பொங்கல் வெளியீடுகள்


கதகளி
விஷால் நாயகனாக நடிக்கும் படம். காத்ரின் தெரஸா, ரெஜினா ஆகியோர் நாயகிகள். நாசர், கருணா, ஸ்ரீஜித்ரவி, பவன், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாண்டிராஜ் இயக்குகிறார். ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைக்கிறார்.

தாரை தப்பட்டை
சசிகுமார் நாயகனாகவும், வரலட்சுமி நாயகியாகவும் நடிக்கும் படம் இது. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளியாகும் ஆயிரமாவது படமும்கூட பாலா இயக்கியிருக்கிறார். கரகாட்டத்தையும், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையையும் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பாலா.

உள்குத்து
'அட்டக்கத்தி' தினேஷ் நாயகனாகவும், நந்திதா நாயகியாகவும் நடிக்கும் படம் உள்குத்து. இவர்களுடன் சாயா சிங், ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், திலிப் சுப்புராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "உள்குத்து கண்களை மட்டுமல்ல, கருத்தையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. கடல்சார்ந்த மீனவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படம் இது" என்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு. இசை: ஜஸ்டின் பிரபாகரன். நகைச்சுவை கலந்த ஜாலியான காதல் கதையாம் இது.

அரண்மனை 2
2014ல் வெளியாகி வெற்றிபெற்ற அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் இது. சித்தார்த் நாயகனாகவும், த்ரிஷா நாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றொரு நாயகி பூனம் பாஜ்வா. இவர்களுடன் ஆடுகளம் நரேன், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா, மனோபாலா, கோவை சரளா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.
ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைக்க, சுந்தர் சி. இயக்குகிறார்.

இவை தவிர ஜீவா, நயன்தாரா நடித்துள்ள 'திருநாள்' படத்தையும் பொங்கலன்று திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதுபோல சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படமும் பொங்கல் வெளியீடாக வரக்கூடும்.

அரவிந்த்

© TamilOnline.com