ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முதல் பெண் அவைத்தலைவருமான நான்சி பெலோசி 8வது காங்கிரஷனல் மாவட்டமான இல்லினாய்ஸ் வேட்பாளர் ராஜா கிருஷ்ணமூர்த்திக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “ராஜா உண்மையான முற்போக்காளர். சிகாகோ வடமேற்குப் புறநகரின் உழைக்கும் குடும்பங்களின் பிரதிநிதியாக இருக்க அவரே சரியானவர்” என்று கூறுகிறார் நான்சி.
இரண்டாம் தலைமுறை அமெரிக்கத் தமிழரான ராஜா பட்டப்படிப்பும், சட்டமும் பயின்ற பின்னர் பராக் ஒபாமா தேர்தல் பிரசாரக்குழுவின் கொள்கை இயக்குனராகப் பணியாற்றினார். இல்லினாய்ஸ் அரசுத் தலைமை வழக்குரைஞர் லிஸா மேடிசனின் லஞ்ச ஒழிப்பு அணியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். குடிவரவில் பரிவான அணுகுமுறை, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்புடைய செயல்பாடு, மகளிருக்குச் சம ஊதியம், நடுத்தர வகுப்பினருக்குச் சமவாய்ப்பு, துப்பாக்கிச் சட்டத்தில் சரியான அணுகுமுறை என்பவற்றுக்காக அவர் குரல் கொடுத்து வந்துள்ளார். சோஷியல் செக்யூரிடி, மெடிகேர் பலன்கள் முதலியவற்றை ரிபப்ளிகன் காங்கிரஸ் குறைத்துவிடாமல் இருக்க அவர் போராடி வந்துள்ளார்.
அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகர் டேவிட் ஆக்செல்ராட் அவர்களும் இன்னும் பல தலைவர்களும் ராஜாவை ஆதரித்துள்ள நிலையில் நான்சியின் ஆதரவு இன்னும் வலுச்சேர்க்கிறது.
ராஜா கிருஷ்ணமூர்த்தி தற்போது சிவானந்தன் லேப்ஸ், எபிசோலார் ஆகியவற்றின் தலைவர்; InSPIRE என்ற லாபநோக்கற்ற அமைப்பின் இணைநிறுவனர்; இல்லினாய்ஸ் புத்தாக்கக் கழகத்தின் துணைத்தலைவர். மனைவி பிரியா மற்றும் இரண்டு மகன்களுடன் அவர் ஷாம்பர்கில் வசித்து வருகிறார். அவர் வெற்றிபெறத் தென்றல் வாழ்த்துகிறது.
ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தென்றல் ஆதரிக்கிறது. அவரது வெற்றிக்குத் தமது நேரம், பொருள் மற்றும் முயற்சிகளைக் கொடுத்து ஆதரிக்கத் தென்றல் வாசகர்களை வேண்டுகிறது.
தொடர்புகொள்ள: rajaForCongress.com jeff@rajaforcongress.com |