விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
2006 செப்டம்பர் 2ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் Campbell Heritage Theater - ல் நடந்த அபிநயா டான்ஸ் கம்பெனி மாணவி விபா சுப்ரமணியத்தின் நாட்டிய அரங்கேற்றம் நாட்டை ராகத்தில் குரு வந்தனத்தை தொடர்ந்து ஹிந்தோள ராகத்தில் புஷ்பாஞ்சலியை பயம் கலந்து புன்முறுவலுடன் ஆரம்பித்து, பின் பூரிப்புடன் கூடிய புது தெம்பு, தன்னம்பிக்கையுடன் செய்த புஷ்பாஞ்சலி ஜோர். அதை ஒட்டி சோகம் அழிக்கும் விநாயகர் பாவம் மிக்க நன்றாக இருந்தது.

தொடர்ந்து ஜதிஸ்வரம். ஐந்து விதராகம், ஐந்து வித தாளம் கொண்ட கடினமான ஜதிஸ்வரத்தை கையாண்ட விதம் கன கச்சிதம். நல்ல தீர்மானம். நளினமான அசைவுகள். அடுத்து ஸ்வாமியை அழைத்து வாடி என்னும் பொன்பிள்ளையின் பழமையான வர்ணம். சிறந்த முறையில் துளியும் பிசிகில்லாமல் தாளத்திற்கேற்ப கால் அசைவுகள், பாட்டிற்கேற்ற முகபாவங்கள், ஸ்வாமியை அழைத்து வாடி என கெஞ்சும் போதும் ''என் மொழி கேட்க நீ வா'' என்னுமிடத்திலும் கண்ணில் பிரதிபலித்த பாவம் மிக்க சிறப்பு.

இடைவெளிக்குப் பின் ''ஆடினையே கண்ணா'' எனும் மோகன் கல்யாணி ராக பாடலில் (அம்புஜம் கிருஷ்ணாவின்) கண்ணனின் அற்புத நடனம்தனை துள்ளலுடன் துறுதுறுவென ஓடி ஆடி காண்பித்த விதத்தில் அவையோரின் கரவொலி அடங்க கணப்பொழுது ஆகியது.

அடுத்து அபிராமி அந்தாதியின் 50வது பாடல் ''நாயகி நான்முகி'' எனும் விருத்தத்திற்கு விதவிதமான முகபாவங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றி மாற்றி காண்பித்த விதம் பாராகி, சூலினி எனும் போது சூலத்தால் அழிக்கும் தேவியின் முகபாவம், ''நான் ஒரு விளையாட்டு பொம்மையா'' எனும் பாடலில் தேவியிடம் கெஞ்சிய முகபாவம் யாவும் தத்ரூபம்.

''மாலைபொழுதினிலே'' எனும் கல்கியின் ராகமாலிகை பாடலில் முருகனின் நினைவில் நெஞ்சம் பொங்கி உணர்ச்சிகளை வடித்தவிதம் தொடர்ந்து தில்லானாவில் தாளகதிக்கேற்ப ஆடி, முக பாவத்திலும் கவனம் செலுத்தி விறுவிறுப்புடன் ஆடியது வெகுஜோர்.

பாவம், தாளம், ராகம் இம்மூன்றின் கூட்டுச் சொல்லே பரதம் என்பர். இம்மூன்றினையும் உடைமையாக்கி இது ஓர் அரங்கேற்றம் என ரசிகர்கள் நினைக்கும் இடமளிக்காமல் தன் திறமையை முன் வைத்து லாவகமாக நிகழ்ச்சியை கையாண்ட விதம் மெச்சத் தக்கது. இதில் குருவின் கற்பிக்கும் திறமை, மாணவியின் உழைப்பு, ஆர்வம் பளிச்சிடுகிறது, பாராட்டுக்கள்.

செவிக்கினிய பாடல், சிறந்த பக்க வாத்தியங்கள் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பளித்தன என்பதில் ஐயமில்லை.

சீதா துரைராஜ்

© TamilOnline.com