முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 18)
நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கவேண்டும் என்று சூர்யா கோரியதும், குழுவைக் கூட்டுவதாக அகஸ்டா அறிவித்தாள். ஆனால், சூர்யாவோ மறுதலித்து, குழுவினரைத் தனித்தனியாகச் சந்தித்து விசாரிக்க விரும்பினார். ஒப்புக்கொண்ட அகஸ்டா, முதலாவதாக தன்னுடன் குட்டன்பயோர்கை நிறுவிய தலைமைவிஞ்ஞானி அலெக்ஸ் மார்ட்டன் என்பவரைச் சந்திக்க மூவரையும் அழைத்துச் சென்றாள்.

அலெக்ஸ் மார்ட்டனின் தனியறை வெறும் அலுவலக அறையாக இல்லை. ஓர் ஆராய்ச்சிக்கூடம் அலுவலகத்தோடு ஒருங்கிணந்து அர்த்தநாரீஸ்வரர் போல் பாதிப்பாதியாக இருந்தது. ஒருபுறம், மேஜையும் அதன் பின்பக்கம் தலைமை நாற்காலியும், சுற்றிச் சில இருக்கைகளும் இருந்தன. அறையின் மறுகோடியிலோ, சுவர்ப்பக்கங்களில் ஆராய்ச்சி மேடைகள். அவற்றில் பலதரப்பட்ட ஆராய்ச்சி சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அப்பாதியின் நடுவில் சுழலக்கூடிய சேமிப்பகம் பொருத்தப் பட்டிருந்தது. அதன் அறைகளில் பலவிதமான வேதியல் மற்றும் உயிரியல் மூலப்பொருட்கள் குப்பிகளில் வைக்கப்பட்டிருந்தன.

அறையின் அலுவலகப் பகுதியில் தலைமை நாற்காலியில் அமர்ந்து எதையோ கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அலெக்ஸ் மார்ட்டன், கதவை மெல்லத் தட்டிவிட்டு உள்ளே வந்தவர்களைப் பார்த்துச் சற்றே திடுக்கிட்டவர் சட்டென்று கையில் இருந்ததைக் கவிழ்த்து வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். "அகஸ்டா, வாங்க, வாங்க! உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை! இவங்க யார்? என்ன விஷயம்?"

அகஸ்டா ஒரு பக்கமாக அமர்ந்துகொண்டு மற்ற மூவரையும் அமருமாறு சைகை காட்டினாள். கிரணும் ஷாலினியும் உடனே அமர்ந்தனர். சூர்யாவோ சில நொடிகள் அறையை கூர்ந்து நோட்டமிட்டுவிட்டு ஏதோ புரிந்ததுபோல் தலையாட்டிக்கொண்டு அமர்ந்தார். அகஸ்டா அவர்களை அலெக்ஸுக்கு அறிமுகம் செய்தாள். "அலெக்ஸ், இவர்கள் நம் பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்துவைக்க உதவ வந்திருக்காங்க..."

அலெக்ஸ் புருவத்தை உயர்த்திக்கொண்டு, "உம்... உதவறது நல்லதுதான். ஆனா இது விஞ்ஞான நுட்பமாச்சே? இதைக் கண்டுபிடிக்கற அளவுக்கு இந்தத் துறையில இவங்களுக்கு ஞானமிருக்கா?"

அகஸ்டா ஏதோ பதிலளிப்பதற்குள், சூர்யா ஒரு அதிர்வேட்டு வீசினார், "அலெக்ஸ், உங்களைச் சந்திக்கறதுல மிக்க மகிழ்ச்சி. நீங்க ஹிப்ஹாப் இசையில் அதீத ஆர்வமா இருக்கீங்க போலிருக்கு. ஒரு விஞ்ஞானிக்கு இந்தமாதிரி இசையில ஈடுபாடு இருக்கறது ஆச்சர்யந்தான். மேற்கத்தியப் பாரம்பரிய இசையில் ஆர்வமிருக்கறதுதான் வழக்கம்."

அலெக்ஸின் முகம் போன கோணலைப் பார்த்து அகஸ்டா களுக்கென சிரித்துவிடவே, அலெக்ஸுக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன அகஸ்டா இது? இவங்க ப்ரைவேட் டிடெக்டிவ்ஸா? இவங்களை வச்சு என் பின்னணியையும், தனிவாழ்க்கை ஆர்வங்களையும் ஆராய வச்சீங்களா, என் மேலயே சந்தேகமா? சே! என்னால நம்பவே முடியல அகஸ்டா!"

அகஸ்டா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு, "இல்லவே இல்லை அலெக்ஸ். நீங்க தப்பா நெனச்சிருக்கீங்க. சூர்யா ஒரு மிகச்சிறந்த துப்பறிவாளர். இந்த அறையில சில நொடிகளில் எதையோ கவனிச்சுதான் யூகிச்சிருக்கணும். அப்படி அதிரடியா யூகிச்சுதான் எனக்கும் நம்பிக்கை அளிச்சார். சூர்யா, ப்ளீஸ் நீங்களே விளக்கிடுங்க!"

சூர்யாவும் முறுவலுடன் விளக்கலானார். "நான் சொன்னால், பூ! இவ்வளவுதானான்னுடுவீங்க. பரவாயில்ல, சொல்றேன். இந்த அறையில நிறைய விஞ்ஞானக் கருவிகளும், புத்தகங்களும் நிரம்பி வழிந்தாலும், அதோ ஒரு மூலையில, புத்தக அடுக்குக்குப் பின்னாடி ஒரு அடுக்கு ஹிப்ஹாப் இசைக்கான தலையாய பத்திரிகை அடுக்கு இருக்கு. இங்க இருக்கற காபினெட்ல பல சி.டி.க்கள் வரிசையா சாய்ச்சு வச்சிருக்கு. அதுல இருக்கறதுல பெரும்பாலும் ஹிப்ஹாப் இசையின் பெருந்தலைகளின் தகடுகள்தாம்."

அலெக்ஸ் தலையை பின்தள்ளிக் கொண்டு ஹாஹாவெனச் சிரித்துக்கொண்டு சூர்யாவின் கையைக் குலுக்கினார். "சரிதான் சூர்யா! இவ்வளவுதானான்னு கேக்கத் தோணுது. ஆனா அறைக்குள்ள நுழஞ்ச சில நொடிகளுக்குள்ள கவனிச்சது பிரமாதந்தான். அகஸ்டாவின் நம்பிக்கைக்கு என்ன காரணம்னு எனக்கும் புரிஞ்சுடுச்சு!"

சூர்யா சட்டென்று கேட்டார். "உங்க பிரச்சனைக்கு என்ன காரணம்னு நீங்க விஞ்ஞானரீதியா நினைக்கறீங்க?"

அலெக்ஸ் சோகமாகத் தலையசைத்தார். "அப்படித் தெரிஞ்சுட்டா உங்களை ஏன் கூப்பிடப் போறோம்? என் நீண்டகால அனுபவத்துல, மூல உயிரணுக்கள் இப்படிப் பிசிறாகறா மாதிரிப் பார்த்ததே இல்லை. நீங்க எப்படி இந்த மர்மமுடிச்சை அவிழ்க்கப் போறீங்க?"

ஷாலினி குறுக்கிட்டாள். "நானும் ஒரு விஞ்ஞான முனைவர்தான் அலெக்ஸ். சூர்யா இம்மாதிரியான பலதரப்பட்ட தொழில்நுட்பத்துறைகளிலும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கண்டிருக்கார்."

அகஸ்டாவும் தன் பங்குக்கு, "அலெக்ஸ், இவரைச் சாதாரணமா நினச்சிடாதீங்க. நான் விளக்குமுன்பே நம் காப்பிலரி ரத்தநாள நுட்பத்தையும், அங்கங்களைப் பகுதிபகுதியாப் பதிச்சு ஒட்டவைக்கற நுட்பத்தையும் இவரே கிரகிச்சுக்கிட்டு சொல்லிட்டார். இவர் மின்வில்லைத் தொழில்நிபுணர். அதனால, இப்படிப்பட்ட பதிப்பு நுட்பங்களும் உடனே புரியுது. உயிரியல் நுணுக்கங்களைத்தான் நாம் அவருக்கு கொஞ்சம் விளக்கி உதவணும்."

அலெக்ஸின் அவநம்பிக்கை விலகியது! "ஓ! வெரி குட். சரி இப்ப அடுத்து என்ன விசாரிக்கப் போறீங்க?"

சூர்யா கூர்ந்து அலெக்ஸின் முகத்தைக் கவனித்தபடி, "எனக்கு உங்க ஹிப்ஹாப் ஆர்வம் இன்னும் ஆச்சர்யமா இருக்கு... அதப்பத்தித்தான் ஒண்ணு கேக்கணும். உங்க ஆர்வம், மிக அதிகமான நிதி செலவுல கொண்டு விட்டிருக்காப் போலிருக்கே! சும்மா இசை கேக்கறது ஓரளவுதான். ஆனா நீங்க ஈடுபட்டிருக்கற கான்ஸர்ட் விவகாரத்துக்கு மிகமிக அதிகமான நிதி தேவையாச்சே, எப்படி சமாளிக்கப் போறீங்க?"

அலெக்ஸின் முகம் அதிர்ச்சியால் விகாரமானது. "என்ன ... எப்படி..." என்று திணறியவர் சுதாரித்துக்கொண்டு "ஹோ, ஹோ!" எனச் சிரித்தார். "என்ன மீண்டும் யூகமா? ரொம்ப க்ளெவர்தான். இதை எப்படிப் பிடிச்சீங்க?"

சூர்யா முறுவலுடன் சுட்டிக்காட்டினார். "இதோ பாருங்க... திறந்த மேஜை உள்ளறை, அதுல ஒரு நோட்டுப்புத்தகம் திறந்திருக்கு! அதுல சில கான்ஸர்ட் நடந்த தேதிகள், லாப நஷ்டம், இன்னும் நடக்கப்போற நிகழ்வுகள், அவற்றின் டிக்கெட் விற்பனை எல்லாம் பதிக்கப்பட்டிருக்கு.

அதன்படி பாத்தா, உங்களுக்கு பண நஷ்டமுமிருக்கு, தேவையுமிருக்குன்னு தெரியுது..."

அலெக்ஸ் முறைத்தார். "அது என்னோட சொந்தவிஷயம். அதை நீங்க குடாய்ஞ்சு பாத்திருக்கவே கூடாது. அகஸ்டா என் நிதிநிலை எப்படி இருந்தா என்ன? ஏன் இவர் அதை இங்க இழுக்கறார்?"

அகஸ்டாவும் "சூர்யா, வேண்டாம் இது..." என்று இழுத்ததும், சூர்யா கையசைத்துத் தடுத்தார். "ஆனா, அலெக்ஸ், குட்டன்பயோர்கின் இந்தப் பிரச்சனை யாருக்கெல்லாம் லாபம் தரக்கூடியது என்று நான் விசாரித்தே ஆகவேண்டும். அதன்படி பார்த்தா, உங்க நிதித்தேவை அந்தத் திக்குல சார்ந்ததோன்னு ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவுதான்."

அலெக்ஸ் வெடித்தெழுந்தார். "எ... எ... என்ன! ஹேய், கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசுங்க. என்மேலயே சந்தேகமா? நான் குட்டன்பயோர்கின் இணைநிறுவனர்; அத மறந்துட்டீங்களா? நானே அதுக்குப் பங்கம் விளைவிப்பேனா? இந்தப் பிசாத்து கான்ஸர்ட் நிதி நிலவரம் ரொம்பச் சின்னது. அகஸ்டா அழச்சிக்கிட்டு வந்திருக்கறதால சும்மா அப்படியே உடறேன்! கெட் லாஸ்ட்! உடனே போயிடுங்க! இல்லன்னா நடக்கறதே வேற. அகஸ்டா அழச்சுகிட்டு போயி, வேற யாரையாவது குடாயச் சொல்லுங்க!" என்று குமுறிவிட்டு நாற்காலியில் அமர்ந்து சுவர்ப்பக்கம் திரும்பிக்கொண்டார்.

அகஸ்டாவும் அதிர்ச்சியடைந்திருந்தாள். அதிலிருந்து மீளாமலேயே சூர்யாவைக் கடிந்துகொண்டாள். "சே, சே! சூர்யா, என்ன இப்படி ஒரு தகாத கேள்வியை அலெக்ஸையே கேட்டுட்டீங்க. என்ன தேவையாயிருந்தாலும் அவர் தன் குழந்தையான குட்டன்பயோர்குக்கு பங்கம் விளைவிக்கமாட்டார். இது ரொம்ப அநியாயம். இந்த மாதிரியான கேள்வி வழிமுறை வேண்டாம். நிறுத்திடுங்க. உங்களுக்காக நானே அலெக்ஸ்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்." என்றாள்.

சூர்யா பவ்யமாகக் குனிந்து ஏற்றுக்கொண்டார்... "இப்போதைக்கு உங்க உத்தரவாதமே போதும் அகஸ்டா" என்றார். ஆனால் அவர் மொத்தமாக அலெக்ஸ் நிதித்தேவை விஷயத்தை விட்டுவிடவில்ல என்பதைக் கிரண் குறித்துக்கொண்டான்.

"அலெக்ஸ்..." என்று ஆரம்பித்த அகஸ்டாவை, திரும்பாமலேயே கையை உயர்த்தித் தடுத்து, "வேண்டாம் அகஸ்டா, நான் கோவத்துல எதாவது ஏடாகூடமா செஞ்சுடப் போறேன். இங்க நிக்காதீங்க. உடனே போயிடுங்க!" என்று கூச்சலிடவே, நால்வரும் அறையிலிருந்து வெளியேறினர்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com