செப்டம்பர் 4, 2005 அன்று லாஸ் ஆல்டோஸ் ·புட்ஹில் கல்லூரி ஸ்மிதிவிக் அரங்கில் நந்தினி தாசரதியின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடந்தது.
'இந்தஜால' (பேகடா) வர்ணம் மற்றும் 'கருணைசெய்வா' (ஹம்சத்வனி) பாபநாசன் சிவன் பாடலுடன் கச்சேரி ஆரம்பித்தது. மாணவிக்கு சாரீரம் நல்ல கணிப்பு. சுருதி சுத்தம். ஆரம்ப வர்ணத்திலேயே தனது ஸ்வரம் பாடும் திறமையை நன்கு வெளிப் படுத்தினார்.
'ஓரஜூபுஜு' (கன்னட கெளளை) கீர்த்தனை நல்ல விறுவிறுப்பு. 'ராமநாதம் பஜேஹம்' கீர்த்தனை பாடுகையில் ராமேஸ்வரம் கோயில் ஆயிரங்கால் மண்டபம், சேது சமுத்திரம், சிவலிங்கம் ஆகியவற்றைத் திரையில் காண்பித்தது புதுமையாக இருந்தது. கச்சிதமான ஆலாபனை, நிரவல், அநாயசமாக ஸ்வரம் பாடும் தோற்றம், மிகுந்த தன்னம்பிக்கை, பாடல்களை பாவத்துடன் பாடிய விதம் இவை பாரட்டப்பட வேண்டிய அம்சங்கள்.
யாரும் அதிகம் பாடாத 'எந்தராநீதனா' (ஹரிகாம்போதி) என்ற கடினமான கீர்த்தனையை லாகவகமாகக் கையாண்ட விதம் கனஜோர். ஸ்வாதித் திருநாள் பாடல் வெகுசுகம். ராகம், தானம், பல்லவியில் பைரவி, சிந்துபைரவி ராகங்களை மாறிமாறி ஆலாபனை செய்து, கச்சிதமாகப் பூர்த்தி செய்த விதம் நிறைவாக இருந்தது.
தொடர்ந்து முருகன் பாடல், பஜன், தில்லானா யாவும் செவிக்கு ரம்யமாக இருந்தன. சில சுறுசுறுப்பான கீர்த்தனை களைச் சேர்த்திருந்தால் இன்னும் எடுப்பாய் இருந்திருக்கும்.
மாணவியின் தாய் குருவாய் இருந்து சிறுவயதிலிருந்தே இசையில் இறங்கி நன்கு போதித்து பயிற்சி அளித்து மதுரை சேஷகோபாலன் அவர்களிடமும் பயிற்சி எடுத்து கர்நாடக இசையின் நுணுக்கங்களை அறிந்து அபார ஞானத்துடன் இடைவிடாமல் பயின்று, அனுபவித்துப் பாடியதை அரங்கேற்றம் என எப்படி கூறுவது!
வயலின் வித்வானும், மிருதங்க வித்வானும் தம் அபார வாசிப்பினாலும் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டனர்.
சீதா துரைராஜ் |