ஓவியம்
ஒருமுறை ஒரு மகாராஜா தனது தர்பாரில் இருந்த பெரியசுவரில் மகாபாரத யுத்தத்தை ஓவியமாக வரைவதற்கு ஓர் ஓவியரை நியமித்தார். அப்போது அங்கே மற்றோர் ஓவியர் வந்தார். அதன் எதிர்ச்சுவரில் அவ்வளவே பிரம்மாண்டமாக அதே காலத்தில் அதே ஓவியத்தை வரைந்து தருவதாகக் கூறினார். இரண்டு சுவர்களுக்கும் நடுவே ஒரு திரைச்சீலையைத் தொங்கவிடுமாறு கூறினார்.

சுவரோவியம் முற்றுப் பெற்றது. மன்னர் வந்து பார்க்கும் நாள் வந்தது. திரைச்சீலை விலக்கப்பட்டது. வடிவங்களோ வண்ணங்களோ சற்றும் பிசகாமல் அப்படியே எதிர்ச்சுவரில் அதே ஓவியம் தீட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அரசர் பிரமித்துப் போனார். எப்படி எந்த மாறுபாடும் இல்லாமல் வரையமுடிந்தது என்று இரண்டாவது ஓவியரிடம் மன்னர் கேட்டார்.

"நான் எந்த வண்ணமோ தூரிகையோ பயன்படுத்தவில்லை. எனக்கென்று ஒதுக்கப்பட்ட சுவரை நான் மிகப் பளபளக்கும்படித் துலக்கினேன். அதை ஒரு கண்ணாடிபோலப் பளபளப்பாக்கினேன். ஆகவே என் சுவரில் காணப்படுவது பிரதிபிம்பமே" என்று கூறினார் அந்த ஓவியர்.

அதுபோல உங்கள் மனதையும் மிகமிகத் தூய்மையாக்குங்கள். அதில் இறைவனின் மகோன்னதமான பேரழகு பிரதிபலிக்கட்டும்.

ஸ்ரீ சத்திய சாயிபாபா

நன்றி: சனாதன சாரதி

© TamilOnline.com