எர்தாம்டனின் சுடர்
புத்தகம் - 1 / அத்தியாயம் - 3

பக்கரூ பிழைப்பானா!

பக்கரூவின் உடம்பில் ரத்தத்தைப் பார்த்ததும் அவனை எடுத்துக்கொண்டு வேகமாக அருண் குடும்பத்தினர் வெட் கிளினிக் சென்றடைந்தனர். அங்கே ஒரு நர்ஸ், பக்கரூவைக் கட்டிலில் கடத்தி அவனைச் சோதித்தார். அந்த நர்ஸோடு வந்த பெண் டாக்டருக்கு நடுத்தர வயது; கீதாவைவிடச் சற்றே வயதில் பெரியவர்.

"டாக்டர், டாக்டர்," என்று தொடங்கி கீதா படபடவென்று தான் பார்த்ததைச் சொன்னார்.

கீதா சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட டாக்டர், நர்ஸிடம் ஏதோ கூறினார். நர்ஸ் போனபின் அருணைப் பார்த்து புன்னகைத்தார். அந்த டாக்டரின் கோட் பேட்ஜில் Dr. Emily Woods என்று எழுதியிருந்தது. அருணைப் பார்த்து ஒரு தாயின் பரிவோடு குனிந்து அவன் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினார்.

"உன் பெயர் என்னப்பா?"

"அருண்."

"உன் செல்ல நாய்க்குட்டி பெயர் என்ன?"

"பக்கரூ."

"அழகான பெயர். பக்கரூ உனக்கு ரொம்ப செல்லமா?"

"ஆமாம்."

கீதாவும் ரமேஷும் டாக்டர் உட்ஸிடம் மேலும் சில கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். "டெஸ்ட் ரிசல்ட்ஸ் வரட்டும். கவலைப்படாதீங்க," என்று சொல்லி, அருணைச் செல்லமாக தட்டி, "அருண், பாரு, இன்னும் சில மணியில் பக்கரூ இங்க துள்ளிக் குதிச்சு ஓடிவருவான் உன்கூட விளையாட" என்றார்.

கீதாவிடமும் ரமேஷிடமும் விடை பெற்றுக்கொண்டு உட்ஸ் தனது வேலையைத் தொடர்ந்தார்.

அந்த கிளினிக்கின் வரவேற்பு அறையில் இருந்த ஒரு சோஃஃபாவில் ரமேஷ் அமர்ந்து செய்தித்தாள் படிக்க ஆரம்பித்தார். வெண்டிங் மெஷினில் இருந்து ஒரு கப் காஃபி எடுத்து அதைக் குடித்துக்கொண்டே பேப்பர் படிப்பதைத் தொடர்ந்தார்.

அருண் அங்கே இருந்த குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் விளையாட ஓடினான். அருண் ஒருபுறம், ரமேஷ் இன்னொரு புறம் இருப்பதைப் பார்த்து, கீதா ஒரு ஓரத்தில் அமர்ந்து சிறிது நேரம் அங்கிருந்த பத்திரிகைகளைப் படிக்க முயன்றார். எதிலும் அவர் கவனம் செல்லவில்லை. மனம் பக்கரூவையே சுற்றிச்சுற்றி வந்தது. அருணும் ரமேஷும் ஒருவிதப் பதட்டமும் இன்றி இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார். மெதுவாக நகர்ந்து ரமேஷ் அருகில் சென்று உட்கார்ந்தார். முதலில் ரமேஷ் கீதாவை கவனிக்கவில்லை. மெதுவாக ரமேஷ்மீது சாய்ந்தார் கீதா.

பேப்பரைப் படித்துக் கொண்டே, "கீதா, கவலைப்படாதே, டாக்டர் உட்ஸ் நம்ம ஊரில் ஒரு தலைசிறந்த விலங்குமருத்துவர். பக்கரூ சரி ஆயிருவான்."

"எனக்கு ஒரே பயமா இருக்குங்க. பக்கரூவுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்ம அருணால தாங்கிக்கவே முடியாது. பக்கரூ அருணுக்குத் தம்பி மாதிரி."

ரமேஷ் பரிவோடு கீதாவை அணைத்தார். "இன்னும் கொஞ்சநேரந்தான், வீட்டுக்குப் போயிடலாம்."

சில நிமிடம் கழித்து டாக்டர் வரவேற்பறைக்கு திரும்பி வந்தார். அவர் முகத்தில் புன்னகை இல்லை. ஏதோ தொலைந்தது போல அங்கும் இங்கும் அவரது கண்கள் அலைந்தன. ரமேஷையும் கீதாவையும் பார்த்தவுடன் விறுவிறுவென்று அவர்களை நோக்கி வந்தார். "கீதா, ரமேஷ் கொஞ்சம் உள்ள வரீங்களா? தனியாப் பேசணும்."

டாக்டர் உட்ஸ் சிறிதுகூடப் புன்னகைக்காமல் சொன்னது கீதாவுக்கு ரொம்ப பயமாக இருந்தது. அதற்குள் விளையாடிக்கொண்டிருந்த அருண், டாக்டர் உட்ஸைப் பார்த்தவுடன் ஓடிவந்தான். "அம்மா, அப்பா பக்கரூ எங்கே?" என்று ஆவலோடு கேட்டான். பக்கரூ அங்கு இல்லாததைப் பார்த்து, "டாக்டர் உட்ஸ், எங்கே என்னோட பக்கரூ?" என்று அழ ஆரம்பித்தான்.

"ரமேஷ், ப்ளீஸ் நீங்க வெளியே அருணோடு இருங்க" என்று கூறி, கீதாவை அழைத்துக் கொண்டு பரிசோதனை அறைக்குள் சென்றார் டாக்டர் உட்ஸ். அங்கே கட்டிலில் பக்கரூ படுத்திருந்தான். அருண் வெளியே அப்பாவிடம் அழுது, புரண்டு, முரண்டு பிடிப்பதைப் பார்த்தார் கீதா. அறையின் உள்ளே ஒரே நிசப்தம். பக்கரூவின் எக்ஸ்ரே சுவரிலிருந்த வியூவரில் மாட்டியிருந்தது.

"கீதா" சற்றே தொண்டையைச் செறுமி, டாக்டர் உட்ஸ் தயக்கத்தோடு பேச ஆரம்பித்தார். நெஞ்சு படபடவென்று அடிப்பதை கீதா உணர்ந்தார். "பக்கரூவின் உள்ளுறுப்புகள் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளன. அவன் இனிமேல் பிழைப்பது ரொம்பக் கஷ்டம்" டாக்டர் உட்ஸ் அமைதியாக ஆனால் மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்.

"என்ன? பக்கரூ பிழைக்கமாட்டானா? அவனது உடம்பில் அப்படி என்னதான் பிரச்சனை டாக்டர்?

"எங்களால கண்டுபிடிக்க முடியல. சாரி."

"கேன்சரா?"

"இல்லை."

"அப்புறம் என்ன டாக்டர்?"

"என்னோட இத்தனை வருஷ அனுபவத்தில நான் இப்படி ஒண்ணு பார்த்ததே இல்லை. ஸோ சாரி."

சற்றே தயக்கத்தோடு, "கீதா, பக்கரூ சா…" டாக்டர் உட்ஸ் சொல்லி முடிக்கும் முன்னே கதவை தடால் என்று திறந்துகொண்டு அருண் உள்ளே நுழைந்தான். அவன் நுழைந்தவுடன், அவன் காதில் இரு வார்த்தைகளே ஒலித்தன: "சாகப் போகிறான்."

அருணின் சிறியமூளை உடனடியாக புரிந்துகொண்டது. "அம்மா, பக்கரூ சாகப் போகிறானா? நம்ம பக்கரூ சாகப் போகிறானா?" என்று கத்தி அழுதான்.

ஆறுதலாக அருணின் தலையை வருடியபடி, "கீதா, ரமேஷ் எங்களால இதுக்குமேல ஒண்ணும் செய்யமுடியாது. பக்கரூ இன்னும் சில நாட்கள்தான் உயிரோட இருப்பான். மேற்கொண்டு ஆகவேண்டியதை தயவுசெஞ்சு பாருங்க," என்று சொல்லிவிட்டு டாக்டர் உட்ஸ் வெளியே சென்றார்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்;
படம்: Anh Tran

© TamilOnline.com