துஷ்யந்த் ஸ்ரீதர்
இளம் ஹரிகதா உபன்யாசகர்களில் குறிப்பிடத் தகுந்தவர் துஷ்யந்த் ஸ்ரீதர். பிறந்தது பெங்களூருவில்; படித்தது BITS பிலானியில் கெமிகல் எஞ்சினியரிங்; Indian Academy of Sciences அமைப்பின் ஆய்வு நிதிநல்கப் பெற்றவர். TCS நிறுவனத்தில் கன்சல்டன்ட் ஆகப் பணியாற்றி வரும் இவர், பல பிசினஸ் ஸ்கூல்களில் வருகைப் பேராசிரியராக இருக்கிறார். இந்தியாவிலும், உலகநாடுகள் பலவற்றிலும் ஹரிகதை உபன்யாசமும், கார்ப்பரேட் உரைகளும் அளித்து வருகிறார். பல தொலைக்காட்சிகளில் இவரது நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இவரது youtube.com என்ற யூடியூப் சேனல் மிகவும் பிரபலம். தேசிகதயா Desika daya என்ற தனது அறக்கட்டளை மூலம் முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவுதல், அங்கு சென்று உபன்யாசம் செய்தல், அவர்களுடன் ஒருநாளைச் செலவிடுதல் போன்றவற்றைச் செய்துவருகிறார். மார்கழிமாத இசை நிகழ்ச்சிகளுக்காகச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து...

*****


தென்றல்: ஹரிகதை, உபன்யாசத்தில் ஆர்வம் வந்தது எப்படி?
துஷ்யந்த்: பொதுவா இந்த ஃபீல்டுல இருக்கறவங்களுக்கு அவங்க அப்பா, அம்மா, பாட்டி, தாத்தான்னு யாராவது ஹரிகதை பண்றவங்களா இருப்பாங்க. எனக்கு அப்படியல்ல. ஆனா, எங்க எள்ளுத்தாத்தா அந்தக் காலத்துல பண்ணியிருக்கார். நான் உபன்யாசம் பண்ண ஆரம்பிச்சப்புறம்தான் அது எனக்குத் தெரியவந்தது. என் தாத்தா, பாட்டி எல்லாம் உபன்யாசம் கேட்கப் போவாங்க. கூடவே என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. நான் வளரும்போது வேறெதுவும் பொழுதுபோக்கு கிடையாது. இந்த மாதிரிப் போனாத் தான் உண்டு. அப்படி நானும் போவேன். கேட்பேன். இப்படி நிறையப் பேரோடதக் கேட்ருக்கேன். கேசட்டுகள் மூலமாவும் நிறையப் பெரியவங்களோட உபன்யாசம் கேட்டிருக்கேன். அது ஒரு பக்கம்.

என்னோட மூணாவது வகுப்புலே இருந்தே, அம்மா என்னை இலக்கியப் போட்டி, பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்புவாங்க. தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி எல்லாப் பேச்சுப்போட்டிகளுக்கும் என்னைத் தயார் பண்ணி அனுப்புவாங்க. அதுல தலைப்பு சயன்ஸ், சோஷியல் பத்தி இருக்கும். அப்படி மேடைப்பேச்சு ஆர்வம் இருந்தது. நிறைய உபன்யாசம் கேட்டிருக்கேன். இரண்டையும் சேர்த்து, உபன்யாசமாப் பண்ண நினைச்சேன். BITS பிலானில படிச்சபோது, அந்தத் துணைவேந்தர் என்னை ஒரு உபன்யாசம் பண்ணச் சொன்னார். ஒப்புக்கொண்டேன். 'சீதா கல்யாணம்' என்ற தலைப்பில் முதல் உபன்யாசம். தொடர்ந்து சொல்லும்படி அவர் ஊக்குவித்தார். அடுத்து 'பாதுகா பட்டாபிஷேகம்' சொன்னேன். நீ படிச்சு முடிச்சுப் போறதுக்குள்ள ராமாயணம் முழுசையும் சொல்லிடுன்னார். அப்படி ஆரம்பிச்சது, கடந்த நாலஞ்சு வருஷமா ஹரிகதை பண்ணிக் கொண்டிருக்கிறேன்.



கே: முதல் குறுந்தகடு, முதல் தொலைக்காட்சி வாய்ப்பு பற்றிச் சொல்லுங்கள்...
ப: 2009ல் மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே ஆண்டவன் ஆச்ரமம் கோவில் ஒன்று டோம்பிவில்லி என்ற இடத்தில் இருக்கிறது. அவர்களிடம் சென்று, "நான் பிட்ஸ் பிலானி மாணவன். எனக்கு உபன்யாசம் செய்வதற்கு அனுமதி தருவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மைக் கிடையாது. யார் வருவார்கள் என்றும் தெரியாது. நீங்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்து பேசுங்கள்" என்று சொன்னார்கள். அதன்படி எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் பேசினேன். 'தேவித்ரயம்' என்ற தலைப்பில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி பற்றி ஒரு பத்து நிமிடம் தமிழில் பேசினேன். இரண்டு, மூன்று தமிழர்கள் அதைக் கேட்டார்கள். குஜராத்தி ஒருவரும் கேட்டார். அவர் வந்து, "what are you talking about?" என்றார். நானும் அவருக்கு 'பகவானைப்பற்றிப் பேசினேன்' என்று சிம்பிளாக பதில் சொன்னேன். அவர் உடனே "o.k. you should release some CD" என்றார். எனக்கும், மும்பையில் இருக்கிறோம். ஆங்கிலத்தில் ஒரு சி.டி. போட்டால் என்ன என்று தோன்றியது. உடனே 'ஷேத்தியா' என்னும் குஜராத்தி நிறுவனத்தை அணுகிக் கேட்டேன். 36 மணிநேரம் சி.டி. கொடுக்கிறேன் என்றதும் அசந்து போய்விட்டார்கள். 1 மணி நேர ரெகார்டிங் சார்ஜ் 500 ரூபாய். என்னால் அவ்வளவு கொடுக்கமுடியாது என்பது ஒருபுறம். இரண்டாவது, 50, 60 மணி நேரமாவது பேசினால்தான் அது எடிட் ஆகி 36 மணி நேரத்திற்கு வரும். என்ன செய்வதென்று புரியவில்லை.

ஸ்டூடியோ அந்தேரியில் இருந்தது. அவர் ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு மணிக்கு 100 ரூபாய் வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் இரவு 10.00 மணிமுதல் 2.00 மணிவரை ரெகார்டிங். அதன்படி 2009 டிசம்பரிலிருந்து 2010 ஏப்ரல் வரை ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறிலும் இரவு 10 மணிமுதல் 2 மணிவரை ரெகார்டிங் செய்வேன். பிறகு ஸ்டேஷனுக்கு வந்து காலை 4.00 மணிவரை காத்திருந்து முதல் ட்ரெயின் பிடித்து, இரண்டு ட்ரெய்ன் மாறி டோம்பிவில்லிக்குப் போவேன். இப்படி ஆறுமாதம் கஷ்டப்பட்ட பின் எனது முதல் சி.டி. வெளியானது. மகாபாரதம் டி.வி. தொடரில் கிருஷ்ணராக நடித்த நிதிஷ் பரத்வாஜ் அதை ரிலீஸ் செய்தார். அதை ஒருவர் ஸ்டார் விஜய்க்கு அனுப்ப, அதிலிருந்த ஸ்ரீராம் அதைக் கேட்டுவிட்டு தமிழில் பேசமுடியுமா என்று கேட்டார். அப்படித்தான் விஜய் டி.வி. பக்தித் திருவிழாவில் அறிமுகமானேன். இன்றைக்கு 1700 உரைகள் கொடுத்திருக்கிறேன். 300 மணி நேரத்திற்கு சி.டி.க்கள் வெளிவந்திருக்கின்றன. எல்லாம் பெருமாள் கருணைதான்.

கே: நிகழ்ச்சிக்கு எப்படி உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்கள்?
ப: மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நானே சமைத்துச் சாப்பிடுவேன். அப்போது அதிக உபன்யாசம் இருக்காது. இரவு எட்டு மணிக்கு வந்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு பத்து மணிக்கு உட்கார்ந்தால் இரவு 2, 3 மணிவரை தினமும் ராமாயணம், கீதை, பாஷ்யங்கள் என நோட்ஸ் எடுத்தபடி படிப்பேன். சந்தேகம் வந்தால் குருநாதர்களிடம் கேட்பேன். இப்படிப் பல வருடங்கள் என்னைத் தயார்செய்து கொண்டிருக்கிறேன். இப்போதும் அதேபோன்று செய்வதுண்டு. ஆனால் இப்படித் தேடுவதில் பரந்த மனப்பான்மை வேண்டும். "எந்த நல்ல விஷயம், எங்கிருந்து வந்தாலும் எடுத்துக்கொள்" என்கிறது ரிக் வேதம். சைவமோ, வைணவமோ, இஸ்லாமோ எதுவாக இருந்தாலும் நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவது இதைத்தான் படிப்பேன் என்று நம்மைக் குறுக்கிக்கொள்ளக் கூடாது. நான் தமிழன். பிறந்தது தமிழகத்தில். என் தாய்மொழி தமிழ். கற்றது ஆழ்வார் பிரபந்தங்கள். ஆனால், புரந்தரதாசர் கன்னடத்தில் பாடியிருக்கிறார் என்பதற்காக அவரது கீர்த்தனையைப் பாடாமல் இருக்கக்கூடாது. பக்திக்கு மொழி கிடையாது. தாயின் அன்பிற்கு எப்படிப் பேதம் இல்லையோ அப்படித்தான் பக்திக்கும். 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து' என்று பாரதியார் பாடியிருக்கிறார். ஆக, மதபேதம், மொழிபேதம் இரண்டும் கூடாது. அதே நேரத்தில் நான் கற்றுக்கொண்டது வைஷ்ணவம். அது எனக்கு முக்கியம். எல்லா இடத்திலிருந்தும் நல்லதை எடுத்துக் கொண்டாலும், எல்லா ட்ராக்கிலும் என்னால் போகமுடியாது.



கே: ஒரு உபன்யாசம் என்பது எப்படி இருக்க வேண்டும்?
ப: உபன்யாசம் செய்பவர் தாம் சொல்லும் விஷயத்தை முழுமையாக அறிந்தவராக இருக்கவேண்டும். இராவணன் சீதையைக் கடத்திக்கொண்டு போனான் என்பதில் வால்மீகி எப்படிச் சொல்லியிருக்கிறார், கம்பர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாக அறிந்திருந்தால்தான் பார்வையாளர்கள், ராவணன் சீதையின் கையைப் பிடித்து தூக்கிக்கொண்டு போனானா, வீட்டைச் சேர்த்துத் தூக்கிக்கொண்டு போனானா என்று கேட்டால் பதில் சொல்லமுடியும். தயாரிப்பதில் தயக்கமே இருக்கக்கூடாது. ஆழமாகக் கற்றிருக்க வேண்டும். நான் நிறையப் படித்திருக்கிறேன் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.

இரண்டாவது, நாம சொல்ற விஷயம் கேக்கறவங்களுக்குப் போய்ச் சேரணும். உபன்யாசத்தை அப்படியே சொற்பொழிவாகச் செய்யலாம். மற்றொரு வழி இசையோடு சொல்வது. பக்தியையும் கலாசாரத்தையும் கொண்டுசெல்ல இசை ஒரு சக்திவாய்ந்த கருவி. ஒருவயதுக் குழந்தைகூட இசை கேட்டு ஆடுகிறது. 80 வயதுக்காரரும் ஆடுகிறார். உபன்யாசத்தை இசையோடு சொல்லும்போது, கேட்பவர்களுக்கு ஈடுபாடு அதிகமாகிறது. மனதில் பதிகிறது.

பொதுவாக, நாளைக்கு நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு, இன்றைக்கு ராமாயண சி.டி கேட்பது, கேட்டதைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வது சரியாக வராது. அது இந்தத் துறையில் நிலைத்திருக்க உதவாது. குறைந்தது ஒரு ஐந்து வருஷமாவது ராமாயணத்தில் தோய்ந்திருக்க வேண்டும். ராமாயணம் எல்லாம் மக்கள் அறிந்ததுதான். பின் ஏன் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள்? இவர் ஏதாவது புதிதாகச் சொல்வார், அதைக் கேட்கலாம் என்றுதான். வந்தவர்கள் ஏதாவது கேட்டால் நமக்கு விளக்கம் சொல்லத் தெரியவேண்டும். "எனக்கும் அதே டவுட்தான் சுவாமி" என்று சொன்னால், அவர்கள் ஏன் கேட்க வரவேண்டும்?

அடுத்ததாக, உங்களுடையது மனப்பாடம் செய்து பேசியதாக இருக்கக்கூடாது. அடுத்த வரி என்ன, எப்போது ஜோக் சொல்லவேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு பார்த்துப் பேசக்கூடாது. திடீரென பவர் கட் ஆகிவிட்டால் கதி என்னாவது? பேச்சு ஆற்றொழுக்காக இருக்கவேண்டும். அந்த அளவுக்கு ஆழமான பயிற்சி வேண்டும். ராமாயணம் சொல்லும்போது ராமருடன் கூடநடப்பது மாதிரி இருக்கவேண்டும். யாரோ ஒருத்தர் சொன்னதை நான் மனப்பாடம் செய்து ஒப்பித்தால் ஒரு 10 வருஷம் எடுபடலாம். பிறகு மக்களுக்கு அலுத்துப்போகும்.

கே: எந்தெந்த மாதிரியான உபன்யாசங்களை நீங்கள் செய்து வருகிறீர்கள்?
ப: நான் ஹரிகதை உபன்யாசம் தவிர, இளைஞர்களுக்கு உரை வழங்குகிறேன்; 15-17 வயது குழந்தைகளுக்கு power point presentation மூலம் நமது வாழ்க்கை, குறிக்கோள், தன்னம்பிக்கையோடு ஒன்றை எதிர்கொள்வது பற்றியெல்லாம் பேசுகிறேன்; கம்பெனிகளில் உரையாற்றுகிறேன்; ராமாயணத்தில் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று கம்பெனி தலைமை எக்சிகியூடிவ்களிடம் பேசுகிறேன்; இதுதவிர காலக்ஷேபம் செய்கிறேன். காலக்ஷேபம் என்றால் ஹரிகதை இல்லை. காலக்ஷேபம் என்பது ஒரு சிறு இடத்தில் 5, 10 பேர் கொண்ட சிறு குழுவுக்கு உயர்நிலை வேதாந்தத்தை விளக்குவது. அது கதைமாதிரி இருக்காது. அங்கே உடனடியாக சந்தேகம் கேட்கலாம். இடத்துக்கேற்ப ஹிந்தி, கன்னடத்திலும் கொடுக்கிறேன். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஆங்கிலத்தில்.

கே: ஐ.டி. பணியில் இருந்துகொண்டே இம்மாதிரி நிகழ்சிகள் செய்ய எப்படி நேரம் கிடைக்கிறது?
ப: நான் TCS-ல் நாலரை வருடமாக வேலை செய்கிறேன். அங்குள்ள மேலதிகாரிகளுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். நான் என்ன செய்கிறேன் என்பதை அறிந்திருப்பதால் அவர்கள் மிகவும் உதவியாக இருக்கிறார்கள். நான் மும்பைக்குச் செல்லும் போதெல்லாம் ஆஃபீஸ் சென்று காலைமுதல் மாலைவரை வேலை பார்ப்பேன். இல்லையென்றாலும் வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டர்மூலம் வேலை செய்துவிட முடியும். உபன்யாசங்கள் எல்லாமே மாலை 5.00, 6.00 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். காலை உபன்யாசம் மார்கழி மாதத்தில் மட்டும்தான். அதனால் நான் நாள்முழுவதும் அலுவலக வேலையைப் பார்த்துவிட்டு மாலை நிகழ்ச்சிக்குச் செல்லமுடிகிறது. ஒரு விஷயத்தில் தணியாத ஆர்வம் வந்துவிட்டால் நேரம் என்பதெல்லாம் அதில் ஒரு பிரச்சனையாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை பெருமாளின் அனுக்கிரஹத்தால் எல்லாமே நன்றாக நடக்கிறது.

கே: உங்கள் குருநாதர்கள் பற்றிச் சொல்லுங்களேன்!
ப: எனக்கு ஐந்து குருநாதர்கள். அதற்கு முன்னால் என் சிறுவயதில் எனக்கு தேசிகர் சுலோகங்கள், ஆழ்வார் பிரபந்தங்கள், நாராயணீயம், பகவத்கீதை எல்லாம் கற்றுக்கொடுத்த திருமதி இந்திரா ராஜகோபாலன் அவர்களையும் நான் குறிப்பிட வேண்டும். என்னுடைய சம்ஸ்கிருத ஆசிரியரையும் மறக்கமுடியாது. தினமும் என்னை அவர் வீட்டுக்கே கூப்பிட்டு வேதம், பஞ்சசூக்தம், உபநிஷத் எல்லாம் கத்துக் கொடுத்தார்.

அப்புறம் அகோபில மடத்தின் 45வது பட்டமாக இருந்த அழகியசிங்கரிடம் (அவர் அண்மையில் பரமபதம் அடைந்தார்) திருநெடுந்தாண்டகம் கற்றுக்கொண்டேன். அடுத்து சௌமிய நாராயணாச்சாரியாரிடம் ரஹஸ்யத்ரய சாரம், கருணாகர ஆசாரியாரிடம் ஸ்ரீ பாஷ்யம், ஸ்ரீவத்சங்காசாரியாரிடம் கீதா பாஷ்யம் கற்றுக்கொண்டேன். ரிலையன்ஸில் உயரதிகாரியாக இருக்கும் சாரநாத ஆசாரியாரிடம் திருவாய்மொழி கற்றுவருகிறேன்.

கே: உங்களைக் கவர்ந்த ஹரிகதைக் கலைஞர்கள், உபன்யாசகர்கள் யார், யார்?
ப: ஹரிகதை என்றால் எம்பார் விஜயராகவாசாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள் இருவரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். உபன்யாசம் என்றால் என் குருநாதர் கருணாகர ஆசாரியார், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி இருவருமே என்னைக் கவர்ந்தவர்கள். மற்றொருவர் சுந்தர்குமார் அண்ணா. இவர் அனந்தராம தீக்ஷிதரை மானசீக குருவாகக் கொண்டவர். 48 நாட்கள் உபன்யாசம் என்றால் 48 நாளும் எந்தப் புத்தகத்தையும் பார்க்கமாலேயே மகாபாரதத்தின் அத்தனை சுலோகங்களையும் மனப்பாடமாகச் சொல்லி விளக்குவார் என்றால் அவர் எந்த அளவுக்கு அதைக் கற்றிருக்க வேண்டும்? அதுபோல கிருஷ்ண பக்தியில் கிருஷ்ண ப்ரேமி அண்ணா. திருப்பாவையில் திருக்குடந்தை ஆண்டவன். வேதத்திற்கு காஞ்சி மகாப் பெரியவாளின் விளக்கங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். சக கலைஞர்களும் என்னைக் கவர்ந்தவர்கள்தாம்.



கே: வெளிநாடுகளில் உபன்யாசம் செய்த அனுபவங்கள் பற்றி...
ப: இசைக் கச்சேரிகளுக்கு வெளிநாட்டவர்கள் திரளாக வந்து ரசிப்பார்கள். ஆனால் உபன்யாசத்திற்கோ, ஹரிகதைக்கோ ஆப்பிரிக்கரோ, ஐரோப்பியரோ வந்து கேட்டு, ரசித்து நான் பார்த்ததில்லை. அவர்களுக்கு இது புரியாது. அங்கு வசிக்கும் இந்தியர்கள், தமிழர்கள்தான் வந்து கேட்பார்கள். நான் ஆங்கிலத்திலும் பேசுவதால் தெலுங்கர், கன்னடர் என்று பலரும் நிகழ்ச்சிக்கு வருவார்கள்.

இப்போது அமெரிக்காவில் நிகழ்ச்சி செய்கிறேன் என்றால் அதற்கு சின்னக்குழந்தைகள் வந்து உபன்யாசம் கேட்பதோடு நிறையக் கேள்விகளும் கேட்பார்கள், அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்! இந்தியாவில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில்தான் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் அமெரிக்காவிற்கு நான் போனதடவை சென்றபோது இரண்டு மாதம் இருந்தேன். 54 உரைகள் செய்தேன். 15 ஹரிகதை. மீதியெல்லாம் உபன்யாசம். நான் வாரநாளிலும் உபன்யாசம் செய்கிறேன் என்றேன். சிலர், "இங்கே எல்லாம் பிஸியாக இருப்பார்கள். சனி, ஞாயிறில்தான் வருவார்கள்" என்றார்கள். ஆனால், டெட்ராய்ட் சீனிவாசப் பெருமாள் கோயிலில் திங்கள் முதல் வெள்ளிவரை நடந்த உபன்யாசத்துக்கு தினமும் 800 பேருக்குமேல் வந்தார்கள். எங்கிருந்தெல்லாமோ வேலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, காரில் ரொம்ப தூரம் பயணித்து, குளிரைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர்கள் வந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவுக்கு அங்குள்ள மக்கள் பக்தியும், நம் கலை, பண்பாட்டின் மீது ஆர்வமும் கொண்டவர்கள் என்பது புரிந்தது.

கே: மறக்கமுடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: என் குருநாதர் கருணாகர ஆசாரியார், பெரிய சம்ஸ்கிருத விற்பன்னர். அவர் எனது திருப்பாவை விளக்கத்தை ஒருமுறை டி.வி.யில் பார்த்துவிட்டு, "மிகவும் நன்றாக இருக்கிறது" என்று பாராட்டினார். அடிக்கடி மேடைகளில் என் பெயரை அவர் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு என்மீது அவருக்கு அன்பு. அதுபோல TCS C.E.O. என். சந்திரசேகர், என்னை அவரது வீட்டிற்கு அழைத்துப் போய் ராமாயணம் பேசச் சொன்னார். அப்போது எனக்கு 21 வயது. அவருக்கு 50. 13 வாரம் நான் அவர் வீட்டில் ராமாயணம் சொல்லியிருக்கிறேன். அவருக்கு மட்டும். காரணம், அவருக்கு ராமாயணத்தின்மேல் அவ்வளவு ஈடுபாடு. TCS is the largest employer of the country. அந்த நிறுவனத்தின், மூன்றரை லட்சம் பணியாளர்களின் முதல்வர் அவர்.

நல்லி குப்புசாமி செட்டியாருக்கு என்மீது தனி அன்பு. "நிறைய உபன்யாசம் செய்யுங்கள்" என்று எப்போதும் ஊக்குவிப்பார். அதுமாதிரி க்ரேசி மோகன் சார். நான் சுவாமி வேதாந்த தேசிகர் அருளிச்செய்த ரகுவீர கத்யத்தைச் சின்னவயதிலேயே கற்றுக்கொண்டேன். சமஸ்கிருதத்தில் ரொம்பக் கடினமானது. 97 பத்திகள் கொண்டது. அதற்கு நானே ராகம் போட்டு, பத்து ராகங்களில் sankskrit breathless என்று போட்டேன் அதைக் கேட்டுவிட்டு க்ரேசி மோகன் சார் "எட்டாம் அதிசயம் ஒன்று உண்டென்றால் அது உன்னுடைய ரகுவீரகத்யம்" என்று எனக்கு எழுதி அனுப்பினார். அதுபோல வானமாமலை ஜீயர் கலியன் ராமானுஜ ஜீயர். அவர், இப்போது பரமபதம் அடைந்துவிட்டார். அவர் என்னுடைய நரசிம்மாவதாரம் உபன்யாசத்தைக் கேட்டுவிட்டு, "இதுவரை என் வாழ்க்கையில் இந்தமாதிரி உபன்யாசம் கேட்டதில்லை" என்று சொல்லியிருக்கிறார். இப்படி பல குருநாதர்கள் ஆசியும், பெருமாளின் கிருபையும் என்னை வழிநடத்துகிறது.



கே: உங்கள் குடும்பம் பற்றி.
ப: 1986ல் பிறந்தேன். அப்பா ஃபார்மசூடிகல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். அம்மா டீச்சர். எனக்கு சிறுவயது முதலே போட்டிகளில் பங்கேற்கச் செய்து, நான் சொல்லச் சொல்ல நோட்ஸ் எடுத்து மிக உதவிகரமாக இருப்பார். எனக்கு 2014ல் திருமணம் ஆனது. மனைவி சுமித்ரா. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். B.E., MBA, CFA படித்தவர். இவர்கள் எல்லாருடைய அனுசரணையும் இல்லையென்றால் என்னால் இந்த அளவுக்குச் செய்யமுடியாது.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
துஷ்யந்த் : 'பகவத்குண தர்ப்பணம்' என்று ஒரு commentry. Very rich commentry. ரொம்பப் பிரமாதமாக இருக்கும். ஆயிரம் வருடத்திற்கு முன்னால் ராமானுஜரின் சீடர் பராசர பட்டர் எழுதியது. பகவானைப் பற்றிய ஆயிரம் நாமாக்கள் கொண்டது அது. சமஸ்கிருதத்தில் இருப்பது. அந்த ஆயிரம் நாமங்களில் ஒவ்வொரு நாமத்துக்கும் ஒருகதையாக டெவலப் செய்து வருகிறேன். உதாரணமாக 'விஸ்வம்' என்றால் 'எல்லாம் ஒருவனுக்குள் இருக்கின்றது' இரண்டாவது நாமம் விஷ்ணுஹு - அவன் ஒருவன் எல்லாவற்றிலும் இருக்கிறான் - one in all. இதை ஒவ்வொரு உபன்யாசமாகச் சொல்லி வருகிறேன். இதுவரை 400 நாமங்கள் சொல்லியிருக்கிறேன். 2016 ஆகஸ்டுக்குள் ஆயிரம் நாமாக்களையும் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்பது திட்டம்.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம், அன்னமாசார்யா சரிதம் எல்லாம் ஒரு 400 மணி நேரம் சொல்லியிருப்பேன். தற்போது விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மட்டும் 150 மணி நேரம் சொல்லியிருக்கிறேன். நான் சொல்லும் எதுவும் நானாகப் படைத்ததில்லை. முன்பே பெரியவர் ஒருவர் சொல்லி வைத்திருக்கிறார். நான் அதைக் கற்றுக்கொண்டு சொல்கிறேன். இதற்கு காப்பிரைட் கிடையாது. உலகின் எந்த மூலையில் நான் சொன்னதானாலும் அதை வீடியோ எடுத்து யூடியூபில் போட்டு விடுவேன். "நீங்கள் இப்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். இதை வீட்டுக்குப் போய் ஐந்துமுறை கேளுங்கள். அப்போதுதான் உங்களுக்கு அது மனதில் ஏறும். உங்களுக்கு அது ஏறினால் தான் இன்னொருவருக்குச் சொல்வீர்கள்" என்று நான் சொல்லுவேன். என்னுடைய யூ டியூப் சேனலில் 320க்கும் மேல் வீடியோக்கள், 400 மணி நேரத்துக்கு மேல் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேல் அதைப் பார்த்துள்ளனர். உக்ரெய்ன், ரஷ்யா, சவூதி அரேபியாவிலிருந்தெல்லாம் அதைப் பார்த்து வருகின்றனர்.

இன்றைக்கு விஞ்ஞானம் முன்னேறி உள்ளது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாளை துஷ்யந்த் ஸ்ரீதர் இல்லாவிட்டாலும் இந்த வீடியோக்கள் இருக்கும். நிறையப் பேருக்கு பயன் தருவதாக இருக்கும். யாராவது இதைக் கேட்டுக் கற்றுக்கொள்வார்கள், இல்லையா? அது ஒரு காரணம். இரண்டாவது, இந்தக் காலத்துத் தாத்தா, பாட்டிகள், பெற்றோர்கள் "நாங்கள் அந்தக் காலத்துல்ல இப்படியெல்லாம் கேள்வி கேட்கல. இவர்கள் கேட்கிறார்கள்" என்று குழந்தைகளைப் பற்றிச் சொல்கிறார்கள். கேள்வி கேட்பது தப்பா? அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் இருப்பது தப்பா? குழந்தைகளுக்கு நாம்தான் விளக்கமாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

Renovate ancient sannadhi's of vedantha desika என்பது எனது முக்கியமான திட்டம். அவையெல்லாம் 800 வருடம் பழமையானவை. அதற்கு நிறைய நிதி தேவை, பல வருடங்கள் ஆகும். நான் ராமாயணம்பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ராமாயணம் பற்றி நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள். எனது புத்தகம் எல்லாரது சந்தேகங்களுக்கும் விடையளிப்பதாக இருக்கும். உதாரணமாக ராமாயணத்தில் வாலியை ஏன் ராமன் மறைந்து நின்று கொன்றான் என்று இன்றைக்கும் பலர் கேட்கிறார்கள். இதுமாதிரி சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதாக இந்தப் புத்தகம் இருக்கும். எப்படியும் 2000 பக்கங்களாவது வரும். எனக்கு வால்மீகி தெரியாது என்பவர்களோ, கம்பன் தெரியாது என்பவர்களோ இதைப் படித்தால் விடை கிடைக்கும்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


யாத்திரைகள்
ஒரு யாத்திரை போனால், அங்கே என்ன விசேஷம், கோவிலை யார், எப்போது கட்டினார்கள், அதன் சிறப்பு என்ன என்றெல்லாம் அங்கு செல்பவர் அறியவேண்டும். இதற்காக நான் செய்ய ஆரம்பித்ததுதான் 'heritage trip'. முதலில் செய்த சோழநாட்டு திவ்யதேசங்கள் 40; அபிமான ஸ்தலங்கள் 10 கொண்ட யாத்திரைக்கு 70 பேரை கூட்டிப் போனோம். எந்தெந்தக் கோயில்கள் போகவேண்டும், அங்கே என்ன சிறப்பு என்பதை ரிசர்ச் செய்துகொள்வேன். சரித்திரம் குறித்து டாக்டர் சித்ரா மாதவன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒரு சிறு கையேடு தயாரித்துக்கொள்வேன். ஒவ்வொரு கோயிலாகப் போய் விவரமெல்லாம் மைக்கில் சொல்வேன். நோட்ஸ் எடுத்துக்கொள்ளச் சொல்வேன். கூடவே உபன்யாசமும் அதில் உண்டு. இதில் நானும் நிறைய கற்றுக்கொள்கிறேன். இப்படி ஆந்திரா, தெலுங்கானா யாத்திரை, கேரள யாத்திரை, பாண்டிய திவ்ய தேசங்கள், நடுநாட்டு திவ்ய தேசங்கள், வடநாட்டு யாத்திரை என்று இரண்டு வருடங்களில் சுமார் 500 பேருக்குமேல் அழைத்துப் போயிருக்கிறேன்.

இந்த மே முதல்வாரத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு ஒரு பாரம்பரியப் பயணம் ஏற்பாடு செய்திருக்கிறேன். ஏழாவது, எட்டாவது படிக்கும் மாணவர்களை பாண்டியர், சோழர், நாயக்கர்காலக் கோயில்களுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறேன். 6 நாள், 6 கோயில். எல்லாவற்றையும் விளக்குவேன். மறுநாளே நான் அவர்களுக்கு அதில் குவிஸ் வைப்பேன். இன்னொரு நாள் treasure hunt. நமது கலாசாரம், வரலாறு, பண்பாட்டை நாம் அறிந்துகொள்ள வேண்டாமா?
- துஷ்யந்த் ஸ்ரீதர்

*****


அரங்கனின் பாதையில்..
1323முதல் 1371வரை 48 வருஷம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உற்சவரைப் பாதுகாப்பதற்காக வைஷ்ணவ ஆச்சாரியார்கள் சுவாமியைக் காடு, காடாக எடுத்துக்கொண்டு போனார்கள். 'திருவரங்கன் உலா' என்று ஸ்ரீவேணுகோபாலன் அதை நாவலாக எழுதியிருக்கிறார். நான் திருமதி. ஆஷா கிருஷ்ணகுமார் அவர்களோடு சேர்ந்து ஒரு கலை நிறுவனம். நாங்கள் இந்தக் கதையை டான்ஸ் பாலேயாகச் செய்து, 'அரங்கனின் பாதையில்' என்ற தலைப்பில் இரண்டு மணி நேரத்திற்குக் கொடுத்தோம். வரலாறை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இன்றைக்கு நாம் பல விதங்களில் சுகமாக இருக்கிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா? அதைத்தான் இதன்மூலம் செய்கிறோம்.
- துஷ்யந்த் ஸ்ரீதர்

*****


கேட்டுத்தான் பாருங்களேன்!
எனக்கு ஒரு வருத்தம் உண்டு. "பாட்டுக் கச்சேரியில் மதத்துக்கு சம்பந்தமில்லை; எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை; எனக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்கும். அதனால் கச்சேரிக்குப் போவேன். ஆனால் உபன்யாசங்கள் எல்லாம் ரொம்ப ரிலிஜஸ் ஆக இருக்கிறது" என்று சிலர் சொல்கிறார்கள். தியாகராஜர் ஆகட்டும், தீக்ஷிதர் ஆகட்டும் அவர்கள் சங்கீதம் என்ற கருவியைப் பயன்படுத்தியதே பக்திக்காகத்தான், தங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. உபன்யாசத்துக்குப் போனால் வலதுசாரி ஆகிவிடுமோ என்று நினைக்கிறார்கள். புத்தகங்களில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் எங்கள் ஸ்டைலில் சொல்கிறோம், அவ்வளவுதான்.

நான் ஒருமுறை ஒரு திருமணத்திற்குப் போய்விட்டு ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன். ஸ்கூட்டரில் ஒருவர் எதிரே வந்தார். என்னைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் வந்து, "நீங்கள்தானே டி.வி.யில் உபன்யாசம் செய்வது?" என்று கேட்டார். ஆமாம் என்றேன். "உங்களைச் சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம் சார். நான் நிறையக் கேட்பேன். என் மனைவியும் நானும் நீங்கள் சொல்றதைக் கேட்டு நோட்ஸ் எடுப்போம்" என்றார். "ரொம்ப சந்தோஷம் சார்" என்றேன். "இன்னிக்கு என்னோட பர்த்டே" என்றார். நானும் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன்.. "உங்க பேர் என்ன?" என்று கேட்டேன். அவர் "பஷீர் அஹமது" என்று சொன்னார்!

பல கட்டுப்பாடுகளை உடைய ஒரு மதத்தைச் சேர்ந்த சகோதரர்கூட இந்துமத உபன்யாசத்தைக் கேட்கிறபோது, இந்துமதத்தில் உள்ளவர்களுக்கு ஏன் இந்த right, left, center போன்ற வேறுபாடுகள்? என்ன விஷயம் என்று கேட்டுத்தான் பார்க்கலாமே! என் வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் சார்புகளைக் கொஞ்சம் மறந்துவிட்டு, உபன்யாசம் கேளுங்கள். வலதுசாரி என்று மற்றவர்கள் நினைப்பார்களே என்று எண்ணவேண்டாம். விரும்புவதும் விரும்பாததும் உங்கள் இஷ்டம். சற்றே ஆழமாகத்தான் இவற்றைத் தெரிந்துகொள்ளுங்களேன்.

- துஷ்யந்த் ஸ்ரீதர்

© TamilOnline.com