நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா? சிந்திக்கச் சிந்திக்க சுயவெறுப்பே மிகுதியானது. நிலவு தேய்ந்து கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் முழுதாக மறைந்து பின் வளரும். தேய்வதும் வளர்வதும் பூமியின் நிழல்படுவதால். மனதையும் மனிதத்தையும் மூடும் நிழல்களால் வாழ்வும் உணர்வுகளும் நம்பிக்கைகளும்கூடத் தேய்ந்தும் வளர்ந்தும் கொண்டிருந்தன. தோட்டத்தில் இருந்த கல்யாண முருங்கை மரத்திலிருந்து சிவப்புப்பூக்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன அவள் கண்களைப் போல.
பால்கனியில் அமர்ந்திருந்த சுபத்ராவின்மேல் பாலொளியைத் தடவிக் கொண்டிருந்தது நிலா. கன்னங்களில் வழிந்த நீர்க்கோடுகள் பளபளத்துக் கொண்டிருந்தன. அர்ஜுனும் அங்கே வருந்திக் கொண்டிருப்பான். ஆனால் சரிசெய்ய முடியாத அளவு வளைந்து உடைந்து போயிருந்தது அவர்களின் குடும்பக்கப்பல். அதன் மாலுமிகள் இருவருமேதான் அதைக் கவிழ்த்து மூழ்கடித்தவர்கள்.
முதலில் கூட்டுக் குடும்பத்தால் ஆரம்பித்த பிரச்சனை பின்னர் பிள்ளையின்மையில் வந்து விவாகரத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது. திருமணமான புதிதில் கணவரோடு கைகோத்து உலகம்முழுதும் பறக்கவேண்டும் என்பதே அவளின் எண்ணமாய் இருந்தது. கொழுந்தன்கள், நாத்திகள் அடங்கிய குடும்பத்தில் எதற்கும் நேரமில்லாமல் சமையல்ராணியாக மாறியது முதல் ஏமாற்றம்.
கணவன் தன்னைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் குடும்பத்தில் வேலைசெய்யும் ஆளாகத்தான் தன்னை மருமகளாகச் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்என்ற அடுத்த தவறான எண்ணம் அவளை ஆட்டிப்படைத்தது. அதற்கு ஏற்றாற்போல கொழுந்தன்கள், நாத்திகள் படித்து வேலை கிடைத்துக் கைநிறைய சம்பாதிக்கத் தான்மட்டும் ஏரில் மாட்டிய எருதாய் வீட்டில் உழைத்தபடி இருந்தது வலித்தது.
இதில் பத்து வருடங்கள் கழிந்துவிட ஒவ்வொருவரும் திருமணமாகி வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். அவரவர் குடும்பம், குழந்தைகள் என்று பெருகிவிட வயதான மாமனாரும் மாமியாரும் இவர்களோடே தங்கிவிட்டார்கள். முதுமை காரணத்தால் அவர்களுக்கும் சிசுரூஷை செய்து அலுத்துக் களைத்த அவள் மனதில் மெல்ல மெல்லக் கோபமும் ஆயாசமும் எட்டிப் பார்த்தன.
இவர்கள் கூடவே இருப்பதால்தான் கணவன் தன்னிடம் தனியாகக் கவனம் செலுத்துவதில்லை என்ற ஆற்றாமையும் சேர்ந்துகொண்டது. குத்தீட்டியாகக் குறுவாளாக வார்த்தைகளால் சாடுவது அவளின் வழக்கமாகிவிட்டது. எது சொன்னாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மௌனமாக நகர்ந்துவிடும் கணவனை என்ன செய்வதென்றும் அவளுக்குப் புரிந்ததில்லை.
அப்படி அரற்றிப் புரண்டு அழுத பொழுதொன்றில் அரண்ட மாமனாரும் மாமியாரும் பக்கத்தில் இருக்கும் சிறுவீடொன்றுக்குத் தனியாகக் குடித்தனம் போனார்கள். தொல்லை விட்டது என நிம்மதியாக இருந்தவளுக்குக் குழந்தையின்மை பெரிதாக உறுத்தியது.
அவளுக்குப் பின்னே திருமணமான அனைவருக்கும் பள்ளிசெல்லும் குழந்தைகள் இருந்தார்கள். குழந்தை ஆசை படுத்திவைக்க மருத்துவரைச் சந்திக்கக் கணவனை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள். பரிசோதனைகளின் முடிவில் கணவனுக்கு விந்தணுக்கள் கம்மி என்பதால் குழந்தைப்பேறு அரிதுதான் என்பது தெரிந்தது.
காத்திருந்து காத்திருந்து தனக்குக் குழந்தை பாக்கியமே இல்லை என்பது அவளுக்குப் பேரிடியாக இருந்தது. இருசிமட்டை, மலடி என்ற சொற்களை அவ்வப்போது கேட்க நேர்ந்தது தன் கணவனின் கையாலாகாததனத்தால் என உறுதியாக நம்பத் துவங்கினாள். ஒருநாள் வார்த்தை தடித்துச் சண்டையானது.
அது அடிக்கடி தொடர்ந்து தெருவே கேட்கும் அளவு அதிகமானது. எவ்வளவுதான் ஒரு தன்மானமிக்க மனிதன் பொறுக்கமுடியும்! மனைவியை அறைந்துவிட்டு வெளியே சென்றவன் இரண்டுநாள் சொல்லாமல் கொள்ளாமல் நண்பன் வீட்டில் தங்கிவிட்டான்.
வீங்கிய கன்னங்களோடு, பிள்ளைப்பேறும் இல்லாமல் தனியே இருக்கும் தன்மேல் துளிக்கூட அக்கறையில்லாமல் போய்விட்ட கணவன்கூட வாழ்வதென்பது அவளுக்கு அர்த்தமற்றதாகத் தெரிந்தது.
திருமணமான சில நாட்களிலேயே கட்டினவனை ஆம்பிள்ளையே இல்லை எனக் கோர்ட்டுக்கு இழுத்து விவாகரத்துச் செய்யும் பெண்களுக்கு மத்தியில் தான் இத்தனை வருடம் தன் கணவனோடு குடும்பம் நடத்தியதே பெரிது என நினைத்துக் கொண்டிருந்தாள் அவள். இவ்வளவுக்குப் பிறகும் சேர்ந்திருப்பது எதற்காக என்ற எண்ணத்தோடு குடும்பநலக் கோர்ட்டில் விவாகரத்து தாக்கல் செய்துவிட்டாள்.
குடும்ப வன்கொடுமைச் சட்டம் எல்லாம் பெண்ணுக்குச் சாதகமாகவே இருக்கிறது. கணவனின் பக்கத்தை அது அதிகம் அலசி ஆராய்வதில்லை. ஆண்மட்டும்தான் வன்கொடுமை செய்வான் எனச் சட்டமும் முடிவெடுக்கிறது.
கூடப்பிறந்த அண்ணன் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கலாம்மா என்று கூறியும் கேட்கவில்லை அவள்.கணவன்கூட சமாதானத்துக்கு வந்தும் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கோபமாகத் தாய்வீடு வந்துவிட்டாள் அவள். பெற்றவர்களுக்கும் என்ன சொல்லித் தேற்றுவது என்று திகைப்பு. அவளின் மனப்பொருமல் தாங்காமல் விஷயம் கைமீறி விவாகரத்துவரை வந்துவிட்டது.
மாமனார் மாமியார் வந்து பேசிப்பார்த்தார்கள். வெளிநாடுகளில் இருந்து நாத்திகளும், கொழுந்தன்களும்கூடப் பேசினார்கள். குடும்பநலக் கோர்ட்டிலும் கவுன்சலிங் செய்து பார்த்தார்கள். சுயஇரக்கம் பீறிட்டு, தான் ஏதோவொரு விதத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கருதி எதையும் அவள் ஆவேசம் கேட்கவே விடவில்லை. குதர்க்கமும் கோபமும் கொப்பளிக்க எல்லாரோடும் விதண்டாவாதம் செய்து கொண்டேயிருந்தாள் அவள்.
கன்னங்கள் காய இருளில் அமர்ந்திருந்த சுபத்ராவுக்கு ஏனோ தன்னுடைய திருமண ஆல்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது. தன்னுடைய உடைகள் வைத்திருந்த பெட்டியில் ஆல்பத்தையும் வைத்திருந்தாள் அவள்.
சிவப்பு நிறமும் தங்கக்கலர் முடிச்சும் கொண்ட ஆல்பத்தில் முதல்பக்கத்தில் அவளின் மருதாணி இட்ட கரங்களும் ஜடைபில்லை வைத்து மலர் அலங்காரம் செய்த கூந்தலும், வெட்கத்தால் ஒரு கையால் முகத்தை மூடிய புகைப்படம் இருந்தது. ஆஹா எவ்வளவு குட்டிப் பெண்ணாக அழகாக பொம்மையைப் போல இருக்கிறேன் என்ற ரசனை அவளுக்கு ஏற்பட்டது.
அடுத்த பக்கத்தில் மாப்பிள்ளை அழைப்பு புகைப்படத்தில் அர்ஜுன் அழகாக இளமையாக இருந்தான். எவ்வளவு முடி, என்ன சிரிப்பு, மனசைக் கொள்ளை கொள்ளும் சிரிப்பு! சிங்கப்பல் தெரிய ஆண்மை நிரம்பிய சிரிப்பு. ஆனல் அவன் சிரிப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அப்பா அம்மா போனபின்னும், குழந்தைப் பேறின்மைக்காக பரிசோதனை செய்தபின்னும் காணாமல் போய்விட்டது. புன்னகையை இழக்கும்போது மனிதர்கள் பாதி மரித்துவிடுகிறார்கள்.
திருமணத்தின்போது அவன் அழகுதான். ஆனால் இந்தக் கணத்தில் அவன் பிள்ளை தரவில்லை என்ற வருத்தத்தைவிடத் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை அவன் என்ற வருத்தமே மேலோங்கி இருந்தது அவளுக்கு. அவளைத் திருப்தி செய்யத் தன்னால் முடிந்த எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றான். பிடித்ததெல்லாம் வாங்கிக் கொடுத்தான். ஆனால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சண்டை ஏனோ உற்பத்தியாகி அவர்களின் மகிழ்ச்சியை அழித்தது.
அடுத்தடுத்த பக்கங்களில் இந்தப் பிள்ளைக்கு நல்ல வரனைப் பிடித்துவிட்டோமென்று சந்தோஷமாகச் சிரிக்கும் அம்மாவும் அப்பாவும் அண்ணனும் தெரிந்தார்கள். மறுவீடு அழைக்கும்போது மாமனார் பார்த்த அன்புப்பார்வை புகைப்படத்தில் பதிந்திருந்தது. சடங்குசெய்யும் மாமியாரின் புன்னகை மனதை இம்சைப்படுத்தியது. அவர்களை வெளியேற்றியது தப்போ என்ற எண்ணம் உறுத்தியது.
நாத்திகளும் கொழுந்தன்களும் பரிசுப்பார்சல் ஒன்றைக் கொடுத்துப் பிரிக்கும்படிச் சொல்லி யார் முதலில் பிரிக்கின்றார்கள் என்று பார்த்து அதற்கேற்பக் கூச்சலிட்டுக் கைகொடுத்த புகைப்படம் மனதை நிறைத்தது. அந்தச் சமயத்திலும் மெல்லமாகப் பிரித்துக் கணவன் தனக்கு விட்டுத்தந்து புன்னகைத்தபடி தன்னைப் பார்ப்பது புகைப்படத்தில் தெரிந்தது.
பள்ளிமுடித்துக் கல்லூரி செல்லும் காலகட்டத்தில் கொழுந்தன்கள் அவள் செய்யும் உணவைப் புகழ்ந்து தன் நண்பர்களுக்கும் எடுத்துச்சென்றதும், நாத்திகள் உரிமையோடு தன் புடவைகளைக் கல்லூரிக்கு அணிந்து சென்றதும் அவள் நினைவில் ஆடியது. முதன்முதல் அவள் செய்துபார்க்கும் ஒவ்வொரு ரெசிப்பியையும் ருசித்துப் பாராட்டும் அவர்களின் அன்புமுகங்களும் குரல்களும் மனதை என்னவோ செய்தன. ஹ்ம்ம்... என்ன செய்ய! யார் பாராட்டி என்ன? எனக்கென்று ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவள் மனதில் மீண்டும் வெறுமையைப் படிய வைத்தது.
ஆல்பத்தின் பக்கங்களைப் புரட்டிப் பின்னோக்கி ஆழ்ந்தவள் அதன்பின் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டையும் அசிரத்தையோடு பார்த்தாள். இருவருக்கும் எடுத்த டெஸ்ட் ரிசல்ட்டுகள் அதில் இருந்தன. டாக்டர் தனக்கு விந்தணுக் குறைவினால் குழந்தைப்பேறு கிடைப்பது அரிது என்று சொன்னதாகக் கணவன் சொன்னதைக் கேட்டு அவள் அப்செட் ஆனதைத் தவிர அன்றுவரை அந்த ரிசல்ட்டுகளை முழுமையாகப் படித்ததில்லை. அவனுடைய ரிசல்ட்டை மட்டும் சொன்னவன் தாங்கள் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் அவள் மிக்க கோபத்தில் தன்னுடைய ரிசல்ட்டுகளையும் பார்க்கவில்லை.
அசிரத்தையாக எடுத்துப் படிக்கத் துவங்கியவள் கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சி அடைந்தாள். கணவனுக்கு விந்தணுக்கள் கம்மி என்ற ரிசல்ட்டோடு அவளுக்கும் கர்ப்பப்பையின் வாய் திரும்பி முடிச்சாய் இருப்பதாகவும், நிணநீர்க் கட்டிகள் இருப்பதாகவும், மேலும் கர்ப்பம் தரிக்க விடாமல் ஒருவித அமிலம் சுரந்து உட்புகும் விந்தணுக்களைக் கொன்றுவிடுவதாகவும் அந்த ரிப்போர்ட்டில் இருந்தது.
நீயும்தானேடி காரணம் என்று அன்றே அவன் இதனைப் போட்டு உடைத்திருக்கலாம். தன் மனைவி, தன் சரிபாதி, தான் பட்ட துயரத்தை அவளும் படவேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் சொல்லாமல் குத்திக்காட்டாமல் இருந்திருக்கிறான் என்ற பேருண்மை உறைத்தது.
தான் கொடுமைப் படுத்தியும் தன்னைப் பற்றிய இந்த உண்மைகளைச் சொல்லித் தன்னைப் புண்படுத்தாத அவன் நல்ல உள்ளத்தை எண்ணி அவள் தன்னையறியாமல் கண்ணீர் சொரியத் துவங்கினாள். இது சுயஇரக்கத்தால் அல்லாமல் தன் தவறுக்கான வருத்தமாகவும் தன் இயலாமையைப் புரிந்து கொண்டதாலும் தன் கணவனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்கும் விதத்திலும் இருந்தது. உடனே அவனைப் பார்க்கவும் அவனது ஆதுரமான குரலைக் கேட்கவும் மனம் ஏங்கியது.
ஜன்னல் வழியே கல்யாண முருங்கை மரத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியவளுக்குத் தானும் ஒரு கல்யாண முருங்கையாகக் காய் கனியில்லாமல் வெறுமே பூத்திருப்பதாகப் பட்டது. கல்யாண முருங்கை பிள்ளைப்பேறு அளிக்கும் மருத்துவச்செடி. ஆனால் அதற்குக் காய்ப்பில்லை. கனியில்லை. பூத்து உதிரும் அதற்குப் பிள்ளைப்பேறு கிடையாது. அந்தக் கல்யாண முருங்கையாகத் தானிருக்கும் கோலத்தை எண்ணி கலங்கியவள் ஒருவாறாகத் தூங்கியிருந்தாள்.
காலையில் காகங்கள் கரையும் ஒலியோடு குயிலின் இசையும் எழுப்பியது. காகத்தின் கூட்டில் குயிலும் முட்டையிட்டு வைத்துவிடும் என்றும் ஆனால் காகம் வித்தியாசம் பார்க்காமல் அனைத்து முட்டைகளையும் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் என்றும் பக்கத்துவீட்டு அம்மா பேரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
காகங்கள் பேதம் பார்ப்பதில்லை. மனிதர்களாகிய நாம்தான் பேதம் பார்க்கிறோம். யார் தேவை, யார் தேவையில்லை என்று பிரித்து விடுகிறோம் என்று தோன்றியது அவளுக்கு. வயதான தன் தாய் தகப்பன் தன்னைப் பார்த்துக் கவலையில் ஆழ்ந்திருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது. இவர்களைப் போலத்தானே தன் மாமனாரும் மாமியாரும், அவர்களை ஏன் வெறுத்தோம். அவர்களும் வயதான குழந்தைகள் போலத்தானே. அவர்களைப் பார்ப்பது கஷ்டம் என்று நினைத்து வெறுத்து ஒதுக்கினோமே.
அவர்களை அழைத்துவந்து தங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். அன்று காலை விவாகரத்து வழங்கப்படும் முன் ஒப்புதல் கேட்பார்கள். அப்போது அதை மறுத்துக் கணவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். அந்தப் பேரன்புக்காரன் தன்னை மன்னிப்பான். தங்களுக்கு குழந்தைப் பேறில்லாவிட்டால் என்ன... தங்களைப் பெற்றவர்களைக் குழந்தைகளாகப் பார்த்துக்கொள்ள தனக்கு சம்மதம் என்று சொல்லவேண்டும். பெற்ற குழந்தைகள் இருக்கும்வரை முதியோர் இல்லத்துக்கு அவர்கள் போகக்கூடாது. பின் பிள்ளைகளால் என்ன பயன்!
அவர்களுக்குப் பின்? எத்தனை குழந்தைகள் தாய் தந்தை அன்பு கிடைக்காமல் அநாதையாகத் தவிக்கிறார்கள். தத்தெடுத்துப் படிக்கவைத்து நல்ல வாழ்வளிக்கலாம். நல்ல அம்மாவாக இருக்கலாம். பெற்றால்தான் பிள்ளையா. ஒருவேளை இதைச் செயல்படுத்த முடியாவிட்டால்? அந்தக் கேள்வியோடு தன் கணவனுக்குத் தான் குழந்தையாகவும் தனக்கு அவன் குழந்தையாகவும் இருக்கவேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டாள்.
தன்னை மனிதநலனுக்கு முழுமையாக வழங்கிய கல்யாண முருங்கை வாசலில் ஆதரவாக அசைந்து கொண்டிருந்தது. காற்றில் அதன் சிவப்புப் பூக்கள் சிலிர்த்துக் கொண்டிருந்தன.
தேனம்மைலெக்ஷ்மணன், ஹைதராபாத், இந்தியா |