சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கருதப்பட்ட "கடல்நீரைக் குடிநீராக்கும்" திட்டத்திற்குக் கடந்த வாரம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஒப்பந்தம் ஆனது.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முதன்மை ஏரிகள் கடந்த சில வருடங்களாக போதிய நீரின்றி வறண்டு காணப்படுவதைத் தொடர்ந்து சென்னை நகரில் குடிநீர்ப் பிரச்சனையைச் சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
குறிப்பாக லாரிகளின் மூலம் நெய்வேலி, பாலாறு போன்ற இடங்களிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு சென்னை நகரின் குடிநீர்ப்பிரச்சனையை ஓரளவுக்கு சமாளித்தது. இந்நிலையில் அ.தி.மு.க. அரசு பதவி யேற்றவுடன் 'புதிய வீராணம்' திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வீராணம் நீர் குழாய் மூலம் சென்னை நகருக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்ட தமிழக அரசு அதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவானது.
மத்திய அரசு தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. ஆனால் தமிழக அரசு இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசை அணுகவில்லை என்று பலமுறை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த மீஞ்சூரில் சுமார் ரூ. 500 கோடி மதிப்பீட்டுச் செலவில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை அமைக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ஐ.வி.ஆர்.சி.எல். இன்·ப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் புராஜெக்ட்ஸ் லிமிடெட்' என்கிற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி மீஞ்சூரில் 60 ஏக்கர் நிலத்தை ஹைதராபாத் நிறுவனத் திற்கு குடிநீர் வாரியம் ஒதுக்குகிறது. நாள்தோறும் 10 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திறன் பெற்ற நிலையத்தை அந்நிறுவனம் அங்கு அமைக்க உள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்நிலையம் அமையவிருக்கிறது.
ஆனால் மத்திய அரசு 1000 கோடி ஒதுக்கியிருந்தும் தமிழக அரசு அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தனியாரிடம் இத்திட்டத்தை ஒப்படைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தங்களுக்கு அளித்ததற்காக ஹைதராபாத் நிறுவனம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தது. பதிலுக்குச் சென்னை மக்களுக்கு உதவும் இத்திட்டத்தை நிறை வேற்ற இரு நிறுவனங்களும் காட்டிய ஆர்வத்தை முதல்வர் ஜெயலலிதா பாராட்டியதும் சிறப்பம்சமாகும்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |