ரேவதி வாசனின் நாட்டிய அரங்கேற்றம் செப்டம்பர் 17, 2005 அன்று சான் ஹோசே CET அரங்கத்தில் நிகழ்ந்தேறியது. சிஸ்கோவில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றிய இவர் குழந்தைகள் பிறந்தபின் அவர்களின் நலனுக்காகவே பணி துறந்தார். பின்னர் கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் சில வருடங்களிலேயே குரு ப்ரீதா சேஷாத்ரியிடம் பயின்று பரதநாட்டிய அரங்கேற்றத்தைச் செம்மையாகச் செய்துள்ளார்.
'குருப்ரம்மா'வுடன் ஆரம்பித்த நாட்டியம் நடராஜ கவுத்துவத்தையும், ஜதி ஸ்வரத்தையும் இணைத்து ஆரம்பம் முதலே களை கட்டத் தொடங்கியது. ஆபோதியில் அமைந்த 'மீனாட்சி தாயே' என்ற பாடலுக்கு, மீனாட்சியின் அழகையும், அலங்காரம் செய்து கொள்வதில் உள்ள ஆர்வத்தையும் ஆக்ரோஷமான மகிஷாசுரவதத்தையும் அழகுற அபிநயம் செய்தது ப்ரீதா சேஷாத்ரியின் நாட்டிய முத்திரைகளின் தனித்துவத்தைக் காண்பித்தது. நவராக மாலிகையில் ஆடிய வர்ணம் மிக அருமையான சம்பவங்களை நளினமாகக் கண்முன் நிறுத்தியது.
காலை வளைத்துப் பாதத்தை சிரசுக் கருகில் பதித்த முத்திரைக்கு அதிகமான கைதட்டலைப் பெற்றுக் கொண்டார் ரேவதி. குருவின் முயற்சிக்குப் பின்னால் ரேவதியின் கடும் உழைப்புத் தெரிகிறது. அடுத்து வந்த 'மதுரநகரிலே' (ஆனந்த பைரவி) பாட்டிற்கான நடனம் பானையில் தயிர் கொண்டு வந்து உட்கார்ந்து, கடைந்து, வெண்ணை எடுத்து, கிருஷ்ண லீலைகளைக் கண் முன்னே காட்டி களிப்படையச் செய்தது. 'சின்னஞ்சிறு கிளியே' என்ற பாரதியாரின் ராகமாலிகைப் பாடலில் சின்னக் குழந்தை யின் செயல்களையும், தாய் குழந்தையைப் பொறுமையாய் அலங்கரிப்பதும், எண்ணெய் தடவுவதும், பின்னலிடுவதும், அழகுபடுத்திப் பார்ப்பதுமாக அநேக நாட்டிய முத்திரை களைத் தவழவிட்டிருந்தார். 'ஸ்ரீநிவாச திருவேங்கட' (ஹம்சத்வனி) பாட்டில் நம்மைத் திருப்பதிக்கே அழைத்துச் சென்று உற்சவத்தில் கலந்து கொள்ள வைத்துவிட்டார்.
தில்லானா, இதை சொல்லாமல் இருக்க முடியாது. பம்பரமாக ஆடிப் பரவசப்படுத்தி அசத்திவிட்டார் ரேவதி வாசன். எல்லா வற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல ரேவதி வாசனின் இளஞ்சிட்டுக்கள் இருவரும் மேடையில் ஏறித் தங்கள் மழலையால் 'வெங்கடேச சுப்ரபாதம்' பாடி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டனர்.
குரு ப்ரீதா சேஷாத்ரியின் பாட்டும் நட்டுவாங்கமும் வத்சல சாரதியின் இனிமை யான சாரீரமும் ஷர்மிளா வெங்கட்டின் வயலினும் பாலாஜி மாதவனின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தன. ஒவ்வொரு நடனத்திற்கும் கண நேரத்தில் ஆடை அணிகளை மாற்றி அலங்கரித்து வந்த விரைவு எல்லோரையும் வியக்க வைத்தது.
எந்த வயதிலும், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சாதனை யாளர் பட்டியலில் இன்னுமொரு பெண்ணாக சேர்ந்திருக்கும் ரேவதி வாசன் அனைவரின் பாராட்டுக்குரியவர்.
சசிரேகா சம்பத்குமார் |