சுபாஞ்சலி: ஆண்டுவிழா
அக்டோபர் 25, 2015 அன்று சுபாஞ்சலி நாட்டியப்பள்ளியின் 22வது ஆண்டுவிழா, நியூ ஜெர்சியின் பாஸ்கிங் ரிட்ஜ் கலைக்கூடத்தில் கொண்டாடப்பட்டது. தத்துவம், தபஸ், தேஜஸ் என்ற தலைப்பின் கீழ் நிகழ்ச்சி வழங்கப்பட்டது.

ஆண்டவன் ஒருவனே என்று கூறும் "ப்ரம்மமொகடே", ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்ட பாடல், சிவதாண்டவ நடனம், ஆதிசங்கரரின் கங்காஷ்டகம், வில்வாஷ்டகப் பாடல் என்று அடுத்தடுத்து மிகச்சிறப்பான நடனங்கள் கண்களுக்கு விருந்தாயின. நான் என்ற அகம் எப்படி இறுதியில் ஆத்மாவாக மாறுவதாகிய ஞானத்தை அடைகிறது என்றும், "வேதம் என்று வாழ்க என்றும் கொட்டு முரசே" என்ற அருமையான பாரதியின் பாடலுக்கும், சிவனுடைய உடுக்கையொலி அலைபாயும் மனதை எப்படி மாற்றுகிறது என்றும் நடனத்தில் அபிநயிக்கப்பட்டது. கண்ணன், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, முருகன் பாடல்களுக்கு தேவ தேவியர் மேடையில் தோன்றி மகிழ்வித்தனர். கோபியர் கொஞ்சும் ராஸலீலை பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

குரு சுபா ரமேஷ் பர்மாரும் அவரது புதல்வி மதுமிதாவும் இரட்டை சகோதரிகள் போன்று கங்காஷ்டகத்திற்கு ஆடியது வெகு அழகு. சுபாஞ்சலியின் ஆசிரியைகளும், குருவும் சேர்ந்து வழங்கிய 'சிருங்கார லஹரி' மிக அற்புதமாக இருந்தது.

இவருக்கு அதிபர் ஒபாமா சிறந்த நடன ஆசிரியர் விருதை வழங்கி உள்ளார். ஆர்ஷ வித்யா குருகுலத்தின் முக்கிய உறுப்பினரும், AIM for Seva அமைப்பின் நியூ ஜெர்சி தலைவருமான திரு. வி. சுவாமிநாதன் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்தார். தனது உரையில், "இதுபோன்ற அரிய வேதாந்தக் கருத்துக்களை இனிமையான பாடல்கள் மூலம் விறுவிறுப்பாகக் கொடுக்கும் ஆற்றல் சுபாஞ்சலிக்கு இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

கோமதி கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்கிங் ரிட்ஜ், நியூ ஜெர்சி

© TamilOnline.com