ஏழு ரூபாய் சொச்சம்
மங்களம் வாசலுக்கும் உள்ளுக்கும் இருபதுமுறை நடந்துவிட்டாள். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக் கடைக்குப் போய் ஒரு நாளுக்குண்டான காய்கறி வாங்கிவர இத்தனை நேரமா? மனிதர் வேலையிலிருந்து ஒய்வு பெற்றாலும் பெற்றார், நன்றாக ஊர்சுற்றுவதும், அங்கங்கு வாய் பார்த்துக்கொண்டு நின்று ஆடியசைந்து வருவதுமாக ரொம்பவே மாறிவிட்டார்.

வெளியில் போய்விட்டுத் தாமதமாக வரும்போது ஏதாவது கதை சொல்லிக்கொண்டு வருவார். கேட்டால், "அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடியதெல்லாம் போதாதா? இல்லை, ஓடிஓடிச் செய்ய எந்தக் குழந்தை பசிபசின்னு பறக்கிறதாம்" என்று வாயை அடைத்துவிடுவார். இவரை நம்பிச் சமையலை ஆரம்பித்தால் எரிவாயு செலவே ஆளை விழுங்கிவிடும்.

அப்பாடா, ஒரு வழியாக வந்துவிட்டார் போலிருக்கிறது; வாசலில் குரல் கேட்கிறது. யாரோடு தர்க்கமோ, யாருக்கு அறிவுரை, அருள்வாக்கோ, வந்ததும் இருக்கிறது உபன்யாசம்!

"உள்ளே வாங்க சார். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா பேசறீங்களே. இங்கே பேச்சுத்துணைக்கு யாருமில்லாம போரடிக்கிறது" என்று யாருடனோ உரையாடியபடி வந்தார் அனந்து. யாரோ புதியவர் வருகிறாரென்று உள்பக்கம் போனாள் மங்களம்.

உள்ளே வந்து காய்கறிப்பையை அடுப்படி மேடைமேல் வைத்துவிட்டு, விட்ட உரையாடலைத் தொடர நகர்ந்தார். காய்களைக் கொட்டியவளுக்கு பகீரென்றது. நாலு கத்திரிக்காயும், ஒரே ஒரு முருங்கைக்காயும் பிடி கறிவேப்பிலையும் விழுந்தன. என்னதான் அகவிலை ஏறியிருந்தாலும் முப்பது ரூபாய்க்கு இதுதானா?

"சாருக்கு காப்பி கொண்டு வரயா? அப்படியே எனக்கும்." உத்தரவு வந்தது. அதானே,எப்படா சாக்கு கிடைக்கும் என்று நாளுக்கு நாலு காப்பி குடிக்க வேண்டியது, டாக்டரிடம் பாட்டு வாங்கதான் நானிருக்கேனே. வந்தவருக்கு ஒரு டம்ளரும் அவருக்கு அரையுமாக எடுத்துச் சென்று கொடுத்தவாறே ஜாடையாக உள்பக்கம் அழைத்தாள்.

அவள் என்ன கேட்கப்போகிறாள் என்பதை அறிந்தவர்போல் உள்ளே வந்ததும் "பருப்பை எடுப்பாப் போட்டு இருப்பதை வைத்து சமைத்துவிடு. விவரம் அப்புறம் சொல்றேன்" என்று வெளியே விரைந்தார். அரட்டைக் கச்சேரி தொடர்ந்தது. அவள் ஒருவிதமாகச் சமையலை முடிக்கவும் அந்தப் புதியவர் கிளம்பவும் சரியாயிருந்தது. "காப்பிக்கு தேங்க்ஸ். இன்னிக்கு சார் மட்டும் இல்லேன்னா என் மானமே போயிருக்கும். வெறும் ஏழு ரூபாய் சொச்சத்துக்கு அந்தக் கிழவி என்னமாக் கத்தி ஊரைக் கூட்டிவிட்டாள்?" என்றபடி போனார் அந்த மனிதர். நடந்ததை ஊகிக்க அதிக நேரமாகவில்லை மங்களத்துக்கு.

"பாவம் மனுஷர் கையில் இருப்பு என்ன என்று பார்க்காமல் காய்கறி வாங்கிவிட்டார். நாளை கொண்டு வருகிறேன் என்று எவ்வளவோ சொல்லியும் கடைக்காரி கண்டபடி கத்திவிட்டாள். நானும் கணக்காகத்தானே எடுத்துப் போவேன், என்னாலானது, அந்த ஏழு ரூபாய் சொச்சத்தைக் கொடுத்துவிட்டேன். அவர் என்னமோ நான் தூக்கமுடியாத உதவி செய்துவிட்டதைப் போல மாய்ந்து மாய்ந்து நன்றி சொல்லிவிட்டு என்னுடனே ஒட்டிக்கொண்டு வந்துவிட்டார்" என்று விருத்தாந்தம் கூறி முடித்தார் அனந்து.

"அவர் அவசரத்துக்கு கொடுத்து உதவினவரை சரி. வீடுவரை அழைத்து வந்து காப்பி உபசாரம், அரட்டைக் கச்சேரி இப்படி இழுத்துண்டே போகணுமா? சரி அவர் பேரென்ன சொன்னீங்க?" என்று வினவினாள்.

"அடடா, அதைக் கேட்காமலே இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டேனே!" என்று அசடு வழிந்தார். அதோடு விட்டுவிட்டதென்று சாப்பாடு, ஒய்வு, மாலை கோயில் என்று வழக்கம்போல் அன்றைய பொழுது கழிந்தது.

மறுநாள் காலை பேப்பரை மேய்ந்து கொண்டிருந்தார் அனந்து. "சார், இன்னும் காய்கறி வாங்கப் போகலியா?" என்ற குரல் கேட்டது. முதல்நாள் வந்தவர்தான். "உங்களுக்கு ஒரு ஏழு ரூபாய் சொச்சம் தரணும். மீனா கரெக்டா பதினஞ்சு ரூபாய்தான் குடுத்திருக்கா. தப்பு என்மேலதான். அவகிட்ட சொல்லவே மறந்துட்டேன். நாளைக்கு கட்டாயம் வாங்கி வந்துடுறேன். மீனாவுக்கு இப்படிக் கைமாத்து வாங்கறதெல்லாம் பிடிக்காது" என்றபடி அனந்து கூறுமுன்பே எதிர்சோஃபாவில் அமர்ந்துவிட்டார்.

"என்ன சார், இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இத்தனை விளக்கம், விசாரமெல்லாம்? இந்தப் பெரிய தொகையை நீங்க ஒண்ணும் திருப்பிக் குடுக்க வேண்டாம். யார் கண்டது? நாளைக்கே எனக்கு ஒரு தேவைன்னா நீங்க குடுக்கமாட்டீங்களா? பை தி வே நான் உங்க பேரைக்கூடக் கேக்கலை" என்று சொல்லிவிட்டு உள்புறம் நோக்கி காப்பிக்குக் குரல் கொடுத்தார். "நான் சதாசிவம்.ரிடையர்டு கவர்ன்மெண்ட் செர்வன்ட். இரண்டு தெருதள்ளி சிக்ஸ்த் கிராசில் இருக்கேன்" என்று அறிமுகம் நடந்து கொண்டிருக்கையிலேயே காப்பி வந்தது. குடித்து முடித்ததும் அனந்துவும் அவருமாய்க் கிளம்பிவிட்டனர்.

இதே கதை அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. அனந்துவும் சதாசிவமும் தினமும் ஒன்றாக மார்க்கெட் போவது, அரட்டை அடிப்பது, எல்லாமே வழக்கமாகி விட்டது. ஒன்றுமட்டும் தெரிந்துவிட்டது மங்களத்துக்கு. மனுஷர் மனைவிக்கு ஒரேயடியாக பயப்படுபவர் அல்லது மரியாதை கொடுப்பவர். மூச்சுக்கு முப்பதுதரம் 'மீனா என்ன சொல்வாளோ தெரியல்ல; மீனா கோபிச்சுப்பா' என்று ஏதாவது முத்தாய்ப்பு வைக்காமல் பேச்சை முடிக்கவே மாட்டார். சமயம் பார்த்து மங்களம் "உங்க சிநேகிதரைப் பாருங்க; அவ்வளவு வேண்டாம், எதற்காவது 'இப்படிப் பண்ணலாமா? இது சரியாயிருக்குமா என்றுகூட என்னைக் கேக்க மாட்டீங்களே" என இடிக்கத் தவறவில்லை. மங்களத்துக்குக்கூட அந்த மீனாவைப் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது.
கடந்த சில நாட்களாக ஏனோ சதாசிவம் வரவில்லை. அனந்துவுக்குக் கை ஓடிந்ததுபோல் இருந்தது. அவரது வீட்டு முகவரியைக்கூட சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லையே என ஆதங்கப்பட்டார்.

அன்று சனிப்ரதோஷம். தரிசனத்தை முடித்துக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அனந்து தம்பதி. தற்செயலாகத் திரும்பிய அனந்து சதாசிவம் நடுத்தர வயது தம்பதி இருவருடன் சன்னிதியிலிருந்து வெளிவருவதைக் கண்டார். ஓடிப்போய் "ஹலோ சதாசிவம் சார், என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம், ஊரில் இல்லையா?" என்று கேட்டார். "அதெல்லாமில்லை, குளிர் ஒத்துக் கொள்ளவில்லை, அதான் காய்ச்சலில் படுத்துவிட்டேன்.வெளிப்புழக்கம் குறைந்துவிட்டது. இவர்கள் என் மகனும் மருமகளும். சரவணா, இவர் என் நண்பர் அனந்து, மூணாவது தெருவில்தான் இருக்கிறார். ஒரு ஏழு ரூபாய் சொச்சம்தான் எங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் காரணமாயிருந்தது" என்று அறிமுகப்படுத்திவிட்டு சௌக்கியமாம்மா?" என்று மங்களத்தையும் குசலம் விசாரித்துவிட்டு, "நான் பிரதட்சிணத்தை முடித்து வருகிறேன்" என்று கிளம்பினார்.

சதாசிவத்தின் மருமகள் சசி, நன்றாகப் பழகும் பெண்ணாக இருந்தாள். சில நிமிடங்களிலேயே இருவரும் சகஜமாக உரையாடத் தொடங்கிவிட்டனர். பேச்சுவாக்கில், "உன் மாமியார் வரவில்லையா? உன் மாமனார் அவரைப்பற்றிப் பேசாத நாளே இல்லை. அவரே உன் மாமியார் கண்ட்ரோலில் இருப்பதாகவே தோன்றுகிறது" எனக் கூறினாள் மங்களம்.

"என்னது, மாமியாரா? அவர் போய் ஆறு வருஷத்துக்கு மேலாகிவிட்டதே. அவராவது, மாமனாரைக் கண்ட்ரோல் பண்ணுவதாவது? அவர் இருந்தவரை என் மாமனாரின் அதட்டல் உருட்டலுக்கு நடுங்கியே வாழ்ந்துவிட்டார். இப்போது அவரை நினைத்துக் கொண்டு இவர்தான் போலியாக மனைவிக்கு அடங்கியவர்போல காட்டிக்கொண்டு வளைய வருகிறார். பாவம், குற்றவுணர்வில் ஏதோ சொல்கிறார். அதையெல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்" எனக் கூறினாள் அவள்.

திரும்பிப் பார்த்த மங்களத்தின் பார்வை ஏதோ செய்தியைத் தெரிவித்தது அனந்துவுக்கு.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com