மேகம் கருக்கலையே…
அது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆஃபீஸ். முன்னே சிறு மக்கள்கூட்டம், சலசலப்புடன் காணப்படுகிறது. எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும். ஊர்த்தலைவர் வர ஒரே அமைதி.

"எல்லாருக்கும் வணக்கம். தோட்டம் போயிட்டு வந்ததால கொஞ்சம் நேரமாயிட்டுது. உங்கள எல்லா என்ன விஷயத்துக்கு வரச் சொன்னன்னா, நம்ம ஊர் வாய்க்கால்ல தண்ணி வரப்போகுதுனு தகவல் வந்திருக்கு."

உடனே மயில்சாமி சந்தோஷத்துடன், "தண்ணி வருதுங்களா, எப்பங்கய்யா?" என்று கேட்டார்.

"அனேகமா அடுத்த மாசம் மொத வாரத்துலயா இருக்கும். சரியான தேதிபத்தின தகவல் பொறவு வரும். ஆனா" என்று நிறுத்தினார் தலைவர்.

"என்ன ஆச்சுங்க?" இது சிவநாதன்.

"கேட்டா உங்க எல்லாத்துக்கும் கொஞ்ச சங்கடமாக்கூட இருக்கலாம்" பூடகமாகப் பேசினார்.

ஒருவரையொருவர் இவர் என்னதான் சொல்லவருகிறார் என்ற கேள்வியுடன் பார்த்துக்கொண்டனர்.

"தண்ணி வர்றது சந்தோசந்தா, ஏனா நாம் எல்லாரும் விவாசாயத்தத்தான் நம்பி இருக்கோம். ஆனா வர்ற தண்ணி எப்பவும்போல இல்லாம இந்த தடவ பதினஞ்சு நாளுக்கு மட்டும்தான் வருது."

என்னது? பதினஞ்சுநாள் மட்டும்தானா என்று ஒட்டுமொத்தப் பேரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.

"போன வருஷத்தவிட இந்த வருஷம் மழ சுத்தமா இல்லாமப் போச்சு. டேமுலயுந் தண்ணி ரொம்ப கொறஞ்சு போச்சாம். அதுமட்டுமல்லாம எல்லா ஊர்களுக்கும் தண்ணி தேவப்படறதால இவ்வளவுதான் தரமுடியும்னு சொல்லிட்டாங்க. பதினஞ்சுநாள் தண்ணிய ரெண்டு கெடுவா அதாவது ஒவ்வொரு வாரமா பிரிச்சு பதினஞ்சுநாள் இடைவெளில வருமாம். இதே மாதிரிதான் மத்த ஊர்களுக்கும்" என்றார்.

அவர் சொல்வது எல்லோருக்குமே சரியென்று பட்டது. முன்பெல்லாம் மழை சரியான பருவத்தில் பெய்யும். விவசாயமும் நல்லபடியாகச் செய்ய முடிந்தது. இப்பொழுதோ மழை பெய்வது குறைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் வறண்டும் காய்ந்தும் தெரிகிறது. இந்தச் சமயத்தில் தண்ணீர் வருவது மிகப்பெரிய விஷயமாக இருந்தது அந்த ஊர் மக்களுக்கு.

ஊர்த்தலைவர் தொடர்ந்தார், "ஒவ்வொருத்தருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியிருக்காங்க, அந்த நேரத்த கரக்கெட்டா பயன்படுத்திக்கோங்க. அப்புறமா இதனால தண்ணித் தகராறு வந்துரப்படாது. நானும் போய் வேலையப் பாக்கணும் . நீங்களும் போய் தண்ணி வர்றதுக்குள்ள எல்லா ஏற்பாட்டையும் கவனிங்க" என்றவாறு கிளம்பினார்.

வருகிற தண்ணீரை வைத்து இம்முறை ஏதோ முடிந்தளவு விவசாயத்தைச் செய்து பார்த்துவிடலாம் என்று எல்லோரும் முடிவுசெய்தனர்.

கூட்டம் கலைய ஆரம்பிக்க, "இந்த ஊரச்சுத்திக் காத்தாடிக வந்ததுதான் மழய இல்லாமப் பண்ணிருச்சு" என்றார் காத்தமுத்து.

"அது யாரப்பா அப்படிச் சொன்னது, காத்தாடினால மழ பெய்யாம போச்சுனு?" கேட்டார் சிவநாதன்.

"ஆமாண்ணே காத்துல இருக்குற ஈரப்பசய எடுத்துக்குதாம் காத்தாடிக. அதனால மழ இல்லாமப் போகுதாம். பேப்பர்ல போட்டுருக்குனு பேசுனாங்க, அதவெச்சு சொல்றேன்."

"என்னவோ யாருக்கு தெரியும்? அந்த சாமியத்தவிர. முன்ன எல்லாத்தையுமே பயிர் செஞ்சுட்டு வந்தோம். பின்ன காச நிரந்தரமா பாக்கலாம்னு தென்னையப் போட்டோம். இப்போ ஊரச்சுத்தி தோப்பாகிப் போச்சு. இங்கமட்டுமல்லாம எல்லாப் பக்கமும் இதே கததான். அதே நேரத்துல மத்த விவசாயமும் கொறஞ்சுருச்சு. எதுவுமே அளவுக்கு அதிகமானா அதுக்கு ஒரு அழிவு வருமல்ல. அதுமாதிரி தென்னைகளுக்கு மழ ரூபத்துல அழிவு வருதுபோல என்ன செய்யறது!" புலம்பினார் சிவநாதன்.

அதற்கு மயில்சாமி, "நீங்க சொல்றதும் சரிதான். ஒரு பழமொழி சொல்வாங்கதான 'தென்னைய வெச்சா எளநீரு, புள்ளைய பெத்தா கண்ணீருனு'. அதுமாரி இப்பத் 'தென்னைய வெச்சாலும் கண்ணீருனு' ஆகிப் போச்சு நம்ம பொழப்பு. என்ன நடக்கும்னு இருக்கோ, அதுதான் நடக்கும். நம்ம கையில எதுவும் இல்ல, வாங்க போயி வேலயப் பாப்போம்" என்று சொல்ல சிறிதுநேரத்தில் அந்த இடம் காலியானது.

*****


அந்த கிராமத்தில் மொத்தமே அறுபது குடும்பங்கள்தான். அனைவருக்கும் தொழில் விவசாயம்தான். ஊரைச்சுற்றிலும் பச்சைப்பசேலென்ற வயல்களும், கரும்பு மற்றும் வாழைத் தோட்டங்களும் கம்பங்காடுகளும் என்று பார்க்கக் கண்ணைப்பறிப்பதாக அக்கிராமம் ஒருகாலத்தில் இருந்தது. தண்ணீர் குறைந்து வரவும் விவசாயமும் குறைந்துவிட்டது. சொட்டுநீர்ப் பாசனத்தின் அடிப்படையில்தான் இப்பொழுது விவசாயம் நடக்கிறது. 'போர்' போட்டு பார்த்தார்கள், நிலத்தடி நீர் இல்லாததால் அதிலும் பிரச்சனை. தென்னை வைத்தவர்கள் அதைப் பாதுகாக்க போராடுகின்றனர். வாய்க்கால் தண்ணீரை கிணற்றில் சேமித்து விவசாயம் செய்யவேண்டும் என்பது அனைவரின் எண்ணம்.

அவ்வூரில் உள்ள முக்கியமான குடும்பங்களில் சிவநாதன் குடும்பமும் ஒன்று. மனைவி பார்வதி, மகள்கள் சுந்தரி மற்றும் நந்தினி. சுந்தரியைத் தன் சொந்தத் தங்கைமகனுக்கே திருமணம் செய்து தந்துவிட்டார். நந்தினிக்கும் மாப்பிள்ளை பார்த்து, வரும் ஆவணி மாதத்தில் கல்யாணம் என்று முடிவு செய்தாகிவிட்டது. தன்னிடம் இருந்த கொஞ்ச நிலத்தையும் சில வருடங்களுக்கு முன் தோப்பாக்கினார். அதனால் தண்ணீர் பிரச்சனை அவருக்குதான் பெரும்பிரச்சனை ஆகிவிட்டது. போர் போட்டு கொஞ்சவருடம் சமாளித்தார். பின்னர் அதிலும் தண்ணீர் குறைந்தது. சென்ற ஆண்டு தண்ணீர்ப் பற்றாக்குறையால் தென்னைகளில் கால்வாசிக்கும் மேல் காய்ந்துபோனது. நடுவில் ஒரு மழை பெய்து இருந்த தென்னைகளைக் காப்பாற்றியது. காய்களும் ஓரளவு பிடித்துள்ளது. அதன்பின் சுத்தமாகவே மழை இல்லை.

மரத்தில் உள்ள காய்களைத் தக்கவைக்க கட்டாயம் தண்ணீர் வேண்டும். மொத்த வருமானமுமே தோப்பிலிருந்துதான். இதை நம்பி மகளின் திருமணம் வேறு இருக்கிறது. கடன்வாங்கிக் கல்யாணம் செய்தாலும் திருப்பி அடைப்பது எப்படி? நிலத்தை விற்கலாம் என்றாலும் மழை இல்லாததால் யாரும் வாங்கத் தயாரில்லை. ரியல் எஸ்டேட் முதலைகளின் பிடியில் அக்கிராமம் இன்னும் சிக்கவில்லை. என்னதான் செய்வது என்ற கவலையோடும் நிம்மதி இல்லாமலும் சிறிது நாட்களாகத் தவித்து வந்தார். இந்தத் தண்ணீர் வருவது அவருக்கு ஒரு தெம்பை கொடுத்தது. ஆனாலும் இது எம்மாத்திரம்? பல நாட்களாகப் பட்டினி இருந்தவனுக்கு ஒரு கவளம் சோறுபோல. அதேசமயம் இதாவது வருகிறதே எப்படியோ சமாளிப்போம் என்ற தைரியமும் வந்தது.

சொன்னதுபோலவே தண்ணீர் வர எல்லோரும் அவரவர் பூமியில் வேலைகளை ஆரம்பித்து இருந்தனர்.

சிவநாதனின் நிலத்திற்குப் பக்கத்து நிலம் மயில்சாமினுடையது. அவர் தன்னிடம் இருந்த நிலத்தில் பாதியை மற்றப் பயிர்கள் செய்வதற்கு விட்டுவிட்டு, மீதியில் தென்னம்பிள்ளைகளைப் போனவருடம் நட்டிருந்தார். ஒருநாள் மயில்சாமியும் சிவநாதனும் பேசிக்கொண்டே தங்கள் நிலங்களில் நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். கல்லூரி விடுமுறை. அதனால் மயில்சாமியின் மகன் குமாரும் தந்தைக்கு உதவிசெய்ய உடன் வந்திருந்தான். அவனுக்கும் விவசாயம்தான் பிடித்த தொழில். அதனால் விவசாயக் கல்லூரியில் சேர்ந்து அது சம்பந்தமாக படித்துக்கொண்டிருக்கிறான்.

மகேஸ்வரன்,"என்ன மாமா எப்படி இருக்கீங்க?"

சிவநாதன், "நான் நல்லா இருக்கேன் தம்பி, நீங்க எப்படி இருக்கீங்க? படிப்பு எல்லாம் எப்படி போகுது?"

"எல்லாமே நல்லபடியா போயிட்டிருக்குங்க மாமா".

"என்ன மயில்சாமி, தம்பி இந்த வருஷத்தோட படிப்ப முடிச்சுருமல்ல, அப்புறம் எதாவது வேலைக்கா இல்ல நம்மள மாதிரிதானா?"

"தெரியல சிவநாதா, அவனோட இஷ்டம் என்னவோ அதச் செய்யட்டும்".

"என்ன கண்ணு அப்பா இப்படி சொல்றாரு. நீங்க என்ன செய்யப் போறீங்க?"

"அது மாமா, வேலைக்கும் போய்ட்டு, கூடவே விவசாயமும் பாத்துக்கிறதா தான் இருக்கேன்."

"நல்லது தம்பி. அப்பாக்கும் ஒத்தாசையா இருக்கும், அதேசமயம் ஒரு வேலையும் இருக்கறது ரொம்ப அவசியம். ஏன்னா நாம மழைய நம்பி இருக்கோம், இப்படியே போச்சுனா விவசாயம் என்ன ஆகுமோ, அதனாலதான்."

"நீ சொல்றது வாஸ்தவம் சிவநாதா. நம்மகாலம் இப்படியே போயிருச்சு இவங்ககாலம் இனி, எப்படி போகும்னு யாருக்குத் தெரியும்."

"தண்ணி தோட்டத்துக்கு பாயிதுங்களா? இல்ல, கெணத்துக்கா?"

"தோட்டத்துக்கு கொஞ்சநேர பாச்சுட்டு அப்புறந்தான் கெணத்துக்கு விடணுங் மாமா."

"சரி மயில்சாமி நீங்களும் வேலையப் பாருங்க. நானும், வேலப்பன் தண்ணிய கட்டிட்டுருக்கான் போயி பாக்குறேன். வர்றந் தம்பி".

"சரிங்க மாமா".

கிளம்பினார் சிவநாதன்.

நாட்கள் சென்றன. இரண்டாவது கெடு தண்ணியும் வந்தது.
அன்று மயில்சாமியின் கெடு. அதனால் சிவநாதனும் காலையில்
மெதுவாகத்தான் தோப்பிற்கு வந்தார். தன் கிணற்றிற்குத் தண்ணீர் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரே ஆச்சரியம்.
அப்பொழுது மகேஸ்வரனும் வர புரிந்தது.

"என்ன தம்பி? உங்க மொற தண்ணிய எனக்கு விட்டிருக்கீங்க. உங்க தோட்டத்துக்கே தண்ணி பத்தாது, அப்புறம் எனக்கு எதுக்கு?"

மகேஸ்வரன், "நீங்க சொல்றது சரிதானுங்க மாமா. எங்க தோப்ப பாருங்க, மரங்க எல்லா சிறுசா இருக்கு. தண்ணி பத்தாம காஞ்சுபோனா பரவாயில்ல. ஆனா உங்க மரத்துல காய்க காய்ச்சு தண்ணி பத்தாம இருக்கு. இன்னொண்ணு, வெயில்காலம் வேற, தண்ணி நெறைய தேவைப்படும். இந்த சின்ன மரங்க போனா என்னங்க மாமா, அடுத்த வருஷமே மழ நல்லா பெஞ்சா புதுசாகூட வெச்சுக்கலாம். உங்க மரங்க எல்லாம், வயித்துல கொழந்தையோட இருக்குற தாயிக்கு சமானம். அதுக காய்ஞ்சு போய்ட்டா நெனைக்கவே கஷ்டமா இருக்குங்க மாமா. அப்புறம் உங்க நெலமையும் எனக்கு நல்லா புரியுது. அதனாலதான் எதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி" என்றான்.

கேட்டதும் சிவநாதன் கண்களில் நீர் பெருக, "தம்பி!" என்று மகேஸ்வரனை ஆரத்தழுவினார். "நெஜமாவே உங்களுக்கு பெரிய மனசு. வயசுல சின்னவரா இருந்தாலும் மனசால ஒசந்துட்டீங்க. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் தம்பி, நல்லா இருக்கணும்" என்றார் உணர்ச்சிவசத்துடன்.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க மாமா. மனுஷங்களுக்குள்ள இந்த உதவிகூட செஞ்சுக்காட்டி என்னத்த சொல்றது. உங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு இருக்கணும். கவலைப்படாதீங்க நம்ம நந்தினி கல்யாணத்த எல்லாருமா சேர்ந்து ஜாம்ஜாம்னு நடத்திடலாம். நேரமாகுது, நான் வர்றேங்க மாமா" என்றவாறு இடத்தைவிட்டு நகர்ந்தான் மகேஸ்வரன்.

இம்மாதிரி ஆட்கள் இருக்கும்வரை விவசாயத்திற்கு அழிவில்லை. இவர்களைப்போன்ற மனிதர்களுக்காகவே மேகமும் ஒருநாள் கருக்கும் என்ற நம்பிக்கையோடு மகேஸ்வரன் போன திசையை பார்த்தவாறே நின்றிருந்தார் சிவநாதன்.

ரேணுகா பத்மநாபன்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com