மனிதவாழ்வில் புற்றுநோய் ஒரு போராட்டத்தின் துவக்கம். மருத்துவ உதவி மற்றும் தன்னம்பிக்கையுடன் நாம் அதை முறியடிக்கலாம். புற்றுநோய் என்றாலே உயிருக்கு ஆபத்தான நோய் என்பது மாறி, மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அதுவொரு நீடித்தநோய் ஆகிவிட்டது. புற்றுநோய்க்கு முழுமையான தீர்வில்லை என்றாலும், கட்டுக்குள் வைக்கமுடியும். இளவயதினருக்கு நீண்டநாளாக அறிகுறி இல்லாமலிருந்து, திடுமெனக் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் நிணநீர்த்திசுப் புற்றுநோய் குறிப்பிடத்தக்கது.
நமது ரத்த அணுக்களில் பலவகை வெள்ளையணுக்கள் உள்ளன. இவற்றில் ஒருவகை நிணநீர் உயிரணு (Lymphocyte) எனப்படும். இது நமது நோயெதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் நிணநீர்க்கணுக்களில் (lymph node) அதிகம் காணப்படும். இந்த நிணநீர்க்கணுக்கள் உடலில் எல்லாவிடங்களிலும் உள்ளன. அவற்றின் முக்கியவேலை நோயெதிர்ப்புச் சக்தியை வளர்ப்பது. நுண்ணுயிர் கிருமிகள் தாக்கும்போது இந்த நிணநீர்க்கணுக்கள் வீங்குவது இயல்பு. சில வேளைகளில் இருமல், சளி வந்தால் கழுத்துப் பகுதியில் இருக்கும் நிணநீர்க்கணுக்கள் வீங்கலாம். இருமலும் சளியும் நின்றவுடன், வீக்கமும் குறைந்து விடும். ஆனால் இந்த அணுக்களின் உற்பத்தியில் கோளாறு ஏற்பட்டால் அது புற்றுநோயாக மாறி இதன்மூலமும் நிணநீர்க் கணுக்கள் வீங்கலாம். அப்படி ஆகும்போது அவை பல வாரங்களுக்குத் தொடர்ந்து வீங்கும். இந்தவகைப் புற்றுநோயை 'Lymphoma' என்று சொல்வர்.
வகைகள் இது Hodgkin's Lymphoma என்றும் Non Hodgkin's Lymphoma என்றும் இரண்டு வகைப்படும். இதை நிணநீர்க்கணுவின் திசுப் பரிசோதனையில் (Biopsy) கண்டு பிடிக்கலாம். அணுக்களின் வடிவம், அவை பரவும் விதம், தீவிரம் இவற்றைப் பொறுத்து என்ன வகை என்று மருத்துவர்கள் சொல்வர். ஹாட்கின்ஸ் லிம்ஃபோமாவில் நான்கு வகைகள் உண்டு. Non Hodgkin's லிம்ஃபோமாவில் B cell, T cell என்று 2 வகைகள் உண்டு.
அறிகுறிகள் இரண்டு வகைகளுக்கும் அறிகுறிகள் பொதுவானவையே.
* நிணநீர் கணுக்கள் வீங்குதல் * விடாத காய்ச்சல், குளிர் * அதீதமான களைப்பு * இரவில் வியர்த்துக் கொட்டுதல் * எடை குறைதல் (உடலின் பத்து சதவிகிதம் மேல் குறைதல்) * பசி எடுக்காதிருத்தல் * வயிறு வீங்குதல் * மூச்சு வாங்குதல் * தோல் அரிப்பு போன்றவை
இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருசில வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
யாரைத் தாக்கும்? இளவயதினரை, 15லிருந்து 30 வயதுக்குள் இருப்பவரையும், 45 வயதுக்கு மேலானவரையும் தாக்கக்கூடும். NHL வகை 60 வயதுக்கு மேலானவருக்கும் வரலாம். குடும்ப வரலாறு இருப்பவர்களுக்கு இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு லிம்ஃபோமா வருவது அதிகம். EBV வைரஸ் தாக்கியவர்களுக்கு, பிற்காலத்தில் Lymphoma வரலாம். இதைத்தவிர எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களுக்கும், உறுப்புமாற்றுச் சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் வரலாம். ஒரு சில ரசாயனங்கள் மூலமும் ஏற்படலாம். செடி கொடிகளுக்கு உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் மூலமும் ஏற்படலாம்.
நோயின் தீவிரம் மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும். ரத்தப் பரிசோதனை, CT ஸ்கேன், எலும்புமஜ்ஜை பரிசோதனை, நிணநீர்க் கணுக்களின் திசுப்பரிசோதனை தேவைப்படும். இவற்றை மருத்துவமனையில் சேர்த்தும் செய்யவேண்டி வரலாம். நோயின் தீவிரத்தை 4 நிலகளாகப் பிரிப்பர்.
நிலை 1: நிணநீர்க்கணு ஒரே இடத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரேயொரு உறுப்பை பாதித்திருந்தாலோ அது முதல் நிலை.
நிலை 2: இரண்டு பகுதிகளில் நிணநீர்க்கணுக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அருகருகே உறுப்புகள் பாதித்திருந்தாலோ அது நிலை 2. உதரவிதானம் (Diaphragm) தசைக்கு மேலோ அல்லது கீழ்ப்பகுதியோ பாதிக்கப்பட்டிருந்தால் அது நிலை 2.
நிலை 3: உடலின் பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். உதரவிதானத்துக்கு மேலும் கீழும் கணுக்கள் வீங்கிக் காணப்படும். மண்ணீரல் (Spleen) பெரிதாக இருக்கலாம்.
நிலை 4: உடலின் பல இடங்களிலும் பாதிப்பு இருக்கும், கல்லீரல், எலும்பு, நுரையீரல் போன்றவையும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
மருத்துவர்கள் இந்த நிலைகளை A, B என இரண்டாகக் குறிப்பிடுவர். உதாரணம் Stage 1A அல்லது Stage 1B. A என்பது காய்ச்சல், எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இல்லாத நிலையையும், B என்பது அந்த அறிகுறிகளோடு இருப்பதையும் குறிக்கும்.
சிகிச்சை லிம்ஃபோமாவின் வகை, நிலை ஆகியவற்றை வைத்துச் சிகிச்சை தீர்மானிக்கப்படும். மிகமிக மெதுவாகப் பரவும் வகைகளுக்கு குறிப்பாக Follicular Lymphoma வகைக்குச் சிகிச்சை தேவையில்லை. அவை மிக மெதுவாகப் பரவுவதால், சிகிச்சையின் பின்விளைவுகள் அதிகம். அதனால் இவற்றைக் கண்காணிப்பில் வைப்பதே போதுமானது. அடிக்கடி ஸ்கேன் பரிசோதனை மூலம் நிலை அறியப்படும். அதிவிரைவாகப் பரவும் வகைகளுக்கு கீமோதெரபி தேவைப்படும். கீமோதெரபி இவற்றுக்கு நன்றாகக் கேட்கும். அதனால் நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும். கீமோதெரபியுடன் கதிர்வீச்சு (ரேடியேஷன் தெரபி) தேவைப்படலாம். ஒரு சிலருக்குத் தண்டு உயிரணு (Stem cell) மாற்றுச்சிகிச்சை தேவைப்படலாம். சிலவேளை எதிர்ப்புச் சக்தியை மாற்றும் மருந்துகள் அளிக்கப்படலாம்.
லிம்ஃபோமா இளவயதினருக்கு வரும் புற்றுநோய் ஆனாதால் பயம் அதிகமாக இருந்தாலும், இதைக் கட்டுக்குள் வைக்கமுடியும். சிகிச்சை முடிந்தபின்னரும் வருடத்துக்கு ஒருமுறை ஸ்கேன் செய்யவேண்டி வரலாம். குடும்பவரலாறு இருப்பவர்கள் மேலோட்டமான அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாகப் பரிசோதனை செய்துகொண்டால் நோயைத் தொடக்கநிலையில் கண்டுபிடித்துவிடலாம். முடிந்தவரை ரசாயனத்தால் பக்குவப்படுத்திய உணவு வகைகளைத் (Processed Food) தவிர்ப்பதன்மூலம் புற்றுநோய்களைக் குறைக்கலாம்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன், கனெக்டிகட் |