லலித கான வித்யாலயா: எம்.எஸ்ஸுக்கு இசை அஞ்சலி
நவம்பர் 8, 2015 அன்று கலிஃபோர்னியா லிவர்மோர் கோயிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு ஃப்ரீமான்ட் ஸ்ரீ லலித கான வித்யாலயா கர்நாடக இசைப் பள்ளியினர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அளித்தனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் திருமதி M.S. சுப்புலட்சுமி அவர்களின் பாடல்களைப் பாடினர்.

நிகழ்ச்சியைத் துவக்கிவைத்த திருமதி. உஷா ராமஸ்வாமி, திருமதி. லதா ஸ்ரீராம் மற்றும் அவரது பள்ளியை அறிமுகப்படுத்தினார். லதா ஸ்ரீராம் இந்த நிகழ்ச்சியை M.S அம்மாவின் 100வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணம் செய்தார். தொகுத்து வழங்கிய திருமதி. வசந்தி வெங்கட்ராமன் பாடல் விளக்கங்களுடன் அறிமுகப்படுத்தினார். "ஸ்ருதி ஸ்மிருதி" என்ற சத்குரு தசகத்துடன் தொடங்கி, கணேச பஞ்சரத்தினத்தை இறைவணக்கமாகப் பாடி, தியாகராஜரின் "ஜகதானந்தகாரகா", "பண்ட்டுரீதி", கல்பனா ஸ்வரங்களுடன் "சீதம்ம மாயம்மா" என்று பாடல்கள் தொடர்ந்தன. "பக்கல நிலபடி" மையப் பாடலாக அமைந்தது. "ரகுவம்ச சுதா", "டோலாயாம்", "பிருந்தாவனத்தில்" போன்ற பாடல்களைச் சிறுவர் சிறுமியர் வெகு நேர்த்தியாகப் பாடினர்.

"குறை ஒன்றும் இல்லை", "சிவ பஞ்சாக்ஷரம்" பாடிய பின், உலக அமைதியை வேண்டும் "மைத்ரீம் பஜத" பாடலுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். பாட்டுக்கு பக்கபலமாக ஸ்ரீ நாதோபாசனா மிருதங்கப் பள்ளி மாணவர்கள் மிருதங்கமும், 'ட்ரினிடி சென்டர் ஆஃப் மியூசிக்' பள்ளி மாணவியர் வயலினும் வாசித்தனர். இந்த நிதிதிரட்டு விழா M.S. அம்மாவை நினைவு கூறும் விழாவாக அமைந்தது.

© TamilOnline.com