உலகத் தமிழ்க் கல்விக்கழகம் 2016ம் ஆண்டு மே மாதம் 27 முதல் 30 வரை கலிஃபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை சான்ட கிளாரா கன்வென்ஷன் சென்டர், கலிஃபோர்னியாவில் நடத்தவுள்ளது. முன்னர் கலிஃபோர்னியா தமிழ்க்கழகம் (CTA) என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டு இயங்கிவருகிறது. 1998ல் நிறுவப்பட்ட இவ்வமைப்பு இன்று அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பல கிளைகளுடன் இயங்குகிறது. 6500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகெங்கும் இதன்மூலம் தமிழ் பயில்கின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் ஒன்றுகூடித் தங்கள் தமிழ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு 2012ல் "புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு" நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசான்கள் தாம் கற்பித்த பாடத்திட்டங்கள், கையாண்ட உத்திகள், எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றையும், பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் மாநாட்டில் பகிர்ந்துகொண்டனர். வரவிருக்கும் மாநாட்டிலும் இப்பணி தொடரும். புலம்பெயர் தமிழர் தமது இளைய தலைமுறையினரிடையே தமிழ் தழைக்க வழிகாட்டுவதே மாநாட்டின் முக்கிய நோக்கம்.
உலகெங்கிலும் இருந்து தமிழ்க்கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்பர். தமிழ்க்கல்வி தொடர்பான கட்டுரைகள், கலந்துரையாடல்கள், ஆசிரியர் பயிலரங்குகள், மாணவர் கருத்தரங்குகள் போன்றவை இதில் இடம்பெறும். கல்விதொடர்பான நூல்கள், இசைத்தட்டுகள், குறுவட்டுகள், தமிழில் மென்பொருள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களின் கண்காட்சி, தமிழக வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்காட்சி ஆகியவையும் இடம்பெறும்.
உலகத் தமிழ்க் கல்விக்கழக மாணவர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகள், குறும்படம், மின்புத்தகம், சிறுகதைப் போட்டிகள், பேச்சுப்போட்டி, திருக்குறள் கதை சொல்லுதல், வாய்ச்சொல்லில் வீரரடி, மாற்றி யோசி, ஒரு வார்த்தை ஒரு லட்சம், சிறுவர் இலக்கிய வினாடி வினா, ஒரு சொல் அதைக் கண்டுபிடி, சொல்வண்டு, குறிப்புகளை இணைத்துச் சொல் கண்டுபிடி, ஓவியப்போட்டி, மழலையருக்கான ஆடையலங்காரப் போட்டி எனப் பல சுவையான போட்டிகளும் உண்டு.
நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பார்வையாளராக வரவும் கட்டணம் இல்லை.
விவரங்களுக்கு வலைமனை: www.tamilconference.org மின்னஞ்சல்: tamil-conference@catamilacademy.org |