தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது
2015ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஆ. மாதவனுக்கு (82) வழங்கப்படுகிறது. இவர், 1934ல் திருவனந்தபுரத்தில், ஆவுடைநாயகம்-செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளவயதிலேயே வாசிப்பார்வம் வந்துவிட்டது. முதல் சிறுகதை 1955ல் 'சிறுகதை' இதழில் வெளியானது. தொடர்ந்து அவ்வப்போது சிறுகதைகள் எழுதி வந்தார். திருவனந்தபுரத்தின் கடைத்தெருவில் கடை ஒன்றை நடத்திவந்த மாதவன், அந்தத் தெரு மாந்தர்களை வைத்தே தனது நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார். அதனாலேயே 'கடைத் தெருவின் கதைசொல்லி' என்று இவர் அழைக்கப்பட்டார். இவரது 'மணலும் புனலும்', 'கிருஷ்ணப் பருந்து', 'தூவானம்' போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்களாகும். மலையாளத்திலிருந்து சில நூல்களை தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன், தன் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவரும் இலக்கிய அமைப்பின் மூலம் 2010ல் இவருக்கு 'விஷ்ணுபுரம் இலக்கிய விருது' வழங்கப்பட்டது. மாதவன், தற்போது திருவனந்தபுரத்தில் மகள் வீட்டில் வசித்து வருகிறார். டாக்டர் க. செல்லப்பன். டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு மாதவனின் 'இலக்கியச் சுவடுகள்' நூலை சாகித்ய அகாதமி விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆ. மாதவனுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்.

(ஆ.மாதவன் பற்றி மேலும் வாசிக்க; தென்றல், ஜூலை, 2005)

© TamilOnline.com