எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 4)
மற்றொரு டாக்டர்

விலங்குகள் மருத்துவமனையில் ஒவ்வொன்றாக ஏற்பாடுகள் நடந்தன. சோகத்தோடு ரமேஷ், கீதா மற்றும் அருண் சிறிதுநேரம் கழித்து பக்கரூவைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். கிளம்பும் முன்னர் கீதா டாக்டரிடம் விடை பெற்றுக்கொண்டார். வீட்டுக்குத் திரும்பிப் போகும்பொழுது காரை ரமேஷ் ஓட்டினார். பின்சீட்டில் கீதாவும் அருணும் உட்கார்ந்து இருந்தனர். பக்கரூ அருணின் மடியில் படுத்துக் கொண்டிருந்தான்.

வண்டியின் உள்ளே நிசப்தம். காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததில் அனைவருக்கும் ஒரே பசி. அதற்கு மேலே பக்கரூவின் உடல்நிலை பற்றிய கவலை.

"அம்மா."

"என்னப்பா?" களைப்போடு கேட்டார் கீதா.

"நாம வேற டாக்டர்கிட்ட போலாமா?"

அது ஒரு சிறுவனின் கேள்வி. தனது செல்லநாய்க்குட்டியை நினைத்துக் கேட்பது.

"எதற்காகப்பா அப்படிக் கேக்குற?"

"வேற டாக்டர் நம்ம பக்கரூவை குணப்படுத்தினா நல்லதுதானே?"

அந்தச் சிறுவன் மருத்துவத்தில் Second Opinion பற்றி நினைவுபடுத்தினான். ஆனால், களைப்பும் பசியும் அப்பாவைக் கோபங்கொள்ளச் செய்தன.

"என்ன? டாக்டர் உட்ஸ் முட்டாள்னு நினைச்சியா? அவங்கதான் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களே!"

அதற்குமேல் ஒன்றும் பேசாமல் சட்டென்று வண்டியை ஓரத்தில் நிறுத்தி இறங்கினார். வீடு அங்கிருந்து மிகவும் பக்கத்தில்தான். "என்னால் இதுக்குமேல வண்டில உட்கார முடியாது. நான் கிளம்பறேன்" என்று சொல்லிக்கொண்டே நடந்தார் ரமேஷ்.

ரமேஷ் போனபின்னர் "அம்மா, எதுக்கம்மா அப்பா இவ்வளவு கோபப்படுறாரு?’ என்று விசும்பியபடி கேட்டான் அருண். "நான், நம்ம பக்கரூவை காப்பாத்ததானே கேட்டேன்." பதில் பேசாமல் அருணை இறுக்கிக் கட்டிக்கொண்டார் கீதா. குழந்தையின் மனம் அவருக்குப் புரிந்தது. கணவரின் எரிச்சலும் புரிந்தது. இரண்டுமே பக்கரூவின் நிலைமையினால்தான் என்று அறிந்து கண்ணில் வந்த நீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார்.

"அம்மா, நம்ம ஏன் அம்மா வேற டாக்டர்கிட்ட கேக்கக்கூடாது?"

மகனின் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது. அதற்கும் மேலே, அப்படியாவது பக்கரூவைக் காப்பாற்ற முடியுமா என்ற ஒரு நப்பாசையும் இருந்தது.

"கண்ணா, முதல்ல சாப்டுட்டு பேசலாமா? வா, Inn-Out Burger போகலாம்" என்று சொல்லியபடி அவரே டிரைவர் சீட்டுக்குப் போனார்.

சற்று நேரத்திற்குப் பின் அவர்கள் வண்டியின் உள்ளே உட்கார்ந்துகொண்டு, பர்கர் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தனர். "சொல்லுப்பா, இப்ப சொல்லு. அம்மா இப்ப ரொம்ப ஸ்ட்ராங் ஆயிட்டேன்" என்று சொல்லி கீதா சத்தமாகச் சிரித்தார். அவர் குரலில் ஒரு தெம்பு இருந்தது.

"டாக்டர் உட்ஸ் தவிர மத்த டாக்டர்கிட்ட ஏன் அம்மா கேக்கக்கூடாது?"

"யாராவது அப்படி உனக்குத் தெரியுமா கண்ணா?"

"ஏன் அம்மா, நம்ம டாக்டர் உட்ஸ்கிட்டயே கேட்கலாமே?" அருண் சொன்னது கீதாவுக்கு வியப்பாக இருந்தது. தனது மகன், ஒரு குழந்தைபோல இருப்பவன், ஒரு செயல்வீரன் போலப் பேசியது அவருக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது.

உடனடியாக, டாக்டருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அனுப்பிய சிலநிமிடங்களில் பதில் வந்தது. அவர் மற்ற டாக்டர்களின் தொடர்பு விவரங்களைக் கொடுத்திருந்தார். கீதாவும், நம்பிக்கையோடு மற்ற டாக்டர்களுக்கு பக்கரூவின் உடல்நலம் பற்றி விவரங்களை அனுப்பினார். டாக்டர் உட்ஸ் எக்ஸ்ரே மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்பிவைத்தார்.

"அம்மா, எப்படியாவது ஒரு டாக்டராவது நம்ம பக்கரூவை காப்பாத்திடுவாங்க இல்லையா?" என்று கவலையோடு கேட்டான் அருண்.

கீதாவுக்கும் ஒரு நம்பிக்கை வந்தது. ஒருவிதமான எதிர்பார்ப்போடு வீடுவந்து சேர்ந்தனர். அன்று இரவுவரை ஒன்றன் பின் ஒன்றாக மற்ற டாக்டர்களிடம் இருந்து பதில் வர ஆரம்பித்தது. எல்லோரும் ஒரே அபிப்பிராயம்தான் கொடுத்திருந்தனர்: பக்கரூ பிழைப்பது மிகக்கடினம்.

ஒவ்வொரு பதிலையும் படித்த அருண், அழுகையை அடக்கிக்கொண்டு, "மாட்டேன் அம்மா, மாட்டேன். நான் நம்ம பக்கரூவை சாகவிடமாட்டேன். எப்படியாவது ஒரு வழி கிடைக்கும்" என்று ஒரு மாவீரன்போலச் சபதம் செய்தான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்;
படம்: Anh Tran

© TamilOnline.com