தமிழகத்தின் மூத்த பதிப்பாளர்களுள் ஒருவரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஸ்ரீ கிருபானந்த வாரியார், ராஜாஜி, அ.ச. ஞானசம்பந்தன், கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன், சிவசங்கரி, தென்கச்சி சுவாமிநாதன் எனப் பலரது நூல்களை அச்சிட்டுத் தமிழகம் முழுவதும் பரவச் செய்தவருமான எஸ். திருநாவுக்காரசு (89) காலமானார். 1927ம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்த இவர், இளவயதிலேயே பர்மாவுக்குச் சென்றார். பின்னர் போர்க் காலத்தில் தமிழகம் திரும்பினார். "ஜில்ஜில்" என்ற சிறுவர் இதழையும், அதே பெயரில் பதிப்பகத்தையும் ஆரம்பித்துப் பல நூல்களை வெளியிட்டார். "கோமாளி", "மிட்டாய்" போன்ற சிறார் இதழையும் தொடங்கி நடத்தினார். கல்கியின் பாத்திரமான 'வானதி'யால் ஈர்க்கப்பட்டு வானதி பதிப்பகத்தைத் துவங்கினார். அதனால் வானதி திருநாவுக்கரசு என அழைக்கப்பட்டார். திருவரசு புத்தக நிலையத்தையும் துவங்கி அதன்மூலம் நல்ல பல நூல்களை வெளியிட்டார். மிகவும் எளிமையானவராக, தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவராக, கடுமையான உழைப்பாளியாக வாழ்ந்து வந்த திருநாவுக்கரசு, எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். அவை ஒவ்வொன்றையும் அவரே மெய்ப்புத் திருத்தி வெளியிட்டது, அவரது ஈடுபாட்டைப் பேசுகிறது. வானதி பதிப்பகம் வெளியிட்ட 'தெய்வத்தின் குரல்' பல பதிப்புகள் கண்ட நூலாகும். சிறந்த பதிப்பாளருக்கான 'பதிப்புச் செம்மல்' விருது பெற்றவரும்கூட. அவருக்கு காளியம்மை ஆச்சி என்ற மனைவியும், டி.ஆர். ராமநாதன் என்ற மகனும், முத்துலட்சுமி, வானதி, அலமேலு என்ற மகள்களும் உள்ளனர்.
|