காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுவது 'மகளிர் சுய உதவிக் குழு' பெண்களின் பங்கு. இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி அ.தி.மு.க. வினருக்கு மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கை யையும் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றிக்கு முக்கிய காரணமான மகளிர் ஓட்டுகளை வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்கும் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிவகை களையும் இப்போதே தொடங்கிவிட்டது. இதன் விளைவாக அ.தி.மு.க. அரசு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீது கவனம் செலுத்தி அவர்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தற்போது காய்களை நகர்த்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்ற மாதம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநில மாநாடு மற்றும் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி ஒன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, லேத் பட்டறைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சித் திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு வழங்கும் சுழல்நிதி யையும் அதிகரித்தார்.
பெண்களுக்குள்ள திறமையை வெளிக் கொணர்ந்து சமூக அந்தஸ்து தரும் வகையில் கடந்த 92ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு என்ற திட்டத்தை முதன் முதலில் தனது அரசு அறிமுகப்படுத்தியது என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா தற்போது தமிழகத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 152 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன என்கிற புள்ளி விவரத்தை தெரிவித்தார்.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அ.தி.மு.க. அரசு மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. அதனால் அரசியல் ரீதியாக மிக வலுவான அடித் தளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அ.தி.மு.க. வை பாராட்டிய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தொடர்ந்து கூறுகையில், ஆனால் மாநில அரசு முழுக்க முழுக்க தனது இயந்திரம் போல் இதைப் பயன்படுத்தி வருகிறது என்று குற்றமும் சாட்டியுள்ளார். தன் பங்குக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும் மகளிர் குழுக்களை அ.தி.மு.க. அரசு அரசியலாக்குகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கக் கூடியவையாக 'மகளிர் சுய உதவிக் குழுக்கள்' இருந்தாலும் எங்கள் ஆட்சியில் தான் தமிழகத்தில் இத்தகைய குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன என்று அ.தி.மு.க. பக்கத்தினர் கூறுகின்றனர்.
அ.தி.மு.க. பெண்கள் மாநாடு நடத்தியதை தொடர்ந்து தி.மு.க. வும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மையமாக வைத்துப் பெண்களுக்காகப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டது.
அதற்காக நாடாளுமன்றம், சட்டப்பேரவை களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட தி.மு.க செப்டம்பர் 15ம் தேதி அச்சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. மகளிரணிப் பேரணி ஒன்றைச் சென்னையில் நடத்தியது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்து தி.மு.க.வைச் சேர்ந்த மகளிரணியைச் சேர்ந்தவர்கள் திரளாக சென்னைக்கு வந்தனர். சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற இப்பேரணி சென்னை மன்ரோ சிலை முன்பிருந்து ஊர்வலமாகத் துவங்கி சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பத்துப் பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பின்பு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி அவர்கள் மனு அளித்து பெண்களின் சமஉரிமைக்காக போராடத் தி.மு.க. முன்நிற்கிறது என்று கூறியது முக்கியமானது.
மகளிருக்கு சம உரிமையைப் பெற்றிட போராட வேண்டி வந்தால் முதல் போர் வீரனாக, தளபதியாக தி.மு.க. நிற்கும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
பெண்களுக்கான இத்தகைய மாநாடுகள், பேரணிகள் மூலம் பெண்களின் வாக்குகளை தங்களுக்கானதாக மாற்றிக் கொள்ள இரு கழகங்களும் இப்போதே தங்களை தயார் படுத்தி வருகின்றன என்றால் அது மிகையல்ல!
தொகுப்பு: கேடிஸ்ரீ |