கொடிகாத்த குமரன்
கதிரேசனுக்கு தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. காண்பது கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார். இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் மலைத்தார். விஷயம் இதுதான்...

தன் நிலப்பட்டா பெயர் மாற்றுவது சம்பந்தமாகப் பதிவாளர் அலுவலகத்துக்கு, சரியாகச் சொன்னால், இதுவரை 18 முறை அலைந்துள்ளார் 56 வயதான கதிரேசன். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அவரை அலைக்கழித்தனர், அவர்கள் எதிர்பார்த்த 'மொய்' கிடைக்காததால். கதிரேசனும் லஞ்சம் கொடுக்ககூடாது என்று வைராக்கியத்துடன் போராடினார். இவரிடம் ஒன்றும் தேறாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, வேண்டா வெறுப்பாக, சபித்துக்கொண்டே அவர் ஃபைலை அடுத்த செக்‌ஷனுக்குத் தள்ளினர்.

இன்று இறுதியாக, பதிவாளரிடம் கையெழுத்து வாங்கவேண்டும். அவர் ரொம்பக் கறார் என்றும், காசைக் காட்டாவிட்டால் கண் நிமிர்த்திக்கூட பார்க்கமாட்டார் என்று அந்த அலுவலகத்தில் எல்லோரும் சொல்லியிருந்தார்கள். கையெழுத்திட்ட மற்றவர்களும் 'நீ எப்படி சார்கிட்ட கையெளுத்து வாங்குறேன்னு பார்க்கிறேன்" என்று சவால்விடாத குறையாகச் சொல்லி இருந்ததால், சற்று அயர்ச்சியுடன் பதிவாளர் அறைக்குள் நுழைந்தார்.

ஆணால், பதிவாளர் கதிரேசனை இன்முகத்துடன் வரவேற்றார், அவருக்கு டீ சொன்னார், அவர் தேவைகளை கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றினார், கையெழுத்திட வேண்டிய இடத்தில் கையெழுத்திட்டு, அவரை மரியாதையாக வழியனுப்பி வைத்தார்.

இவற்றைக் கதிரேசனால் நம்பமுடியவில்லை. அவர் இதுவரை கேட்டிராத, கண்டிராத செயலாக அது இருந்தது. அந்தப் பதிவாளரைப்பற்றி கேள்விப்பட்டது ஒன்றாகவும், நடந்தது ஒன்றாகவும் இருந்தது. சற்று பிரமிப்புடன் அந்த அலுவலகத்தைவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதை, ஒரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தன. அது குமரனின் கண்கள்.

குமரன், அந்த பதிவாளர் அலுவலகத்தில் Data Entry Operator வேலை செய்யும், பொறியியல் பட்டதாரி. அங்கே கிளார்க் வேலைபார்த்த அவனது தந்தை, அலுவல் விஷயமாக வாகனத்தில் செல்லும்போது, விபத்துக்குள்ளாகி இறக்கவே, கருணை அடிப்படையில் அவனுக்கு இந்த வேலை கிடைத்தது. பொறியியல் படித்த குமரனுக்கு Data Entry Operator வேலையில் சேர விருப்பம் இல்லாவிட்டாலும், குடும்பச் சூழ்நிலை காரணமாக, வேறுவழியில்லாமல் சேர்ந்தான்.

வேண்டாவெறுப்பாகச் சேர்ந்தாலும், நாளடைவில் வேலை பிடித்துப்போய், கடினமாக உழைத்தான். அந்த அலுவலகத்திலேயே முன்னுக்கு வந்துவிடலாம் என்று நம்பினான். ஆனால், அந்த அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கும் லஞ்சம், ஊழல், வருகிற மக்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்ளுதல் போன்றவற்றால் மனம் கஷ்டப்பட்டான். தவறு என்று சுட்டிக்காட்டி சக ஊழியர்களின் கோபத்திற்கும் ஆளானான். இதைத் தடுக்கமுடியாதா என்று பலநாள் மனதிற்குள் விம்மினான்.

அந்தச் சமயத்தில்தான், கதிரேசனின் நிலையையும், அவர் தைரியமாக லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று போராடியதையும் கவனித்தான். அவருக்கு எந்தவகையிலாவது உதவ உறுதிகொண்டான்.

சில, பல நாள் யோசனைக்கு பிறகு, அந்த எண்ணம் தோன்றியது. அதை உடனே செயல்படுத்த முடிவெடுத்து, இன்று காலை பதிவாளரை சந்தித்து விஷயத்தைக் கூறினான். அதைக் கேட்ட அவர் அதிர்ச்சியானார்.

"என்னய்யா சொல்ற? நீ சொல்றது உண்மையா?"

"ஆமாம் சார், என் நன்பன் ஒருவன் ஜூனியர் விகடனில் ஃபோட்டோகிராஃபராக வேலை செய்கிறான், அங்குதான் கதிரேசன் ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டரா வேலை செய்றாராம். அவரின் நிலப்பட்டா விஷயத்தைக்கொண்டு இந்த அலுவலகத்தில் நடக்கும் அராஜகத்தை வெளிக்கொண்டு வருவதாக பிராஜக்டாம். அவரிடம் பென் காமிராகூட இருக்கு, ஃபோட்டோ எடுத்துவிடுவார், ஜாக்கிரதையாக இருந்துகொள் என்று சொன்னான். இதோ பருங்க அவர் பெயர்போட்டு ஜூனியர் விகடனில் வந்த சில கட்டுரைகள். இந்தப் பின்புலம் இருப்பதால்தான், தைரியமாக அவர் மற்ற ஆஃபிசர்களிடம் சண்டை போட்டார். இதுவரை, என்ன மாதிரி தகவல், ஃபோட்டோ எடுத்திருக்கார் என்று தெரியவில்லை. நீங்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இதை, நான் வேறு யாரிடமும் சொல்லவில்லை, உங்களிடம் மட்டும்தான் சொல்கிறேன். நம்புவதும், நம்பாமல் இருப்பதும் உங்க இஷ்டம்."

பதிவாளருக்கு பயம் கவ்விக்கொண்டது. சமீபகாலமாக, டீவி, பத்திரிக்கை போன்ற ஊடகங்கள் இதுபோன்ற ஆபரேஷன்களை செய்துவருவதால், இதுவும் அதுபோல் இருக்குமோ என்று நினைத்தார். குமரனும் விவரமானவன், அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே இருந்துவந்ததால், அவன் தனக்கு நல்லதுதான் செய்வான் என்று நம்பினார். விசாரித்த மற்றவர்களும் "ஆமாம் சார், அந்த ஆள் கொஞ்சம் விவகாரம் புடிச்சவராக இருக்கார்" என்று கதிரேசனைப்பற்றி சொல்லவும், எதற்கு வம்பு, அதுவும் இன்னும் ஏழு ஆண்டில் ஓய்வுபெற இருக்கையில் என்று நினைத்து கதிரேசனை மரியாதையாக நடத்தி, தேவைகளை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்.

கதிரேசன் குழப்பத்துடன் ஆனால் மகிழ்ச்சியாக சாலையைக் கடந்ததை பெருமிதத்துடன் பார்த்த குமரன் , கதிரேசன் என்ற பெயரில் ஜூனியர் விகடனில் வந்த சில கட்டுரைகளை வைத்துக்கொண்டு, இந்தக் கதிரேசனை லஞ்சத்திலிருந்து பாதுகாத்து, ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட நிம்மதியுடன் இருக்கைக்குத் திரும்பினான்.

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com