம் வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கு" என்றான்.
பரத் உரிமையோடு என் கேந்திரா என்று சொன்னதும் கதிரேசனும், வள்ளியம்மாளும் ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டனர். கதிரேசன் "தம்பிக்கு மொதலாளி அம்மா மேல ரொம்ப விசுவாசம்" என்று அதற்குத் தப்பாக பொழிப்புரை சொன்னதும் பரத் உடனே "இல்லண்ணே, நானும் கேந்திராவும் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். அவகிட்ட சொல்லாம வந்தாக்கூட என் நெனப்பெல்லாம் அவளச் சுத்தியே இருந்தது" என்று தெளிவுபடுத்தினான்.
"என்ன தம்பி சொல்றீங்க? அவங்களுக்குதான் நம்ம வினய் அய்யாவோட நிச்சயமாயிடுச்சே!"
"அது ஒரு கண் தொடைப்பு அண்ணே. என் கேந்திரா எனக்காக காத்திருக்கா, அவளோட இந்த மெசேஜை பாத்ததும் எனக்கு இது தெளிவாயிடுச்சு."
கதிரேசனுக்குத் தன் மகள் வாணியை நினைத்துச் சோகமானாலும், அதைப்பற்றிப் பேசி எதுவும் கிளறவேண்டாம் என்று மவுனமானார். வள்ளியம்மை, "அந்தப் பொண்னு உசிருக்கு ஆபத்துன்னா, ஏன் யோசிக்கிறே. மொதல்ல ஒரு ஃபோனப்போட்டு அந்தப் பொண்ணுகிட்ட பேசி, பாதுகாப்பா இருக்கான்னு கேளு. நான் ஒருத்தி என் சாமியை கெட்டவனுங்களுக்கு பலி குடுத்தது போதும். இனி அப்படி யாருக்கும் ஆவக்கூடாது. போடு ஃபோனை" என்று விரட்டினாள்.
பரத் கேந்திராவின் நம்பரை செல்ஃபோனில் ஒத்தினான்.
கேந்திராவின் காருக்கு அருகில் உரசியவாறு ஆட்டோவை விடச்சொன்ன வெல்டிங் மணி ஒரே பாய்ச்சலில் அவளது கார் ஜன்னலின் வழி கைவிட்டு அவள் கைப்பையை எடுத்துவிட்டான். கேந்திரா இதை எதிர்பாராமல் அதிர்ச்சியாக வண்டியை இடப்புறம் ஒடிக்கவே, அவள் பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி அவள் காரில் இடிபடுவதைத் தவிர்க்க வலப்புறம் போனது. கைப்பையைப் பறித்த மணி செல்ஃபோனைக் கையில் எடுத்து, கைப்பையை ரோட்டில் வீசினான். அந்த நேரம் பரத் கேந்திராவை அழைக்கவே, செல்ஃபோன் மணி பெரிதாக அடித்தது. மணி அதை எதிர்பாராததால் தடுமாறவே அவன் ஒரு கையால் ஆட்டோவின் கம்பியைப் பிடித்திருந்த பிடி நழுவி, நடுச்சாலையில் தவளைபோல விழுந்தான். ஒருகணத்தில் அந்த லாரி அவன் கதையை முடித்து பிளாட்ஃபாரத்தில் மோதி நின்றது. கனகராஜின் உயிரைப் பறித்த அந்த இரக்கமற்ற ஜென்மம் நடுத்தெருவில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தது. தெய்வம் நின்று கொன்றது.
லாரி ஏறியதில் கேந்திராவின் செல்ஃபோனும் நொறுங்கியது. எனவே பரத்துக்குத் தொடர்பு கிடைக்காமல் போனது. இது பரத்தைக் கவலைக்குள்ளாக்க, அவன் கதிரேசன் மற்றும் வள்ளியம்மாளோடு அப்போதே சென்னைக்கு விரைந்தான்.
(தொடரும்)
சந்திரமௌலி, ஹூஸ்டன் |