"என்ன சுரேஷ்? மதியம் லஞ்ச் டைத்திலிருந்தே பார்க்கிறேன். ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்? நான் ஹாஸ்பிடலில் உங்களிடம் எப்படிக் கேட்பது, வீட்டில் போய்க் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்' என்றாள் டாக்டர் சைலஜா எம்.டி., டி.ஜி.ஓ., சுரேஷின் மனைவி. அவள் அப்போதுதான் வேலை முடித்துத் திரும்பியிருந்தாள். இரவு மணி ஏழு.
"ஒன்றுமில்லை சைலஜா. லேசாகக் தலைவலி' என்றான் டாக்டர் சுரேஷ், ஆங்க்காலஜிஸ்ட்.
சைலஜா அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். ஜுரெமல்லாம் இல்லை. ஏதாவது வேலையில் டென்ஷனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
"குளித்துச் சாப்பிட்டால் நல்ல தெம்பு வந்துவிடும். நீங்கள் போய்க் குளித்துவிட்டு வாருங்கள். டின்னர் சாப்பிட்டுவிட்டுத் தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும்.'
சுரேஷ் ஒன்றும் சொல்லாமல் அவளை உற்றுப் பார்த்துவிட்டுச் சிரித்தான்.
டின்னர் சாப்பிட்டுவிட்டுப் படுத்ததுதான் தெரியும். உடம்பு ரொம்ப அசதியாக இருந்தது சுரேஷுக்கு. உள்ளம் களைப்பானால் உடலும் அதிகமாகக் களைத்துவிடும்போல் இருக்கிறது. திரும்பிப் படுத்தான். பக்கத்திலே சைலஜா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நெற்றியில் பரந்த அவள் அழகிய கேசம் காற்றில் பறந்து அவள் கண்கள்வரை வந்து போயின. அதை மெதுவாகத் தள்ளிவிட்டான். சின்னக் குழந்தைபோல் சிணுங்கினாள். உதடுகள் துடித்தன.
காலை எட்டு மணிக்குத் திருவான்மியூரிலுள்ள அவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பி ஓ.எம்.ஆரில் உள்ள அவர்கள் வேலைசெய்யும் ஆஸ்பத்திரிக்குச் சென்றால் பெரும்பாலும் திரும்பிவர மணி ஏழாகிவிடும். சைலஜா மிகவும் கடுமையான உழைப்பாளி. வேலை என்று இறங்கிவிட்டால் நேரம், காலம், பணம் எதுவும் பார்க்கமாட்டாள். எப்போதும் உண்மைக்காக, உரிமைக்காகப் போரிடும் குணம். போராளி.
இந்த மெல்லிய தந்தம் போன்ற உடலில் இவ்வளவு வலிமையா என்று சுரேஷ் பலமுறை வியந்திருக்கிறான். 'சிக்ஸ் பேக்' என்று முஷ்டியை வேடிக்கையாகக் காட்டுவாள். அவளைப் பார்த்து ரொம்பப் பயப்படுவதுபோல் நடிப்பான்.
பெண் என்றால் எல்லார் குணமும் ஒரே மாதிரியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எத்தனை விதமான மாறுபட்ட குணாதிசயங்கள்.. ஏ.சி. நன்றாகக் குளிரத் தொடங்கியது. போர்வையை இழுத்து சைலஜாவின் கழுத்துவரை போர்த்திவிட்டு அந்த அறையின் ஃப்ரெஞ்ச் டோரைத் திறந்து பால்கனியில் வந்து நின்றான்.
கடற்கரைக்கு வெகு அருகில் வீடு. இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு அலை ஓசை கேட்டது. தண்ணீர்தான் எத்தனை வடிவத்தில்! பொங்கும் கடலாய்; அமைதியாய் வெட்கப்பட்டு அஞ்சி நடக்கும் புது மணப்பெண் போல் அழகிய நதியாய்; மணமான பெண் அமைதியாய் அடக்கமாய் கணவன் பின்னால் இருப்பதுபோல் தேங்கி நிற்கும் ஏரியாய்; கைகொட்டிச் சிரிக்கும் குழந்தைபோல் நீர்வீழ்ச்சியாய்!
ஆனால் அந்தக் கடலின் ஓசை இப்போதெல்லாம் அவனுக்குப் பிடிப்பதில்லை. சிறுவனாய் அந்தக் கடலருகே நின்று கொண்டிருந்தபோது, பெற்றதாயால் அவன் ஏமாற்றப்பட்டான்.
அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு, கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள் வாசுகி. அவனைப் பெற்ற அம்மா.
"டேய் சுரேஷ்! அதோ பார் தூரத்தில் உன் அப்பா வருகிறார். அவரிடம் இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய்க் கொடு' என்றாள்.
சுரேஷ் அவன் தந்தையைப்போலவே இருப்பான். கறுப்பான மெல்லிய உருவம். வாசுகி அவன் அப்பாவிடமும் பிரியமாய் இருக்கமாட்டாள்; சுரேஷிடமும் ஒட்டுதலாய் இருக்க மாட்டாள். சுரேஷும் தந்தையிடம்தான் ஒட்டிக்கொள்வான். ஆதலால் அவளிடம் மறுபேச்சுப் பேசாமல் கடிதத்தை வாங்கிக்கொண்டு ஓடினான். அதற்குள் அப்பா சுந்தரம் அவனைநோக்கி வந்தார்.
தந்தையிடம் கடிதத்தைக் கொடுத்த சுரேஷ், அம்மாதான் கொடுக்கச் சொன்னாள் என்று காட்டும்போது அவள் அங்கே இல்லை. சுரேஷும் அவன் தந்தை சுந்தரமும் அவளைத் தேடிக்கொண்டு போனபோது அவள் வேறு யாரோ ஒருவர் காரில் ஏறிப் போவதைப் பார்த்தனர்.
சுந்தரம் ஒன்றும் தோன்றாமல் தன் கையிலிருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.
"பனிரெண்டு வருடங்கள், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைக்காகவும் வாழ்ந்துவிட்டேன். இந்த வாழ்க்கை எனக்கு வெறுத்துவிட்டது. இனி நான் எனக்காக வாழப்போகிறேன். என்னைத் தேடவேண்டாம் - வாசுகி'
கடிதத்தைப் படித்ததும் சுந்தரத்திற்கு அதிர்ச்சியில் ஒன்றுமே தோன்றவில்லை. வாசுகி பேரழகிதான்; ஆனால் கடவுள் கொடுத்த அந்த அழகைத் தவிர திறமை என்று எதுவுமில்லை. ஒரே ஒரு ஆர்ட்ஸ் டிகிரி. அதிலும் குறைந்தபட்ச மார்க் வாங்கித்தான் பாஸ் செய்திருக்கிறாள். மேலே படிக்கவும் ஆசையில்லை. நல்லவழியில் தன்னை வளர்த்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை. எப்போது பார்த்தாலும் கண்ணாடியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பாள். விலையுயர்ந்த கார்கள் போனால் மிக ஆவலுடன் பார்ப்பாள். தன்னிடம் உள்ள மாருதி 800ஐ வைத்துத் திருப்தியடையவில்லை. திருவல்லிக்கேணியில், கடற்கரைக்கு மிக அருகில், கண்ணகி சிலைக்கு மிக அருகில் வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவின் பக்கத்துச் சந்தில் அவர்கள் புறாக்கூண்டு அபார்ட்மெண்ட்.
எதையோ தேடி வாழ்க்கையை இழக்கிறாளே என்று மிகக் கோபமாகவும், பிறகு வருத்தமாகவும் இருந்தது. வாசுகி என்ற பெயருக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று ஆயிற்று என பெருமூச்சு விட்டபடி தன்மேல் சாய்ந்து நின்று ஏக்கத்தோடு பிரிந்து போகும் தாயைப் பார்த்தவாறு இருந்த தன் மகனைத் தூக்கிக்கொண்டார்.
பிறகு எவ்வளவு அவமானங்கள்! எல்லாரும் வேண்டுமென்றே அக்கறையோடு விசாரிப்பதுபோல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்கள். தவறு செய்தவள் அவள். தண்டிக்கப்பட்டவர்கள் இவர்கள்.
அந்தத் திருவல்லிக்கேணி அபார்ட்மெண்டை மாற்றினார்கள். சுரேஷின் பள்ளியை மாற்றினார்கள். சமையலுக்குக்கூட வீட்டோடு சாமண்ணா என்பவரை ஏற்பாடு செய்துவிட்டார். சாமண்ணா வீடு பெருக்கி, துடைத்து, சமையலும் முடித்துவிடுவார். பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷரும், துணி துவைக்க வாஷிங் மெஷினும் வாங்கிவிட்டார். மேலும் ஒரு காரியம் செய்தார். வாசுகியின் போட்டோவைப் பெரிதுபண்ணி நடுஹாலில் சுவரில் ஆணி அடித்து மாட்டிவைத்தார். அதற்கு அழகாக ஒரு ரோஜா மாலையும் ஜரிகை மாலையும் போட்டுவிட்டார். படத்தில் வாசுகியின் நெற்றியில் பெரியதாக விபூதியும், சந்தனமும், குங்குமமும் வைத்துவிட்டார்.
புதிய வீடு, புதிய சூழ்நிலை. சுரேஷின் தாயாரை யாராவது விசாரிக்கத் தொடங்கினால்கூட படத்தைப் பார்த்துவிட்டு அமைதியாகி விடுவார்கள்.
சுந்தரம் மகன் சுரேஷைத் தவிர வேறு எதைப்பற்றியும் நினைக்கவில்லை. அவன் கல்வி, அவன் சந்தோஷம், அவன் ஆரோக்கியம் இவை மட்டுமே அவர் லட்சியமாக இருந்தது.
சாமண்ணா மிகவும் நல்லவர். அந்த வீட்டுப் பெரியமனிதர் என்று சொல்வதுபோல் நடந்து கொள்வார்.
அதனால் சுரேஷ் அவரோடு நன்றாக ஒட்டிக்கொண்டான். அவன் தாய் அவன்மேல் வீசிவிட்டுச் சென்ற அசிங்கங்களைக் கல்வியால் துடைக்கத் தொடங்கினான். மருத்துவம் படித்து அதில் மாஸ்டர் டிகிரியும் பெற்றான். புற்றுநோயில் ஆராய்ச்சி செய்தான்.
சுரேஷ் எம்.பி.பி.எஸ். படிக்கும்போது சைலஜா பழக்கமானாள். வீட்டிற்கு அழைத்து வந்தான். நட்பாகத்தான் பழகினார்கள். அவள் அழகையும், நல்ல குணத்தையும், எளிமையையும் நேருக்குநேர் பார்த்துப் பேசும் நேர்மையையும் பார்த்த சுந்தரம் அவள் பெற்றோர்களிடம் பேசி அவளைத் தன் மருமகள் ஆக்கிக்கொண்டார்.
சுரேஷ் பிரபல ஆஸ்பத்திரியில் டாக்டராகப் பணிபுரிந்து வருகிறான். சிறந்த புற்றுநோய் நிபுணர்களில் ஒருவன்.
அன்று மதியம் கன்சல்டிங்கிற்காக வந்த ஒரு பேஷண்டைப் பார்த்துத் திகைத்தான் சுரேஷ். அவள் ஓர் அனாதை விடுதியிலிருந்து வந்திருந்தாள். கூடவே சிஸ்டர் ஒருவர். அவனுக்கு அந்தப் பெண்மணியின் கண்கள் ஏதோ பழக்கமானது போல் இருந்தது. அது அம்மா வாசுகியோ என்று ஒரு சந்தேகம்.
அவளுடைய மெடிகல் ரெகார்ட்ஸ், எக்ஸ்ரே, ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாவற்றையும் ஆராய்ந்தான். மூச்சுவிடுவதற்கே மிகவும் சிரமப்பட்டாள். ரெகார்டில் அவள் பெயர் வாசுகி என்று எழுதப்பட்டிருந்தது.
சுரேஷ் தங்கள் ஆஸ்பத்திரியிலேயே சேர்த்துத்தான் மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று கூடவந்தவரிடம் கூற, அவர் உடனே சேர்த்துவிட ஏற்பாடுகளும் செய்தார்.
அந்த நோயாளி தன் தாய்தானா என்ற சந்தேகம் அவனுக்குள் இருந்தது. தங்கத்திலே செதுக்கியது போன்றிருந்த அவள் மேனி கருத்து கடலலையென இருந்த கூந்தல் வெளுத்து மண்டையெல்லாம் தெரிந்தது. பார்ப்பதற்கே மிகப் பரிதாபமாக இருந்தது. அவளைப் பரிசோதிக்கும்போது நுரையீரல் புற்றாக இருக்குமோ என்று தோன்றியது.
நேற்று வந்துசேர்ந்த அந்தப் பெண்மட்டும் அவன் தாயாக இருந்தால் கட்டாயம் தன்னால் அவளுக்கு வைத்தியம் பார்க்கமுடியாது என்று நினைத்தான். அப்பாவிடம் அவளைக் காட்டினால் நிச்சயம் அம்மாதானா இல்லையா என்று தெரிந்துவிடும் என்று தன் யோசனைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டுப் போய்ப் படுத்தான்.
அடுத்தநாள் காலை டைனிங் ஹாலில் சாமண்ணாவிற்கு சைலஜா உதவிக் கொண்டிருந்தாள். காலை ஏழுமணிக்கெல்லாம் டைனிங் ஹாலே மணத்தது.
ஒரு பக்கம் ஓட்ஸ் கஞ்சி அப்பாவுக்காக. பொங்கலும் சட்னியும் சாம்பாரும். அது எல்லாருக்காகவும். அன்று என்னவோ கூடவே பூரியும் உருளைக் கிழங்கும்.
"சாமண்ணா, நான்தான் காலையிலே பூரி வேண்டாம் யாருக்கும் என்று சொல்வேனே!' என்றான் சுரேஷ்.
"சுரேஷ்... இது அப்பாவாகச் செய்யவில்லை; நான்தான் செய்யச் சொன்னேன்' என்றாள் சைலஜா. அவள் சாமண்ணாவை அப்பா என்றுதான் கூப்பிடுவாள்.
"எப்போதுமே ஒரே டிரையாக வேண்டாம் சுரேஷ். வாரத்தில் ஒரே ஒருநாள்' என்றாள், கெஞ்சலாக. சுரேஷின் அப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு, "குழந்தை, என்னவோ ஆசைப்படுகிறாள் விடு' என்றார்.
"அப்பா... நீங்கள் அவளுக்குக் குழந்தை, குழந்தை என்று மிகவும் செல்லம் கொடுக்கிறீர்கள்' என்றான், சிரித்துக்கொண்டே. சைலஜா மாமனாரின் பின்னாலேபோய் நின்றுகொண்டு இரண்டு கைகளையும், இரண்டு காதின்மேல் வைத்து ஆட்டி அழகுகாட்டினாள்.
"அப்பா, உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும்' என்றான் சுரேஷ். 'என்ன?' என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் சுந்தரம்.
"எங்க ஆஸ்பத்திரியில் ரூம் நெம்பர் 32ல் ஒரு பெண்மணியை ஏதோ ஒரு ஹோமிலிருந்து கொண்டுவந்து அட்மிட் செய்திருக்கிறார்கள். அவர்களை நீங்கள் பார்க்கவேண்டும்.'
"நான் எதற்காகப் பார்க்கவேண்டும்?'
"அந்த அம்மாவைப் பார்த்தால் எனக்கு எங்கோ பார்த்ததுபோல் தோன்றுகிறது. என் சந்தேகத்தை நீக்கவேண்டும்.'
"உனக்கு என்ன சந்தேகம்?'
"அந்த அம்மா, நம்மை ஏமாற்றிவிட்டு ஓடின என் அம்மாவோன்னு....'
"உன் அம்மாவேதான். நானும் சைலஜாவும்தான் அவளைக் கொண்டுவந்து அங்கு சேர்த்தோம்.'
"சைலஜாவா?' என்றான் சுரேஷ் திகைப்போடு.
"ஆம். சைலஜாதான். ஆனால் சைலஜாவிற்கு அவள் யாரென்று பிறகுதான் தெரியும்.'
"சைலஜாகூட என்னிடம் எதுவும் சொல்லவில்லையே!'
"நான்தான் உன்னிடம் எதுவும் சொல்ல வேண்டாமென்றும், நானே சொல்லிக் கொள்கிறேன் என்றும் வற்புறுத்திக் கூறினேன்' என்றார் சுந்தரம்.
அதற்குமேல் சுரேஷ் ஒன்றுமே பேசவில்லை. தன் 'பென்ஸ்' காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சைலஜாவும் அதே ஆஸ்பத்திரியில்தான் வேலை செய்கிறாள்.
"சுரேஷ் என்மேல் கோபமா?'
"இல்லை சைலஜா! என் மனைவி மிக நல்லவள் என்று எனக்குத் தெரியும்; ஆனால் அந்த பாவமூட்டையைக் கொண்டுவந்து இங்கே ஏன் சேர்த்தீர்கள்? இந்த ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க மிக அதிகமாகப் பணம் தேவையாக இருக்குமே!' என்றான் சுரேஷ்.
"அப்பா அவருடைய ரிடையர்மெண்ட் பெனிஃபிட்டை ஃபிக்ஸட் டெபாஸிட்டில் போட்டிருந்தார் இல்லையா? அதன்மேல் லோன் வாங்கிக் கட்டினார். நான்கூட நம்முடைய சேமிப்பிலிருந்து கட்டலாமே! ஏன் ஃபிக்ஸட் டெபாஸிட்டின்மேல் போய் லோன் வாங்கவேண்டும் என்று கேட்டேன்' என்றாள் சைலஜா.
"நீ என்னிடம் சொல்லியிருக்கலாம் இல்லையா சைலஜா?'
"சுரேஷ், நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயம் உங்கப்பாவின் பர்ஸனல் விஷயம். நான் எப்படி அவர் அனுமதியில்லாமல் சொல்லமுடியும்?'
அன்று மாலை ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிய சுரேஷ், சைலஜாவிடம் "நாம் எல்லாரும் ஒரு மாதம் லீவில் குலு மனாலி எல்லாம் போய்ச் சுற்றிவிட்டு வரலாம்' என்றான்.
"என்ன?' என்றாள் வியப்புடன் சைலஜா.
"நீதான் ரொம்ப நாளாகக் கேட்டுக்கொண்டிருந்தாய் அல்லவா, அதனால்தான்.' சுந்தரம் பேசாமல் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்.
"நான் கேட்டேன் உண்மைதான். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல' சைலஜா.
"ஏன் நேரத்திற்கென்ன?' சுரேஷ்.
"உங்கள் அம்மா, உங்கள் கவனிப்பில் ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறார்கள் இல்லையா; அவர்களை விட்டுவிட்டு நாம் எப்படிப் போவது? அவர்களுக்கு சி.டி. ஸ்கேன் நேற்று எடுத்தீர்களா? அடுத்தகட்ட ட்ரீட்மெண்ட் தொடங்கவேண்டாமா?'
"ஸ்கேன் ரிஸல்ட் பார்த்தேன். மற்ற டெஸ்ட்டுகளும் செய்தேன். லங்க் கேன்ஸர் ஸ்டேஜ் த்ரீயில் இருக்கிறது. கீமோ தெரபி, ரேடியேஷன் தெரபி எல்லாம் தரவேண்டும். என்ன செய்தாலும் வாழ்நாளைச் சில நாட்கள் அல்லது மாதங்கள் அதிகரிக்கலாம். வேறொன்றும் செய்யமுடியாது. வினை விதைத்தவன் வினைதானே அறுப்பான்?'
"நீங்கள் ஒரு டாக்டர். சராசரி மனிதன் மாதிரிப் பேசாதீர்கள். வியாதி முற்றிய நிலையில் எப்படி வேறு டாக்டரை நம்பி ஒப்படைப்பது?'
"அப்பா, நீங்கள் என்ன புத்தரா அல்லது மகாத்மாவா? உங்களையும் என்னையும் நடுரோட்டில் விட்டுச்சென்ற பெண்மணி அந்த அம்மா. எவ்வளவு அசிங்கம்; எவ்வளவு சொல்லடி. வீட்டைவிட்டு யார் காரிலோ ஓடியது அந்த அம்மா. ஆனால் அடிபட்டது, அவமானப்பட்டது நாம். என்னால் அந்த அம்மாவிற்கு மருத்துவம் பார்க்கமுடியாது' என்றான் சுரேஷ்.
"நீங்கள் அப்படிச் சொல்வது தவறு சுரேஷ். முதன்முதலில் மருத்துவக் கல்லூரியில் நுழையும்போதே நாம் செய்யும் பிரமாணம் மறந்துவிட்டதா? ஏழை, பணக்காரர், நண்பர், விரோதி என்ற பேதமில்லாமல் நம் கல்வி பயன்படவேண்டும் அல்லவா?' என்றாள் சைலஜா.
அப்போதுதான் சுந்தரம் வாய்திறந்து பேசலானார்.
"அவள் என் மனைவியாக வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். என்றைக்கிருந்தாலும் என் மகனின் தாய் அவள்தானே! அந்தப் புனிதமான உறவை யாராலும் மாற்றமுடியாது. மறுக்கமுடியாது. என் மகனுடைய தாய் அனாதையாகச் சாகக்கூடாது. அந்தப் பாவம் எனக்கு வேண்டாம். உனக்கும் வேண்டாம். ஆகவே நீ அவளைக் காப்பாற்றவேண்டும்; காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு நாளைக்கு நீ வேலைக்குப் போ. அது உன் கடமை'
"ஆமாம் சுரேஷ். குலு மனாலி. எங்கும் போய்விடாது. நீங்கள் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அந்த அம்மாதான் உங்கள் தாய். நீங்கள் உங்கள் கடமையில் தவறாது இருந்தாலே எங்களுக்குப் போதும்; அப்போது குலு மனாலி நம் வீட்டிற்கே வந்துவிடும்' என்றாள் சைலஜா.
"நம்ப பாப்பா கெட்டிக்காரப் பாப்பா. அது சொல்படி கேட்டால் பிரச்சனையே இல்லை' என்றார் சாமண்ணா.
பானுமதி பார்த்தசாரதி, கோப்பெல், டெக்சஸ் |