அட்லாண்டா இந்துக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் மற்றும் ஸ்ரீராமலிங்கேஸ்வரர் ஆலயங்கள் தென்னாட்டு ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டு எழிலுடன் திகழ்வன. அட்லாண்டா கோவிலின் 25வது ஆண்டான 2015ல், நவம்பர் 18 முதல் 28ம் தேதிவரை சதசண்டி ஹோமத்துடன் அதிருத்ர மஹாயாகம் விமரிசையாக நடத்தப்பட்டது. 121 ரித்விக்குகள் 11 நாட்களுக்கு தினமும் 11 முறை ருத்ரத்தை ஜபித்து அதிருத்ரம் செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்த பிரும்மஸ்ரீ நரேந்திர காப்ரே அவர்கள் இதற்குத் தலைமை தாங்கினார்.
தினமும் ஸ்ரீருத்ர ஜபம் முடிந்தவுடன் 121 பேரும் பதினொரு ஹோம குண்டங்களில் ருத்ரஹோமம் செய்தது தனிச் சிறப்பாகும். இதனுடன் தினமும் பக்தர்களின் வேண்டுதல் பேரில் சுதர்சன, புருஷசூக்த, அருண, பவமான, ஸ்ரீசூக்த, துர்காசூக்த, புத்ரகாமேஷ்டி முதலிய ஹோமங்களும் நடத்தப்பட்டன. அட்லாண்டா சிவன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீநிவாஸ சர்மா, பெருமாள் கோவில் தலைமை குருக்கள் கோபால பட்டர் மற்றும் இதர சைவ, வைணவ அர்ச்சகர்கள் இணைந்து அபிஷேக அர்ச்சனைகளைச் செய்தனர்.
தினமும் மாலையில் நான்கு வேத, உபநிஷத்துகள் பாராயணம், இதிகாச, புராண சொற்பொழிவுகள், இசை, நாட்டியம் முதலிய நிகழ்ச்சிகள் நடந்தன. பகவதி சேவை, ஸஹஸ்ர லிங்க பூஜை, கார்த்திகை தீப பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் ஆகியவைகளும் நடந்தன. சிவானந்த ஆசிரமத்தின் தலைவர் சுவாமி அத்யாத்மானந்தா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தினமும் சொற்பொழிவாற்றினார். வட அமெரிக்காவில் வாழும் திரு. யக்ஞசுப்ரமணியன், திரு. நாரயணசாமி, திரு கிஷோர், மற்றும் சில சிறப்பு விருந்தினர்களை இந்துக்கோவில் கௌரவித்தது. இவர்கள் வட அமெரிக்காவில் அதிருத்ர மஹாயாகம் நடத்திவுள்ளனர். விழாவில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து கலந்துகொண்டனர். இந்த மஹாயக்ஞம் நெஞ்சைவிட்டு அகலாத ஆனந்த அனுபவமாக அமைந்தது.
ராஜாராமன் ராஜகோபாலன் மற்றும் குழுவினர், அட்லாண்டா, ஜார்ஜியா |