நம்பிக்கை... மனிதநேயம்!
அன்புள்ள சிநேகிதியே

சென்னையிலிருந்து எழுதுகிறேன். இந்த இதழில் தனிமனிதன் சம்பந்தப்பட்ட உறவின் பிரச்சனையை ஆராய்ந்து கருத்துச் சொல்லும் நிலையில் நான் இல்லை.

இயற்கையின் சீற்றம்... இரங்கிய இதயங்கள்... இயன்றதைச் செய்த கரங்கள்... எத்தனை எத்தனை!

உடைமைகள் பறிபோகப் பார்த்துக்கொண்டு உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த மனநிலையில், கொந்தளித்து, உடனே உதவிக்கு வரவில்லை என்று பாசக்கயிறுகளை அறுத்துக்கொண்ட சில குடும்பங்களைப் பற்றியும் அறியநேர்ந்தது. எல்லாருமே பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில் யாருக்கு யார் உதவிக்குப் போவது என்று புரிந்துகொள்ள முடியாத ஆத்திரம், ஆவேசம். இது இனம், பணம் வேறுபாடில்லாமல் இயற்கை நமக்களித்த தண்டனையா அல்லது புலம்பலா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், இந்த நிலை நமக்குக் காட்டிய பாடம் - மனிதநேயம் மற்றும் சமூக விழிப்புணர்வு.

நம் மக்கள் ஒரு இயற்கையின் சீற்றத்தைப்பற்றி யோசிக்கட்டும். நல்லவற்றைப்பற்றி மட்டும் நான் கீழே குறிப்பிடுகிறேன்.

பெரிய்ய்ய வீடு. எக்கச்சக்க உடைமைகள். மிகவும் வயதான நோய்வாய்ப்பட்ட தம்பதிகள். கடைசி நிமிடத்தில் எப்படியோ காப்பாற்றப்பட்டார்கள் - மனித நேயம், மனிதநேயம்தான்.

அவர் ஒரு வாரம் கழித்துத் தன் வீட்டைப் பார்க்கப் போனார். எலும்புக் கூடாக இருந்தது அந்த வீடு. வலது கையை அசைத்தார். சொன்னார், "பரவாயில்லை. இதுவும் பகவான் திருவிளையாடல்."

*****


தெருவிலே லாண்டரிக் கடை வைத்திருந்த குடும்பம். தமிழ் புரியும். பேசத்தெரியாது. தெலுங்கு தேசத்திலிருந்து வந்த குடும்பம். உணவுப் பொட்டலங்களும் பணமும் பாத்திரங்களும் கொண்டுவந்து கொடுத்தபோது பாதிதான் எடுத்துக் கொண்டார்கள். மீதியை, "பக்கத்துத் தெருவில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுங்கள்" என்று சொல்லித் திருப்பிக்கொடுத்து விட்டார்கள். - மனிதநேயம்!

தண்ணீர் பெருகிப் பெருகிக் கதறிக் கொண்டிருந்தது ஒரு குடும்பம். அந்த வீட்டுப்பையன் வெளியில் டிரைவராக இருக்கிறான். என்ன முயன்றாலும் அவர்களை அண்டமுடியாத நிலைமை. அம்மாவிற்கு ஆஸ்துமா அதிகமாகிவிட்டது என்று கேட்டதால் மனதிலே பதற்றம். ஆனால், அவனுடைய 250 சதுர அடி வீட்டில் கீழே குடியிருந்த 20 பேரை மூன்று நாளைக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிக் கரையேற்றினார். "இவங்களைத் தவிக்க விடுறதுனால எனக்கென்ன லாபம். அம்மாவை யாராவது காப்பாத்திடுவாங்க." - நம்பிக்கை... மனிதநேயம்.

*****


சேவாசதன் ஆரம்பப்பள்ளியின் ஒரு குழந்தை. "டீச்சர், மத்தவங்க வூட்டவிட எங்க வூட்ல கொஞ்சம்தான் போச்சு. பரவாயில்லை டீச்சர். சாமி, என்னையும், என் தங்கச்சியையும் காப்பாத்திட்டாரு." - என்ன ஒரு பாசிடிவ் அப்ரோச்!

இதுபோல நூற்றுக்கணக்காக பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் போல, நானும் கேள்விப்பட்டும், நேரிலே பார்த்தும், பேசியும் இருக்கிறேன். எல்லாரையும் போலத்தான் என் கண்களும் குளமாகிக் கொண்டிருந்தன. சங்கிலியாக மனிதநேயம் கோத்துக்கொண்டே போகிறது. அங்கங்கே விரிசல்கள் இருக்கத்தான் இருக்கும். ஆனால், ரத்தபந்தம் இல்லாத மனித உறவுகளின் நெருக்கத்தைப் பாடமாக இந்த இழப்பு கற்றுக்கொடுத்திருக்கிறது.

இயற்கை மனிதரை ஒன்றாகப் பாவிக்கிறது. மனிதகுலமும் ஒன்றிணைந்து இயற்கையை அணுகும்பொழுது இரண்டுமே தழைக்க வாய்ப்பாகிறது.

வாழ்த்துக்கள்

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்.

© TamilOnline.com