ஜனவரி 2016: வாசகர் கடிதம்
கிருஷ்ணா எழுதிய 'நிஜமான நினைவுகள்' கட்டுரையைப் படித்துவிட்டு நான் அழுதேன். அது மனதைத் தொட்டது. இந்தக் கட்டுரை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் இளைஞர்களின் கண்ணைத் திறக்கட்டும். எதிர்காலத்திலும் இத்தகைய அற்புதமான எழுத்துக்களைத் தென்றல் வெளியிட எனது வாழ்த்துக்கள்.

குமாரசுவாமி,
சான் ஃப்ரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா

*****


2015 செப்டம்பர் இதழில் தமிழவேள் உமாமகேசுவரன்பிள்ளை, டிசம்பர் இதழில் கோ. முத்துப்பிள்ளை, சி..எம் .முத்து போன்றவர்களைத் தெரியாத பலருக்குத் தெரிந்திடச்செய்வது தென்றல். இது தென்றலால்மட்டுமே முடிகிறது. பணி தொடரட்டும். தென்றல் தவழட்டும்.

பாவலர் தஞ்சை தர்மராசன்,
செயின்ட் லூயிஸ், மிசவுரி

*****


டிசம்பர் இதழில் 'தென்றல் பேசுகிறது' அருமை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையின் சீற்றம் சென்னை மக்களுக்கு அதிக இழப்பையும் உயிர்ச்சேதத்தையும் கொடுத்துள்ளது. ஜாதி, மதம், மொழி பாராமல் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டது தமிழனின் ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. மழை நின்றுவிட்டாலும் நோய்களைத் தடுக்கத் தனியாரும், அரசும் முகாம்கள் அமைத்து மக்களை கவனிக்கத் தொடங்கிவிட்டனர். கூடிய விரைவிலேயே இயல்பு வாழ்க்கைக்கு வருவதற்கு எல்லாம்வல்ல இறைவனை மனமார வேண்டுகிறேன். என். சொக்கன் நேர்காணல், சாதனையாளர் கோகுல் சிரில் இதர பகுதிகளும் நன்றாக இருந்தன. தென்றல் 16வது ஆண்டில் அடி எடுத்துவைக்கும் இந்த தருணத்தில் ஆசிரியர்குழு மற்றும் வாசகர்களை வாழ்த்துகிறேன்.

கே.ராகவன்,
பெங்களுரு, இந்தியா

*****


தென்றல் நவம்பர் இதழில் பத்மஸ்ரீ மனோரமாவின் அஞ்சலி உள்ளத்தைத் தொட்டது. அவருடன் நான் சென்னை வானொலியில் பங்கேற்ற சம்பவம் நினைவுக்கு வந்தது. 60களில் "காப்புக்கட்டி சத்திரம்" நிகழ்ச்சி பிரபலமானது. நான் அருகிலிருந்த ராணி மேரிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தேன். கல்வி தொடர்பான வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். ஒருமுறை என்னை அழைத்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர், "நீங்கள் எங்களுக்காக ஒரு தலைமை ஆசிரியையாக இந்தச் சிறுநாடகத்தில் பங்கேற்க வேண்டும்" என்றார். உடன் நடிப்பவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. அவரும் சொல்லவில்லை.

அந்தக் காட்சி இப்படி: ஒரு பஸ்ஸில் நான் பள்ளிக்குச் செல்லுகையில் என் முன்சீட்டில் ஒரு தாயும் குழந்தையும். நடத்துநர் அவரிடம் குழந்தைக்கு டிக்கெட் வாங்கச் சொல்ல, அவர் குழந்தைக்கு மூன்று வயதே ஆகவில்லையே, ஏன் டிக்கெட் வாங்கவேண்டும் என நீண்ட நேரம் விவாதிக்கிறார். இறுதியில் நடத்துனர் குழந்தைக்கு டிக்கெட் தரவில்லை.

நான் என் பள்ளிக்குச் செல்ல, அங்கே தன் குழந்தையை அப்பெண் கொண்டு வந்து நின்றாள். நான் மூன்றுவயது நிரம்பிய குழந்தைகளைத்தான் சேர்ப்போம் என்கிறேன். அந்தத் தாய், குழந்தைக்கு மூன்றரை வயது ஆகிறது என்று பிறப்புச் சான்றிதழைக் காட்டுகிறார். பேருந்தில் நான் நடத்துனரிடம் அவர் செய்த வாக்குவாதத்தைக் கேட்டதாகவும், மூன்று வயதிற்குக் கீழிருந்த குழந்தைக்கு திடீரென எப்படி மூன்றரை வயதானது என்றும் கேட்கிறேன்.

"அம்மா, பொய் பேசியதற்கு என்னை மன்னியுங்கள். என் குழந்தைக்குக் கல்வி கொடுங்கள்" என்று அழுதுகொண்டே அவர் கெஞ்சுகிறார். பின்னர் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கிறோம்.

நகைச்சுவை நிறைந்த இந்த நாடகத்தில் தாயாக மனோரமாவும், நடத்துனராக நாகேஷும் நடிப்பது பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. 50 ஆண்டுகளாகியும் இதை என்னால் மறக்க இயலவில்லை. கின்னஸில் இடம்பெற்ற ஆச்சி மனோரமா தன் நடிப்பினால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்காத மனிதரும் உளரோ?

முனைவர். கிருஷ்ணவேணி அருணாசலம்,
போர்ட்லேண்ட், ஆரிகன்

*****


நான் பெங்களூரிலிருந்து அமெரிக்கா வந்திருக்கிறேன். இங்கு வந்தவுடன் என் கண்ணில் பட்டது தென்றல்தான். படிக்கப் படிக்கத் திகட்டாத தென்றல். அரசியலிலிருந்து ஆன்மீகம்வரை, நேர்காணலில் இருந்து சிறுகதை, சமையல் குறிப்பு என எல்லாம் சேர்ந்து மிகவும் இனிமையாக வருடிச் செல்கிறது தென்றல்.

சுதாஹரன்,
ஜயநகர், பெங்களூரு

© TamilOnline.com