சிலுசிலுவென்று அடிக்கும் மேல்காற்றில் உலர்ந்துபோன உடலை நனைக்கும் முடிவில் பெரியசாமி பாசன வாய்க்காலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். இருபுறமும் பசேலென்று பாசன வளமையில் தலையாட்டிக் கொண்டிருந்த வாழைமரங்கள் அந்தக் கிராமத்து மனிதனின் கடும் உழைப்பைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. இருளும் ஒளியும் வாழைத் தோப்புக்கிடையில் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அந்திசாயும் நேரம். எங்கோ தொலைவில் டூரிங் டாக்கிஸிலிருந்து வந்து கொண்டிருந்த உருப்புரியாத ஒரு பழைய பாடல் ஒலி அந்த நேரத்துத் தனிமையைத் துரத்துவதுபோல உணர்ந்தார். அதற்குத் தாளம்போட முயற்சிப்பதுபோல தொப்புத் தொப்பென்று வரப்பில் காலை மாற்றி மாற்றி வைத்தார். முதுகில் சுரீரென்று காய்வது போன்ற உணர்வு...
தலையை லேசாகத் திருப்பினார். அரசமரத்தடியில் அமர்ந்திருந்த மருதை அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
'யப்போவ்.... ஒரு பார்வையிலே இம்புட்டு வெறித்தனமா... காயுறானுங்கப்பா.. அடுத்தவன எப்படி நோகடிக்கலாம்னு கத்து வெச்சிருக்காங்காக போல..' வாய்க்காலுக்குள் இறங்கி தண்ணீரை உடம்பு முழுவதுமாய் வாரி வாரி இறைத்துக் கொண்டார். முண்டாசை அவிழ்த்து மேனியை முறுக்கித் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து நோக்கினார்
"என்னய்யா மருதை... பொளுது சாயுற நேரத்துக்கு இங்கிட்டு என்ன ரோசனையா குத்தவெச்சு உக்காந்திருக்கிறீரு..."
"உமக்கென்ன சகலை... காடு கழனி தோப்பு துறவுன்னு பொளுதன்னிக்கும் சுத்தித் திரியாடிட்டு வூட்டுக்குப் போனா கொளுந்தியா வென்னித் தண்ணி வெச்சு முதுகைத் தேய்ச்சுவிடுவா. நம்மகிட்ட கெடக்கிறதே வேற கதையாவுல இருக்கு. ஒரு கரண்டி சோத்தையும் உப்புக் கண்டத்தையும் வெச்சிப்பிட்டு அவ சிந்துற மூக்கக் காணப் பொறுக்காம கையக் களுவ வேண்டியதாயிருக்கு..."
ஈரத்துண்டை உலர்த்தும் பதத்தில் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு மரத்து வேரில் சென்று அமர்ந்தார் பெரியசாமி. ஒரு சுருட்டைப் பற்றவைத்து மருதையிடம் தந்துவிட்டு மற்றொன்றை வாயில் கவ்விக்கொண்டு அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார். "அவளச் சொல்லியும் குத்தமில்லே. முளுசா முள்ளங்கி பத்தையாட்டமா லச்சரூவா வீட்டை ஒத்திக்கு வெச்சுப் பெரட்டுன ரொக்கம் மவன் கையில கொடுத்து துபாய்க்கு அனுப்பி வருசம் முடிஞ்சு போச்சு. ஒரு தகவலுமில்ல" மருதை புகையோடு புலம்பிக்கொண்டிருந்தான். "அந்தக் களவாணிப் பய புரோக்கரையும் சொல்லி வெச்சாப்புல கண்ணுலயே காணலே... போன புள்ளைக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு ஆத்தாக்காரி அடிச்சிக்கிட்டு நிக்கிறா. எங்கேயாச்சும் நாண்டுகிட்டு சாகலாமான்னு தோணுது..."
"சரி.. சரி... இப்ப வெசனப்பட்டு என்ன ஆவப்போவுது... முன்னமே நெதானமா யோசிச்சி முடிவெடுத்திருக்க வேண்டிய வெசயம்.. நம்பளமாதிரி காட்டு வேலை ஆளுங்களுக்கு எத்தனை ஒசரம் தாண்டமுடியுமோ அம்புட்டுதேன். 'சங்கிலி கருப்பண்ணன் சாமிகிட்ட கடாவெட்டுக்கு நேர்ந்துக்கிடும். போன பயலுவள அடுத்த பூசைக்குள்ள கொணாந்து நிறுத்திடுவாறு..."
"ஆமா... செவலை ஐயரு வீட்டு செனைமாட்டை பத்திக்கிட்டு வந்தீரே.. கன்னு போட்டிடுச்சா...?" நிலைமையை சகஜமாக்க முயன்றார் பெரியசாமி.
*****
காதில் நீளமாய் லோலாக்கு ஆட, கையில் சீம்பால் தூக்கை எடுத்துக்கொண்டு எல்லையம்மன் கோயிலை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் காவேரி. கண்கள் நான்குபுறமும் சுழன்று யாரையோ தேடிக் கொண்டிருந்தது. மடியில் கனமும் விழியில் பயமுமாய் வந்து கொண்டிருந்தவளை ராசாத்தியின் குரல் திடுக்கிட வைத்தது.
"ஏம்புள்ளே.... மாடு கன்னு போட்டிருச்சா? ஆத்தா கோயில் அபிசேகத்திற்கு சீம்பால் கொண்டுகிட்டுப் போறியாக்கும்... ஒத்தையில போற... வளக்கமா கூட சிரிச்சுப் பேசிக்கிட்டு வரவக வரலையாக்கும்..." விஷமமாய்ச் சிரித்தாள் கோடிவீட்டு ராசாத்தி.
"ம்க்கும்... நீ வேற எதையாச்சும் கெளப்பாதே யக்கா... ஊட்டுல ஆத்தாவோட தும்பம் தாங்கமாட்டாம வெளிய வந்தா..." முனகினாள்.
காவேரி, "ஏம்புள்ள... துபாய்க்குப் போன உங்கண்ணன் வெசயம் ஏதாச்சும் தெரிஞ்சிச்சா..?" கையில் கிடைத்த இரையை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவாளா ராசாத்தி.
"ம்ச்சூ... என்னாத்த சொல்லச் சொல்லுதே... ஒரு தகவலுமில்லாம ஊட்ல அப்பனும் ஆத்தாளும் படற நோவு... ஊரே பத்திக்கிட்டு எரியுறாப்ல இருக்கு" அவள் வம்பிலிருந்து தப்பிப்பதிலேயே குறியாக இருந்தாள் காவேரி.
தூரத்திலிருந்து கேட்ட சைக்கிள் மணியின் ஓசை அவள் கவனத்தை ஈர்த்தது. "சரியக்கா... ஆத்துல குளிச்ச ஈரத்துணியோட எத்தினி நாளி நின்னு பேசுவ! பொளுதாச்சு. நானும் வெரசா கோயிலுக்குப் போய்வாரேன்..." பதிலை எதிர்பாராமல் சரசரவென்று நடக்கத் துவங்கினாள்.
"ஏய் புள்ள காவேரி. ஏன் அவசரம்... என்ன அவசரம்..." சைக்கிள் மணி தாளத்தோடு பாடிக்கொண்டு நின்றான் சுப்ரமணி.
"ஆமாய்யா... ஒம்பாட்டைக் கேக்குற நெதானத்துல நாந்தேன் இல்ல.. என்னா வெசயம் மொகறையில சந்தோஷம் கூத்தாடுது?"
"இருக்குடியோய்... இதென்னா பார்த்தியா. ஒங்கண்ணன் எளுதின கடிதாசி. வளியில தபால்காரர் கையிலிருந்து பிடுங்கிக்கிட்டு ஓடியாந்தேன்..."
"என்னா எங்கண்ணன் கடிதாசி எளுதியிருக்கா. கொடு பார்க்கிறேன்..." தவிப்பும் மகிழ்ச்சியுமாய்த் துடித்து நின்றாள் காவேரி.
*****
பம்பாயின் புறநகரில் அமைந்திருந்த அந்த அழகான பங்களாவின் முகப்பு வாயிலில் பச்சை வயலாய் விரிந்திருந்த புல்வெளிக்கு தண்ணீரைப் பீய்ச்சிக் கொண்டிருந்த ரங்கனின் முகத்தில் அதிகப்படியாய் வியர்வை வழிந்தோடிக் கொண்டிருந்தது. காலையிலிருந்து மாலைவரை அந்த வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பை மிகவும் சிரத்தையாகச் செய்து சேட்டிடம் நல்லபெயர் எடுத்தவனாயிற்றே! பெரியசேட் மோதிலாலிருந்து கடைக்குட்டி 'சோட்டு'வரை எல்லோருக்கும் 'ரங்கா'தான் வேண்டும். எல்லாரிடமும் பணிவோடும், பரிவோடும் வேலையைக் கேட்டு வாங்கிச் செய்வான். அந்த வீட்டில் நுழைந்த ஆறுமாதத்திற்குள்ளாகவே சுமாராக ஹிந்தி பேசப் பழகிவிட்டிருந்தான்.
துபாயில் வேலை, கைநிறையச் சம்பளம், வெள்ளையும் சொள்ளையுமாய் உடுப்பு... என்று பல வர்ணங்களைக் காட்டி ரங்கனையும் அவன் குடும்பத்தினரையும் ஏமாற்றிய புரோக்கர் முத்து. பம்பாயிலேயே கடற்கரையோரமாய் ரங்கனைக் கைகழுவிவிட்டு மறைந்துவிட்டிருந்தான். அனாதரவாய் தவித்துக்கொண்டிருந்த ரங்கனை யதேச்சையாக ஒருநாள் சந்தித்த சேட் மோதிலால் அவன் நிலையைக் கேட்டு மனமுருகினார். சென்னையில் பிறந்து வளர்ந்த சேட்டிடம் தமிழும் பரிவும் சேர்ந்தே இருந்தது. 'என் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளலாம்' என்று கூறிய சேட், ரங்கனுக்கு தெய்வமாகவே தோன்றினார். அன்றிலிருந்து ரங்கன் அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே இணைந்துவிட்டான். அவனது உண்மையான உழைப்பிற்கும், நாணயத்திற்கும் அங்கு நிறையவே மரியாதை கிடைத்தது.
"ரங்கா.. அவன் உன்னை இங்கே விட்டது எவ்வளவோ மேலுன்னு நினைச்சிக்கோ. துபாயில் ஷேக் வீட்டில் குதிரைச் சாணி பொறுக்கவிட்டு ஓடியிருந்தா நீ இன்னா செய்வே? திரும்பி ஊருக்கு வரக்கூட உன்கிட்ட பைசா இருக்குமா? எல்லாத்தையும் நல்லதா நினைச்சிக்கோ! ஊருக்குத் திரும்பிப் போகணும்னு தோணிச்சா... பொறுமையா இங்கே கொஞ்சம் பைசா சேர்த்துக்கிட்டுப் போ. அப்போதான் உன் குடும்பத்துக்கும் சந்தோஷமாகவே இருக்கும்." சேட்டின் அறிவுரைகளை அவன் தெய்வ வாக்காகவே எடுத்துக்கொண்டான். தூக்கம் வராமல் தவிக்கும் இரவுகளில் தன் அறியாமையும் தன் குடும்பத்தாரின் பேதைமையையும் எண்ணிக் கண்கலங்குவான்.
'நான் ஏமாந்த பணத்தை ஓரளவிற்காவது சேர்த்துக் கொண்டுதான் ஊர்ப்பக்கம் போக வேண்டும்' என்று தீர்மானமாக நினைத்துக்கொள்வான். அவ்வப்போது சேட் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் இவன் உபசாரத்தில் மகிழ்ந்து அளிக்கும் அன்பளிப்புகளும் சேட் அளித்த சம்பளமும் சேர்ந்து இப்பொழுதுதான் கணிசமாய் ஒரு ரொக்கம் சேர்ந்திருந்தது. மனதிற்குள் ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் தோன்றவே வீட்டுக்குக் கடிதம் எழுதிவிட்டுக் கிளம்பத் தயாராகிவிட்டான். நல்லவரான சேட்டும் அவனைத் தடுக்காமல் வாழ்த்தி அனுப்பத் தயாராக இருந்தார். "இந்த வாழ்க்கை.. பகவான் உனக்குக் கொடுத்தது. இதில் எல்லா உரிமையும் உனக்கு உண்டு. குட்லக்! எப்போ வரணும்னு உனக்குத் தோணுதோ அப்போ இங்கே வா. இந்த வீட்டுவாசல் உனக்குத் திறந்தே இருக்கும்."
அந்த நல்ல மனிதரின் ஆசியோடு அவன் கடிதம் எழுதினான்.
"பச்சை வயலையும் தோப்பையும் மதிக்காமல் வெள்ளைச் சட்டையோடு கிளம்பின எனக்கு இயற்கையே நல்ல பாடம் புகட்டிவிட்டது. இனி என்றைக்கும் என் ஊர்தான் என் கோயில் நீங்கள்தான் என் தெய்வம்! என் ஊரிலேயே பாடுபட்டு உழைத்து முன்னுக்கு வர முடிவெடுத்து விட்டேன்..." கடிதம் முடியுமுன்னரே கண்கள் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன.
"யப்போவ்... அண்ணன் வருதாம்!" ஆனந்தத்தில் குதித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்தாள் காவேரி.
அடக்கமான பையனைப்போல வேஷம்போடும் 'தனுஷ்' போல, கட்டிய கையுடன் பவ்யமாக நின்றான் சுப்ரமணி. ஊறவெச்ச பாளையை கத்தியால் நார் கிழித்துக் கொண்டிருந்த மருதை அலமந்து நின்றான்.
"என்னா தாயீ சொல்லுற..." அடுப்பை கவனிக்காமல் அரக்கப்பரக்க ஓடிவந்தாள் பொன்னாத்தா.
"தம்பீ... நீ நல்லா இருக்கோணும்! இந்தச் சேதி சொல்லி எங்க வயத்துல பாலை ஊத்தின ஒனக்கு என்னாத்தைக் கொடுப்பேன்..." குரல் அழுகையில் உடைந்து சிதறியது.
"அத்தே! அமைதியா இருங்க... மச்சான் பொறப்பட்டு வரட்டும்.. பொறவு எல்லா நல்ல சேதியையும் கேட்டுக்கிறேன்..." கடிதத்தைப் படித்துச் சொல்லிவிட்டு, காதலோடு காவேரியைப் பார்த்தான் சுப்ரமணி.
"ம்க்கும்" என்று சந்தோஷமாய்ச் சிணுங்கினாள் காவேரி.
நா. இராஜேஸ்வரி, கூபர்டினோ, கலிஃபோர்னியா |