டிசம்பர் 7, 2015 அன்று தமிழ் கத்தோலிக்க சங்கம் கிறிஸ்து பிறப்பு விழாவை சேடில்புரூக்கில் அமைந்துள்ள புனித ஃபிலிப் தேவாலயத்தில் விமரிசையாகக் கொண்டாடியது. திருஜெபமாலையுடன் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுத் திருப்பலி 9 தமிழ் குருக்களால் கொண்டாடப்பட்டது. அருட்திரு. பாலா ரெத்தினம் அவர்கள் தலைமைதாங்க அருட்திரு. ஜேம்ஸ் செல்வராஜ் மறையுரை ஆற்றினார்கள். சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை காணிக்கை பவனியில் காணிக்கையாகச் செலுத்தினர். அவை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன. இறுதியில் சிறுவர் மற்றும் பெரியவர் பாடற்குழுக்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்களை தமிழில் அழகாகப் பாடினர். சங்க ஆலோசகர் அருட்திரு. ஆல்பின் ராபி அவர்கள் தலைமையில் அனைத்துத் தந்தையர்களும் புதியதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆசி வழங்கினர்.
இந்தச் சங்கம் நியூ யார்க், நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களின் தமிழ் கத்தோலிக்கர்களால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இது நியூ ஜெர்சியில் திருப்பலியைத் தமிழில் பல தேவாலயங்களில் வருடத்திற்கு 7 முறை கொண்டாடி வருகிறது.
பின்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் தாத்தா அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசளித்தார்.
மேலும் விபரங்களுக்கு வலைமனை: www.tamilcatholicsusa.org
ஜேம்ஸ் ரெத்தினம், நியூ ஜெர்சி |